FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தலையங்கம்

உயர்கல்விக்கும் முன்னுரிமை

முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான ஆட்சியில் லஞ்சத்தை ஒழிப்பதற்கு எப்படி முன்னுரிமை கொடுக்கப்படுகிறதோ, லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்துடன் தொடர்புடையது என்பதால் அதேபோன்ற முன்னுரிமை இதற்கும் அளிக்கப்பட வேண்டும்.

Updated On : 17 ஜூலை 2026, 5:52 am IST
மாதிரிப் படம்
பகிர்:

உயர்கல்வி தொடர்பாக அகில இந்திய அளவில் 2023-24-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் விவரங்கள் சில நாள்களுக்கு முன்பு வெளியிடப்பட்டன. அதில் உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் 50 சதவீதத்தை தமிழகம் தாண்டியுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய நிலவரம் இது. 18 முதல் 23 வயதுடைய 68.4 லட்சம் பேரில் 35.8 லட்சம் பேர் (52.3 சதவீதம்) உயர்கல்வியில் இணைந்துள்ளனர். இது இதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 3.2 சதவீதம் அதிகம் ஆகும்.

தில்லி ஒன்றியப் பிரதேசம் 53 சதவீதத்துடன் முன்னணியில் உள்ளது. நமக்கு அடுத்தபடியாக, உத்தரகண்ட் (48.5 சதவீதம்), தெலங்கானா (46.6), ஹிமாசல பிரதேசம் (46.4), சிக்கிம் (46.4) ஆகியவை உள்ளன.

தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாகவே அடுத்தடுத்து அமைந்த அரசுகளின் பல்வேறு முயற்சிகள், அரசுப் பள்ளிகளில் படித்து கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 உதவித் தொகை வழங்கும் புதுமைப் பெண் போன்ற பல்வேறு திட்டங்களின் காரணமாகவே இது சாத்தியமாகி உள்ளது.

Advertisement

Advertisement

சென்னையில் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன், நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 50 சதவீதம் தமிழகத்தில்தான் உள்ளன. ஆனால், இங்கு படிக்கும் மாணவர்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்குத் தகுந்த வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை. பாடத்திட்டத்தில் காலத்துக்கு ஏற்ப மாற்றங்களை செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பதாகக் கூறியிருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

தமிழகத்தில் 181 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 1,26,959 மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ளன. கடந்த ஜூலை 11-ஆம் தேதி நிலவரப்படி, இவற்றில் 83,276 மாணவர்கள் (65.59 சதவீதம்) மட்டுமே சேர்ந்துள்ளனர். மாணவர் சேர்க்கை நிறைவுறும்போது அதிகபட்சம் மேலும் 5 சதவீதம் நிரம்பலாம், அவ்வளவே. அடிப்படை கட்டமைப்பு வசதிகள், பேராசிரியர்கள் பற்றாக்குறை, நவீன ஆய்வகங்கள் இல்லாதது, தனியார் கல்லூரிகளில் அறிமுகப்படுத்தப்படும் புதுமையான பாடத்திட்டங்கள் இல்லாமல் இருப்பது போன்றவை காரணமாக மாணவர்கள் தனியார் கல்லூரிகளையே அதிகம் நாடுகின்றனர் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

துணைவேந்தர் நியமனம் தொடர்பாக ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே மோதல் தொடர்வதால், தமிழகத்தில் மொத்தம் உள்ள 22 அரசுப் பல்கலைக்கழகங்களில் 16-இல் துணைவேந்தர்கள் இல்லை. 2027 ஜனவரியில் 20 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லாத நிலை ஏற்படும். துணைவேந்தர் இல்லாததால் பேராசிரியர் நியமனம் செய்ய முடியாதது, பதவி உயர்வு வழங்கப்படாமல் இருப்பது,

ஆய்வுக்கு ஒப்புதல் கொடுக்க முடியாதது, நிதி சார்ந்த முடிவுகள் எடுக்க முடியாதது போன்றவற்றால் மாணவர்களின் எதிர்காலம் கடுமையாக பாதிக்கப்படும்.

மாநில அரசால் நடத்தப்படும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமான பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. உதாரணத்துக்கு சென்னை பல்கலைக்கழகத்தில் 67.9 சதவீதம் உதவிப் பேராசிரியர் பணியிடங்களும், 85 சதவீதம் இணைப் பேராசிரியர் பணியிடங்களும், 43 சதவீதம் பேராசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நிலைமை மிக மோசமாக உள்ளது. பேராசிரியர் பணியிடங்களில் 50 பேர் இருக்க வேண்டிய இடத்தில் இரண்டு பேர் மட்டுமே உள்ளனர். இணைப் பேராசிரியர் பணியிடங்களில் 86.1 சதவீதம் காலியாக உள்ளது. புகழ்பெற்ற அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணியிடங்கள் 62.6 சதவீதமும், இணைப் பேராசிரியர் பணியிடங்கள் 67.5 சதவீதமும் காலியாக உள்ளன.

கொள்கை முடிவுகள் எடுப்பதில் தாமதம், தொழில் துறையின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற பாடத்திட்டம் இல்லாதது போன்றவற்றால் தமிழக கல்லூரிகளில் படித்துவிட்டு வெளியே வரும் மாணவர்களில் சராசரியாக 30 சதவீதம் பேர் மட்டுமே தகுந்த வேலைவாய்ப்பை பெறுகின்றனர். தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததாலும் பல்வேறு சவால்களை நாம் எதிர்கொள்கிறோம்.

பல்கலைக்கழகம், கல்லூரிகளை ஆய்வுசெய்து தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார குழு (என்ஏஏசி) அளிக்கும் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை வெளியிடப்படுகிறது. தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததன் காரணமாக மொத்தம் உள்ள 1,000 மதிப்பெண்களில் 100 மதிப்பெண்களை இழப்பதால் தரவரிசையில் தமிழக கல்லூரிகள் பின்தங்க நேரிடும். இது மேற்படிப்பில் சேரும் மாணவர்களுக்கு சிக்கல்களை உண்டாக்கும். ஆராய்ச்சிகளுக்கான நிதி உதவிகளையும் மாணவர்கள் பெறமுடியாது என்று கல்வியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

துணைவேந்தர்கள் நியமனம், அதைத் தொடர்ந்து பேராசிரியர்கள் நியமனம், கல்லூரிகளில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துதல், பாடத்திட்டங்களைக் காலத்துக்கு ஏற்ப மாற்றி அமைத்தல் போன்றவற்றின் மூலம் உயர்கல்வி மாணவர் சேர்க்கை சாதனையை அர்த்தமுள்ளதாக ஆக்கமுடியும். முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான ஆட்சியில் லஞ்சத்தை ஒழிப்பதற்கு எப்படி முன்னுரிமை கொடுக்கப்படுகிறதோ, லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்துடன் தொடர்புடையது என்பதால் அதேபோன்ற முன்னுரிமை இதற்கும் அளிக்கப்பட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments