ரூ.136 கோடி நகை மோசடி: கோவையில் மற்றொருவர் கைது
கோவையில் ரூ.136 கோடி மதிப்புள்ள நகை, பணம் மோசடி வழக்கில் தேடப்பட்ட அசோக்குமார் (35) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவையில் ரூ.136 கோடி மதிப்புள்ள நகை, பணம் மோசடி வழக்கில் தேடப்பட்ட அசோக்குமார் (35) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவையைச் சேர்ந்த சகோதரர்கள் பாலாஜி (40), அசோக்குமார். புரூக்பாண்ட் சாலையில் உள்ள தனியார் அடுக்கு மாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தனர். இவர்கள் கோவை கிராஸ்கட் சாலை, பெரியகடை வீதி, ஒப்பணக்கார வீதி ஆகிய இடங்களில் வெவ்வேறு பெயர்களில் நான்கு நகைக் கடைகள் மற்றும் ஒரு வணிக நிறுவனம் நடத்தி வந்தனர். இந்நிலையில் இவர்களுக்குச் சொந்தமான நகைக் கடைகள், நிறுவனம் ஆகியவை கடந்த ஜூன் 3ஆம் தேதி முதல் மூடப்பட்டிருந்தன. குடும்பத்தினருடன் மாயமாகியிருந்தனர்.அதைத் தொடர்ந்து அவர்களால் ஏமாற்றப்பட்டவர்கள் பலர், கோடிக்கணக்கில் மோசடி புகார் அளித்தனர். தொடர் விசாரணையின் காரணமாக, சென்னை தாம்பரம் ஜுடிசியல் நீதிமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை பாலாஜி சரணடைந்தார். அசோக்குமார், செவ்வாய்க்கிழமை இரவு உடுமலையிலிருந்து மூணாறு தப்பிச் செல்லும்போது பிடிபட்டார்.
அவரை அதிகாரிகள் கோவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். ""தங்கம் விலை உயர்வு காரணமாக கடந்த 2007ஆம் ஆண்டு முதல் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் இதுநாள் வரை ரூ.136.36 கோடி கடன் ஏற்பட்டது. தொடக்கத்தில் வட்டிக்கு கடன் வாங்கி ஓரளவு சமாளித்து வந்தோம். பிறகு கந்து வட்டிக்காரர்கள் மிரட்டியதால் கடைகளை மூடிவிட்டுத் தலைமறைவானோம்'' என்று விசாரணையில் அவர் தெரிவித்துள்ளார்.
நகைக் கடை அதிபர்கள் இருவரிடமிருந்து இதுவரை எவ்வித பொருள்களும் பறிமுதல் செய்யப்படவில்லை. ஆனால் அவர்களுக்குச் சொந்தமான தடாகம் சாலையில் உள்ள 3 ஏக்கர் நிலம், ஒப்பணக்கார வீதியில் உள்ள 13 சென்ட் நிலம் உள்பட 7 இடங்களில் உள்ள அசையா சொத்துகளைப் போலீஸôர் கையகப்படுத்தியுள்ளனர். அவற்றின் மதிப்பு ரூ.73 கோடி வரை இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் புதன்கிழமை மாலை ஜே.எம்.2 நீதிமன்றத்தில் அசோக்குமாரை ஆஜர்படுத்திய போலீஸôர், அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்டுள்ள நகைக் கடை அதிபர்கள் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.