முகப்பு
செய்திகள்

'என்னைக் கொல்லும்மா...' எதிர்நீச்சலில் ஆதி குணசேகரனின் கடைசி வசனம்!

மாரிமுத்து இறந்த நாளன்று (நேற்று) ஒளிபரப்பான இந்தக் காட்சி எதிர்நீச்சல் ரசிகர்களை கட்டாயம் கண் கலங்க வைத்திருக்கும்.

Updated On : 9 செப்டம்பர் 2023, 7:38 pm IST
பகிர்:

எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் பாத்திரத்தில் நடித்துவந்த மாரிமுத்து, நேற்றைய காட்சியில் (எபிஸோட்) பேசிய வசனங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 

நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார். அவரின் உடல் இன்று அவரின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பசுமலையில் தகனம் செய்யப்பட்டது. அவரின் மறைவுக்கு சினிமா, சின்னத்திரையை சேர்ந்த பல பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கள் தெரிவித்து வருகின்றனர். 

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் தொடரில் பலதரப்பட்ட மக்களைக் கவர்ந்தவர் மாரிமுத்து. எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் பாத்திரத்தில் நடித்து, 'ஏய், இந்தாமா' என தோரணையோடு பேசி மக்கள் மனதில் பதிந்தவர். 

Advertisement

இந்நிலையில், அவர் இறந்த நாளன்று (செப்.8) ஒளிபரப்பான எதிர்நீச்சல் தொடரின் நேற்றைய காட்சியில், தனது தாயாக நடிக்கும் சத்திய பிரியாவின் கைகளைப் பற்றிக்கொண்டு ''அம்மா, என்னைக் கொல்லும்மா, நான் நிம்மதியா போயி சேர்ந்துடுறேன்மா,  என்னால நிம்மதியா வாழ முடியலம்மா'' என தாயாரின் கைகளை கழுத்தில் வைத்துக்கொண்டு கதறியழுவார். 

அவர் இறந்த நாளான்று ஒளிபரப்பான இந்தக் காட்சி எதிர்நீச்சல் ரசிகர்களை கட்டாயம் கண் கலங்க வைத்திருக்கும். அந்தக் குரலில் நடுக்கம் இருந்ததாகவும், அவருக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு அவர் டப்பிங் பேசிவிட்டுச் சென்ற எபிஸோடாக இது இருக்க வேண்டும் என பல ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

கடந்த சில நாள்களுக்கு முன்பு ஒளிபரப்பான எதிர்நீச்சல் தொடரில், தனக்கு அடிக்கடி நெஞ்சு வலி ஏற்படுவதாக தனது தம்பியிடம் கூறுவதைப்போன்று ஒரு காட்சி வைக்கப்பட்டிருக்கும். அதிலும் தத்ரூபமாக மாரிமுத்து நடித்திருப்பார். அவரின் அந்தக் காட்சிகள் தற்போது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 

இதனிடையே நேற்றைய எபிஸோடில் தாயாரின் கைகளைப் பற்றிக்கொண்டு தன்னை கொன்றுவிடும்படி மாரிமுத்து பேசிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

ஆதி குணசேகரன் பாத்திரத்தில் நடித்துவந்த மாரிமுத்து மறைந்தாலும், இந்த பாத்திரத்தின் வாயிலாக என்றும் அவர் நினைவில் நிற்பார் என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.