செய்திகள்

ரஜினியின் இலங்கை பயணம் ரத்து

DIN

இலங்கையில் நடைபெறவுள்ள விழாவில் கலந்து கொள்வதைத் தவிர்ப்பதாகவும், இனிவரும் காலங்களில் தான் இலங்கை செல்வதை அரசியலாக்கி, தம்மை அங்கு போகவிடாமல் செய்துவிடாதீர்கள் என்றும் நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

லைக்கா நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன், இலங்கையில் உள்ள வவுனியாவில் வீடுகளை இழந்து தவிக்கும் ஏழை, எளிய மக்களுக்காக 150 வீடுகளை கட்டியுள்ளார். அவர் கட்டிய வீடுகளை பயனாளிகளுக்கு வழங்குவதற்கான விழா ஏப்ரல் 9 -ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த விழாவில் பங்கேற்க அவர் என்னை அழைத்திருந்தார். அதைத்தொடர்ந்து, ஏப்ரல் 10 -ஆம் தேதி, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, புதுகுடியிருப்பு போன்ற இடங்களை பார்வையிட்டு அங்குள்ள மக்களை சந்திப்பது உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஈழத்தமிழர்களுக்கான வீடுகள் வழங்கும் விழாவில் பங்கேற்கும் காரியமாகவும், தங்களின் இனத்துக்காக, உரிமைக்காக லட்சக்கணக்கில் ரத்தம் சிந்தி மடிந்த, அந்த மாவீரர்கள் நடமாடிய இடங்களைப் பார்க்க வேண்டுமென்ற வெகுநாளைய ஆசையின் காரணமாகவும் இலங்கைக்கு செல்ல வேண்டும் என்று ஆவலாக இருந்தேன்.
அதுமட்டுமன்றி, இலங்கை அதிபர் மைத்திரிபால சிறீசேனாவை சந்திக்க நேரம் கேட்டு, இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படும் தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு சுமுக தீர்வு காண அவரிடம் வேண்டுகோள் விடுக்கவும் எண்ணியிருந்தேன்.
இந்தத் தருணத்தில் நண்பர் தொல். திருமாவளவன் ஊடகங்களின் மூலமாகவும், வைகோ தொலைபேசியிலும், வேல்முருகன் நண்பர் வாயிலாகவும் பல அரசியல் காரணங்களை முன்வைத்து இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளக்கூடாது என்று கேட்டுக் கொண்டார்கள். அவர்கள் சொன்ன காரணங்களை முழுமனதுடன் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும், அவர்களுடைய அன்பு வேண்டுகோளை ஏற்று இந்த விழாவில் கலந்து கொள்வதைத் தவிர்க்கிறேன். இந்த நேரத்தில் நான் ஒன்றை குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். நான் அரசியல்வாதி அல்ல; ஒரு கலைஞன். திருமாவளவன் சொன்னதைப் போல மக்களை மகிழ்விப்பதுதான் என்னுடைய கடமை.
இனிவரும் காலங்களில் இலங்கை சென்று அங்கே வாழும் தமிழ் மக்களை சந்தித்து,புனிதப்போர் நிகழ்ந்த அந்த பூமியை காணும் பாக்கியம் கிடைத்தால், தயவுசெய்து அதை அரசியலாக்கி என்னை அங்கு போகவிடாமல் செய்துவிடாதீர்கள் என்று அன்புடனும், உரிமையுடனும் கேட்டுக் கொள்கிறேன் என்று ரஜினிகாந்த் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

புதுமைப் பெண் திட்டம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,168 மாணவிகள் பயன்

ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அதிகாரிகளுடன் இயக்குநா் ஆலோசனை

போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விரும்பிய பாடம் கிடைக்காத விரக்தியில் மாணவா் தற்கொலை

SCROLL FOR NEXT