பல்வேறு இடங்களில் பா.ம.க.-வினர் மறியல்
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கடலூர், சிதம்பரம், நெய்வேலி, பண்ருட்டி, விருத்தாசலத்தில் அக்கட்சியினர்
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கடலூர், சிதம்பரம், நெய்வேலி, பண்ருட்டி, விருத்தாசலத்தில் அக்கட்சியினர் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியினர் பலர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர். போலீஸாரின் இந்த நடவடிக்கையைக் கண்டித்தும், கைதானவர்களை விடுவிக்கக் கோரியும் கடலூர் உழவர் சந்தை முன் பா.ம.க.-வினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநில துணை பொதுச்செயலர் பழ.தாமரைக்கண்ணன் தலைமை வகித்தார். பின்னர் கடலூர்- சிதம்பரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 50 பேரை போலீஸார் கைது செய்தனர்.
Advertisement
Advertisement
சிதம்பரம்:
சிதம்பரம் மேலரத வீதியில் மாவட்டச் செயலாளர் வேணு.புவனேஸ்வரன் தலைமையில் நகரச் செயலாளர் முத்துகுமார் உள்பட 25 பேர் மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களை நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் கைது செய்தார். பின்னர் தெற்குரத வீதியில் மாவட்ட துணைச் செயலாளர் சந்தானக்குமார் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 8 பேரை நகர போலீஸார் கைது செய்தனர்.
பண்ருட்டி:
இதேபோல் பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்ட பா.ம.க.-வினர் 25 பேர் கைது செய்யப்பட்டனர்.
பண்ருட்டி நகர செயலர் தி.நந்தகோபால் தலைமையில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட மாவட்ட இளைஞரணி தலைவர் தி.கோவிந்தசாமி, வன்னிய சங்கச் செயலர்கள் ஆனந்த், கார்த்தி, ஒன்றிய அமைப்புச் செயலர் ராஜதுரை, இளைஞரணி செயலர் கஜேந்திரன் உள்ளிட்ட 25 பேரை போலீஸார் கைது செய்தனர்.
விருத்தாசலம்:
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தலைவர் கோ.க.மணி, வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு ஆகியோர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, விருத்தாசலம் பாலக்கரை திலீபன் சதுக்கத்தில் பா.ம.க. மாநில சொத்து பாதுகாப்புக்குழுத் தலைவர் கோவிந்தசாமி தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். இதில், மருத்துவர் கோவிந்தசாமி உள்ளிட்ட 35 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திட்டக்குடி: திட்டக்குடியில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.-வினர், மாவட்டத் தலைவர் ஆடிபாதம் தலைமையில் மறியலில் ஈடுபட முயன்றனர். போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தி ஆடியபாதம் உள்ளிட்ட 13 பேரைக் கைது செய்தனர்.