உயர்கல்வி தேர்வு! மதிப்பெண் மட்டுமே முக்கியமல்ல!
உயர்கல்வி தேர்வுக்கு மதிப்பெண் மட்டுமே முக்கியமல்ல, எதிர்காலத்துக்கு ஏற்றதா என்பதை உறுதி செய்வதும் அவசியம் என்பது பற்றி..
உயர்கல்வி என்று வரும்போது மாணவர்கள் பலரும் அதிக மதிப்பெண் எடுத்தால்தான் சாத்தியம் என கருதுகிறார்கள். அதனால், உயர்வியை நோக்கிய பாதையில் தவறான முடிவுகளை எடுக்கும் நிலை உருவாகிறது.
ஆனால், உரிய உயர்கல்வியை தேர்வு செய்ய தேடல் மட்டுமே அவசியம்.
அதிக மதிப்பெண்..
Advertisement
Advertisement
மதிப்பெண் அதிகம் எடுத்தவர்களுக்கு மட்டுமே உயர்கல்வி, அவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு என்ற காலம் மலையேறிவிட்டது. அனைத்து பிரிவு மாணவர்களும் தங்களுக்கு உரிய உயர்கல்வியை தேர்வு செய்யவும், அந்த துறையிலேயே சாதிக்கும் வாய்ப்பு விரிந்து கிடக்கிறது.
மதிப்பெண் குறைந்தால் என்ன செய்வது, சிறந்த கல்லூரியை எப்படி தேர்வு செய்வது, கல்விக்கடனை பெறுவதில் உள்ள சிக்கல்கள், படிக்கும் போதே வேலைவாய்ப்புக்கான திறன்களை வளர்த்துக்கொள்வது எப்படி என மாணவர்களை சுற்றியுள்ள அடுக்கடுக்கான கேள்விகள் ஒருபுறம், படிக்கும் படிப்புக்கு வேலை கிடைக்குமா, தலை சிறந்த கல்லூரிகளில் இடம் கிடைக்குமா என சிக்கலான கட்டத்தில் இருக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் பதற்றப்பட வேண்டாம். வேலைவாய்ப்பு என்பதையும் தாண்டி தங்களின் எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கும் சாமர்த்தியம் மாணவர்களுக்கு உண்டு. அவர்கள் விரும்பும் துறையை சிறந்த கல்லூரியில் படிக்கவைக்க பெற்றோர்கள் துணை நிற்க வேண்டும்.
எதிர்காலத்துக்கு உகந்ததா?
ஒரு மாணவர் எந்த மாதிரியான படிப்பைத் தேர்வு செய்தாலும் சரி, உயர்கல்வியைத் தொடங்கும் முன்பாக சில கேள்விகளை கேட்டுக் கொள்ள வேண்டும்.
நாம் தேர்வு செய்யும் படிப்புக்கு அடுத்த மூன்றாண்டுகளுக்குப் பிறகு (2028) வேலைவாய்ப்பு எப்படி இருக்கும்?, சம்பந்தப்பட்ட துறைக்கு எத்தனை பேர் போட்டியில் இருப்பார்கள்?, படிக்கும்போது, பாடத்திட்டம் தாண்டி என்ன திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்?, எந்த மாதிரியான நிறுவனங்களில் என்ன ஊதியத்துக்கு வேலை கிடைக்கும்? வேலைவாய்ப்பு சந்தையில் எத்தனை நிறுவனங்கள் இருக்கின்றன? ஆகிய கேள்விகளைக் கேட்டுக்கொண்டு நமக்கான துறையைத் தேர்வு செய்ய வேண்டும்.
இந்த நேரத்தில் ஒருவர் முழுக்க முழுக்க ஆர்வத்தின் அடிப்படையில், தனது படிப்பைத் தேர்வு செய்யக்கூடாதா என்ற கேள்வி எழும். அது தவறில்லை. ஒருவருக்கு எந்தத் துறையில் ஆர்வம் இருக்கிறதோ, அதன் எதிர்காலம், சான்றிதழ் படிப்புகள், திறன் வளர்ப்பு ஆகியவற்றை அறிந்துகொண்டால் சாதிக்கலாம். எல்லா துறைகளுக்கும் எதிர்காலம் இருக்கிறது. பாடத்திட்டத்தைத் தாண்டி ஒருவர் என்ன படிக்கிறார்களோ, அதை அடிப்படையாக வைத்தே ஒரு மாணவரின் ஊதியம், எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது.
இன்றைய சூழலில் எங்கும் ஏஐ ; எதிலும் ஏஐ என்ற நிலைதான் நிலவுகிறது. அதற்காக ஏஐ படிக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஏஐ டூல்களைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். 2000களில் கணினி பயன்படுத்தக் கற்றுக்கொள்ளுமாறு கூறினோம். இப்போது அந்த இடத்தை, ஏஐ நிரப்பி இருக்கிறது. இவற்றை இணையத்திலும் கற்றுக் கொள்ளலாம். மேற்படிப்பில் எந்தத் துறையைத் தேர்வு செய்தாலும் துறைசார்ந்த திறன்களை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார் லலிதா பாலகிருஷ்ணன்.
Higher Education Admissions! Marks Are Not the Only Thing That Matters!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.