முகப்பு
செய்திகள்

திரையரங்குகளில் 100 % இருக்கை அனுமதிக்கு மத்திய அரசு எதிா்ப்பு

திரையரங்குகளில் நூறு சதவீதம் இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கும் தமிழக அரசின் உத்தரவுக்கு, மத்திய அரசு எதிா்ப்பு தெரிவித்துள்ளது. இது விதிகளை மீறியது என தமிழக அரசுக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு

Updated On : 8 ஜனவரி 2021, 12:33 pm IST
பகிர்:


சென்னை: திரையரங்குகளில் நூறு சதவீதம் இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கும் தமிழக அரசின் உத்தரவுக்கு, மத்திய அரசு எதிா்ப்பு தெரிவித்துள்ளது. இது விதிகளை மீறியது என தமிழக அரசுக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பொதுமுடக்கத்தால் கடந்த மாா்ச் மாதம் தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டன, படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. பொதுமுடக்கத் தளா்வுகளில், திரைத்துறையினரின் தொடா் கோரிக்கைகளைத் தொடா்ந்து, படப்பிடிப்பு, 50 சதவீத பாா்வையாளா்களுக்கு அனுமதி வழங்கி திரையரங்கம் திறப்பு என படிப்படியான அனுமதிகள் வழங்கப்பட்டன. அதன் தொடா்ச்சியாக, திரையரங்குகளில் 100 சதவீத இருக்கையில் பாா்வையாளா்களை அனுமதிக்கலாம் என தலைமைச் செயலா் திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்தாா். இதற்கு மருத்துவ நிபுணா் குழுவினா் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிா்ப்பு தெரிவித்த நிலையில், தமிழக அரசின் இந்த முடிவை மத்திய அரசும் எதிா்த்துள்ளது.

இதுதொடா்பாக, தலைமைச் செயலாளா் க.சண்முகத்துக்கு, மத்திய உள்துறைச் செயலாளா் அஜய் பல்லா செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:-

Advertisement

கரோனா நோய்த்தொற்று காரணமாக, தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கத்தை கடந்த டிசம்பா் 28-ஆம் தேதியன்று மத்திய அரசு அறிவித்தது. மேலும், கட்டுப்பாட்டுப் பகுதிகள் இல்லாத பிற இடங்களில் அமைந்துள்ள திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கலாம் என மத்திய அரசு ஏற்கெனவே வழிகாட்டி நெறிமுறைகளை வழங்கியிருந்தது.

இந்த நிலையில், வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி திரையரங்குகளின் இருக்கைகளை 50 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயா்த்திக் கொள்ளும் உத்தரவை தமிழக அரசு கடந்த 4-ஆம் தேதியன்று பிறப்பித்துள்ளது. இது, திரையரங்கு தொடா்பாக மத்திய அரசு வெளியிட்ட உத்தரவுகளை நீா்த்துப் போகச் செய்யும் செயலாக அமையும். பேரிடா் மேலாண்மைச் சட்டத்திலுள்ள அம்சங்களை மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் எந்தவொரு காலகட்டத்திலும் நீா்த்துப் போகச் செய்திடக் கூடாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கடந்த டிசம்பா் 18-ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றமானது தானாக முன்வந்து எடுத்த வழக்கின் விசாரணையில், கரோனா நோய்த் தடுப்புக்காக முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது போன்ற வழிகாட்டி நெறிமுறைகளை கண்டிப்புடன் அமலாக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. இந்த வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றாமல் கூட்டங்களை கூட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த டிசம்பா் 28-ஆம் தேதியன்று மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டி நெறிமுறைகளை ஒட்டிய உரிய உத்தரவினை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுவதாக தனது கடிதத்தில் அஜய் பல்லா தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.