உயர்கல்வி தேர்வு! விழிப்புணர்வின்மை, தெளிவின்மை!
உயர்கல்வி தேர்வு செய்வதில் மாணவர்களுக்கு போதிய விழிப்புணர்வின்மை, தெளிவின்மை காணப்படுவது பற்றி..
உயர்கல்வியை நாம் சிறப்பாக படித்தால் நிச்சயம் வாழ்வில் உயர முடியும். ஆனால், அது குறித்து விழிப்புணர்வு குறைவும், போதிய தெளிவுகள் கிடைக்காததுமே சவாலாகின்றன.
விழிப்புணர்வு குறைவு...
உயர்கல்வி முடித்தவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் இருக்கும் சூழலில் கிராமப்புறங்களில் இருக்கும் பெரும்பாலான மாணவர்களிடம் இதுகுறித்த விழிப்புணர்வு இன்றும் குறைவாக இருக்கிறது. இத்தகைய சூழலில் பிளஸ் 2 படிப்பை நிறைவு செய்யும் மாணவர்கள் தங்களது மேற்படிப்புகளை எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும், அவர்களுக்கு பெற்றோர் எப்படி வழிகாட்ட வேண்டும் என்பது குறித்து சென்னை கல்வியாளரும், சென்னை எம்.ஓ.பி. வைணவக் கல்லூரியின் முன்னாள் முதல்வருமான லலிதா பாலகிருஷ்ணன் கூறியதாவது:
Advertisement
Advertisement
பிளஸ் 2 வகுப்புக்கு பிறகு எதைப் படிக்க வேண்டும் என்பது குறித்த புரிதல் மாணவர்களிடம் கடந்த 15 ஆண்டுகளுக்கும் முன்பிருந்தே இருக்கிறது என்றாலும், கிராமப்புற மாணவர்கள் குறிப்பாக அரசு, அரசு உதவி பெறும் மாணவர்கள்அது குறித்து முழுமையான தகவல்களை அறிந்திருக்கவில்லை என்பதே உண்மை. அடுத்து வரும் ஆண்டுகளில் இந்த நிலை நிச்சயம் மாறும். அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு 'நான் முதல்வன்' போன்ற திட்டங்கள் மூலம் முன்னெடுத்து வருகிறது.
பட்டயப் படிப்புகளில்...
இன்றைய சூழலில் தங்கள் மகன், மகள் ஏதாவது ஒரு பட்டப் படிப்பை நிறைவு செய்தாலே போதுமானது என நினைக்கின்றனர். அதேவேளையில் டிஎம்இ உள்ளிட்ட பட்டயப் படிப்புகளில் தங்களது பிள்ளைச் சேர்க்க சற்று தயங்குகின்றனர். பட்டம், பட்டயம் என எதுவாக இருந்தாலும் அதில் மாணவர்களின் சுயவிருப்பம் என்பது மிகவும் முக்கியம். உள்ளகப் பயிற்சியுடன் கூடிய பட்டயப் படிப்புகளை முடித்தவர்களுக்கு இன்று உலகெங்கும் வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.
பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் பொதுத் தேர்வுக்கு முன்பாகவே முக்கிய கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்பது. பொதுவாக மருத்துவம், பொறியியல் என்று வேறுபாடு பார்க்காமல் அனைத்து நுழைவுத் தேர்வுக்கும் விண்ணப்பிப்பதே பாதுகாப்பு. ஒன்று கைநழுவினாலும் இன்னொன்று கைகொடுக்கும்.
தரவரிசை, உள்கட்டமைப்பு
மாணவர்கள் பட்டப் படிப்பை தேர்வு செய்வதில் குழப்பம் இருக்கக் கூடாது. கல்லூரிகளின் கவர்ச்சிகரமான விளம்பரம், பிரம்மாண்ட உள்கட்டமைப்பை மட்டும் கருத்தில் கொள்ளாமல் கல்லூரியில் சிறந்த பேராசிரியர்கள் இருக்கிறார்களா? தரமான கல்வி கற்பிக்கப்படுகிறதா? வெறும் ஏட்டுக் கல்வியாக மட்டும் இல்லாமல் வெளியுலகில் நிகழும் துறைகளின் வளர்ச்சியைக் கவனித்து அதற்கேற்ப மேம்படுத்தப்பட்ட கல்வியை அளிக்கிறார்களா? வேலைவாய்ப்புக்கு அளிக்கும் முக்கியத் துவம் இவற்றை எல்லாம் நன்கு விசாரிக்க வேண்டும்.
கல்லூரிகளைத் தேர்வு செய்வதில் அவற்றின் தர வரிசைப் பட்டியல் பெரிதும் உதவும். கல்லூரியின் தேர்ச்சி விகிதம், ஆய்வு வசதிகள், பயிற்சி வசதிகள், வளாக நேர்காணலுக்கு வரும் நிறுவனங்களின் தரம் மற்றும் எண்ணிக்கை, நேர்காணலில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு உண்மையிலேயே வேலை கிடைத்ததா? இவற்றை எல்லாம் ஆராய்ந்து எதைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்யலாம். பட்டப் படிப்பில் சேருவதற்கு இவ்வளவு மெனக்கெட வேண்டுமா என்று கேட்டால், ஆம், மெனக்கெடத்தான் வேண்டும். ஏனெனில் இதுவே மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.
மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளை மட்டும் உயர்வாக நினைத்து வந்த நிலைமாறி, நாம் ஆச்சரியப்படும் வகையில் இன்று பல்வேறு புதிய படிப்புகள் மாணவர்களின் கனவாக மாறி வருகின்றது. குறிப்பாக அனிமேஷன், ரோபோடிக் சயின்ஸ், பெர்ஃப்யூஷன் டெக்னாலஜி என அடுக்கிக்கொண்டே போகலாம். புதுமையை விரும்பும் மாணவர்களுக்கென பல்வேறு சவால்கள் நிறைந்த படிப்புகளும் காத்திருக்கின்றன.
Higher Educations! Lack of Awareness and Clarity!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.