முகப்பு
தருமபுரி

அரசுப் பள்ளிகளில் படித்த தொழிலாளர்களின் பிள்ளைகள் சாதனை

பிளஸ் 2 பொதுத் தேர்வில் தருமபுரி மாவட்ட அரசுப் பள்ளிகள் அளவில் முதல் மூன்று இடங்களை கூலித் தொழிலாளர்களின் பிள்ளைகள் பிடித்து சாதனை

Updated On : 11 மே 2013, 12:36 pm IST
பகிர்:

பிளஸ் 2 பொதுத் தேர்வில் தருமபுரி மாவட்ட அரசுப் பள்ளிகள் அளவில் முதல் மூன்று இடங்களை கூலித் தொழிலாளர்களின் பிள்ளைகள் பிடித்து சாதனை படைத்தனர்.

காரிமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி எம். அகிலாண்டேஸ்வரி 1200-க்கு 1143 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் அரசு பள்ளிகளிலேயே முதலிடம் பிடித்தார்.

இவரது தந்தை மாதப்பன், தாய் சிவகாமி ஆகிய இருவரும் விவசாயக் கூலித் தொழிலாளர்கள். மேலும், குடும்பத்திலேயே முதல் தலைமுறை பட்டப்படிப்புக்கு செல்லும் மாணவியாகவும் உள்ளார்.

Advertisement

Advertisement

தனது பெற்றோர் அளித்த ஊக்கத்தாலும், ஆசிரியர்களின் ஒத்துழைப்பாலும் இந்த சாதனையை எய்த முடிந்ததாகக் கூறும் அகிலாண்டேஸ்வரி, உயர் கல்வியில் மருத்துவப் படிப்பை தேர்வு செய்து சிறந்த மருத்துவாரக வேண்டும் என்பதே ஆசை என்றார்.

இதேபோல, ஒடசல்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி எஸ். இளந்தென்றல் 1,122 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடத்தைப் பிடித்தார். இவரது தந்தை செல்வம், தாய் கவிதா. இருவரும் மளிகைக் கடை வைத்து நடத்தி வருகின்றனர்.

பெற்றோரின் குறைந்த வருமானத்தில் அரசுப் பள்ளியில் படித்தாலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார். இவரும் மருத்துவராகி சேவை புரிய வேண்டும் என்கிறார்.

இதேபோல, பி.அக்ரஹாரம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் பி. சிலம்பரசு 1,119 மதிப்பெண் பெற்று மூன்றாவது இடம் பிடித்துள்ளார். இவரது தந்தை பெரியதம்பி ஆடு மேய்க்கும் தொழிலாளியாக உள்ளார். தாய் சின்னம்மாள் விவசாய கூலி வேலைக்கு சென்று வருகிறார்.

மாவட்ட அளவில் மூன்றாவது இடம் பிடித்த சாதனை குறித்துகூட பெற்றோர் அறியாத நிலையிலேயே உள்ளனர்.

ஆசிரியர்கள், சக மாணவர்கள் பலரும் சிலம்பரசுவை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவிக்கும்போது எதற்காக வாழ்த்து கூறுகின்றனர் என்பதை எனது பெற்றோர் அறியவில்லை என்கிறார் சிலம்பரசு.

தனது தந்தை மேய்க்கும் ஆடுகளில் பல நோய்வாய்ப்பட்டு உயிரிழக்கின்றன. அப்போது, குடும்பமே சோகத்தில் இருக்கும். எனவே, உயர் கல்வியில் கால்நடை மருத்துவப் படிப்பை தேர்வு செய்து சிறந்த கால்நடை மருத்துவராக வேண்டும் என்பதே தனது லட்சியம் என்கிறார் சிலம்பரசு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.