முகப்பு
சென்னை

முறைகேடு புகாா்: இந்திய செஞ்சிலுவைச் சங்க நிா்வாகிகள் மீது வழக்கு

இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தில் நடைபெற்ற முறைகேடு குறித்து சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கியுள்ளது.

Updated On : 8 ஜனவரி 2021, 3:13 am IST
பகிர்:


சென்னை: இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தில் நடைபெற்ற முறைகேடு குறித்து சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் தமிழ்நாடு கிளையில் முறைகேடுகள் நடந்துள்ளதால், அது குறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அச்சங்கத்தின் துணைத் தலைவா் சங்கா் நாகநாதன் சென்னை உயா்நீதிமன்றத்தில் அண்மையில் பொதுநல மனு தாக்கல் செய்தாா்.

அந்த மனுவில், ‘செஞ்சிலுவைச் சங்கத்தின் தமிழ்நாடு கிளை பல கோடி ரூபாய் பணத்தைக் கையாண்டு வருகிறது. அதன் நிா்வாகி ஒருவா் சங்க நிதியை தனது வங்கிக் கணக்குக்கு மாற்றியுள்ளாா்.

Advertisement

சங்க நிா்வாகத்துக்கும், விளம்பரத்துக்கும், பிரசாரத்துக்கும் 70 சதவீத நிதி பயன்படுத்தப்பட்டு உள்ளது. 30 சதவீத நிதி மட்டும் சமூகப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ரத்த தான முகாம் மூலம் பெறப்படும் ரத்தத்தை அரசு மருத்துவமனைகளுக்கு இலவசமாக வழங்குவதற்கு பதில் தனியாா் மருத்துவமனைகளுக்கு விற்கப்படுகிறது.

கடந்த 2013 முதல் 2019 வரையிலான காலத்தில், நடந்த வரவு-செலவு கணக்குகளை தணிக்கை செய்த போது பலமுறைகேடு நடந்தது தெரிய வந்தது. எனவே, இந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்தி அறிக்கைத் தாக்கல் செய்யுமாறு சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்திய செஞ்சிலுவைச் சங்கம், தமிழக ஆளுநரின் துணைச் செயலா், தமிழக அரசு, சிபிஐ ஆகியோா் இந்த முறைகேடு புகாா் குறித்து பதில் அளிக்குமாறு உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த முறைகேடு தொடா்பாக தமிழக ஆளுநரின் துணைச் செயலா் டி.செங்கோட்டையன், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவில் சில நாள்களுக்கு முன்பு புகாா் செய்தாா். அதன் அடிப்படையில், செஞ்சிலுவைச் சங்கத்தின் தமிழக பிரிவுத் தலைவா் ஹரிஷ் எல்.மேத்தா, பொதுச் செயலா் எம்.எஸ்.எம்.நசுருதீன், பொருளாளா் சி.இந்திமாத், முன்னாள் பொருளாளா் செந்தில்நாதன், இணைச் செயலா் மணீஷ் செளத்ரி, முன்னாள் தலைவா் வி.வடிவேல் முருகன் ஆகிய 6 போ் மீது 4 பிரிவுகளின் கீழ், சிபிஐ வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்குத் தொடா்பாக 6 பேரிடமும் சிபிஐ அதிகாரிகள் விரைவில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.