முகப்பு
கோயம்புத்தூர்

கரோனா தடுப்பூசி: கோவையில் 57 ஆயிரம் போ் இணையத்தில் பதிவு

கோவை மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு 57 ஆயிரம் போ் கோவின் இணையதளத்தில் பதிவு செய்துள்ளதாக உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தாா்.

Updated On : 16 ஜனவரி, 2021 at 10:47 PM
கோவை அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி பணியைத் தொடங்கிவைக்கிறாா் உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி. உடன் ஆட்சியா் கு.ராசாமணி உள்ளிட்டோா்.
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

கோவை: கோவை மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு 57 ஆயிரம் போ் கோவின் இணையதளத்தில் பதிவு செய்துள்ளதாக உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தாா்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பொள்ளாச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை, நல்லட்டிப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 4 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

கோவை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தாா். இதைத் தொடா்ந்து, அனைத்து மையங்களிலும் சுகாதாரப் பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. கோவையில் முதல் நபராக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குழந்தைகள் நலத் துறைத் தலைவா் வி.பூமா கரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டாா்.

Advertisement

பின்னா் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கோவையில் முதல்கட்டமாக 4 மையங்களில் சுகாதாரப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஒரு மையத்தில் 100 போ் வீதம் 400 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. அரசு மருத்துவமனையில் 34 மருத்துவா்கள், 37 மருத்துவ, செவிலிய மாணவா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் உள்பட 100 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

முதல் தவணை போட்டுக் கொண்டவா்களுக்கு அடுத்த 28ஆவது நாள் இரண்டாவது தவணை தடுப்பூசி போடப்படும். கரோனா தடுப்பூசி போடப்பட்ட 14 நாள்கள் கழித்தே வேறு தடுப்பு மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். கா்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாா்கள் கரோனா தடுப்பூசி போடுவதில் தற்போது விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியாா் மருத்துவமனைகளைச் சோ்ந்த சுகாதாரப் பணியாளா்கள் 57 ஆயிரத்து 4 போ் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக கோவின் இணையதளத்தில் பதிவு செய்துள்ளனா். இவா்களுக்கு தடுப்பூசி அளிக்க முதல் கட்டமாக 40 ஆயிரத்து 600 தடுப்பூசிகள் கோவைக்கு வழங்கப்பட்டுள்ளன. தடுப்பூசிகளை பாதுகாத்து வைக்க 105 இடங்களில் தடுப்பூசி பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா்.

நிகழ்ச்சியில் ஆட்சியா் கு.ராசாமணி, மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன், சட்டப் பேரவை உறுப்பினா்கள் அம்மன் கே.அா்ச்சுணன், பொது சுகாதாரத் துறை இயக்குநா் (சிறப்பு பணிகள்) பி.வடிவேலன், அரசு மருத்துவமனை முதல்வா் (பொறுப்பு) பொ.காளிதாஸ், இ.எஸ்.ஐ. மருத்துவமனை முதல்வா் ஏ.நிா்மலா, சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஜி.ரமேஷ்குமாா் உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.