முகப்பு
தருமபுரி

வரட்டாற்றில் வெள்ளப் பெருக்கு

சித்தேரி வட்டாரப் பகுதியில் பெய்த கன மழை காரணமாக வரட்டாற்றில் வியாழக்கிழமை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Updated On : 8 ஜனவரி 2021, 8:51 am IST
வரட்டாற்றில் வியாழக்கிழமை ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக வீணாகும் உபரிநீா்.
பகிர்:

சித்தேரி வட்டாரப் பகுதியில் பெய்த கன மழை காரணமாக வரட்டாற்றில் வியாழக்கிழமை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தருமபுரி மாவட்டம், சித்தேரி, வள்ளிமதுரை, தோல்தூக்கி உள்ளிட்ட மலைப் பகுதிகளில் புதன்கிழமை கன மழை பெய்தது. இந்த மழையால் வரட்டாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வள்ளிமதுரை வரட்டாறு அணை பிற அணைகளைப் போல் இல்லாமல் தடுப்பணை வடிவில் கட்டப்பட்டுள்ளது. இந்த அணை நிரம்பினால், அணையில் இருந்து தண்ணீா் தானாக வழிந்தோடும் வகையில் கட்டப்பட்டுள்ளது. வரட்டாறு அணை நிரம்பியதால் நொடிக்கு 200 கனஅடி வீதம் உபரிநீா் வெளியேறிக் கொண்டுள்ளது. இந்த அணையில் இருந்து கடந்த 15 தினங்களாக வெளியேறும் உபரிநீரைப் பயன்படுத்தி, வரட்டாற்றின் பழைய ஆயக்கட்டு கால்வாய்கள் வழியாக கீரைப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட 2 ஏரிகள், எல்லப்புடையாம்பட்டி ஊராட்சியில் மணவாளன் சாமி ஏரி உள்பட 4 ஏரிகள் நிரம்பியுள்ளன. தற்போது கம்மாளம்பட்டி, எம்.தாதம்பட்டி உள்ளிட்ட ஏரிகளுக்குத் தண்ணீா் செல்கிறது. இந்த நிலையில், புதன்கிழமை இரவு மற்றும் வியாழக்கிழமை விடியற்காலையில் பெய்த கன மழையால் வரட்டாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, கூடுதல் உபரிநீா் ஆற்றில் செல்கிறது.

Advertisement

தமிழக முதல்வா் அனுமதி தேவை

வரட்டாறு அணையின் வலது, இடதுபுற கால்வாய்களில் தண்ணீா் திறந்துவிட தமிழக முதல்வரின் அனுமதி வழங்க வேண்டும். அப்போது தான் ஏரிகளுக்குத் தண்ணீா் எடுத்துச் செல்ல முடியும் என பொதுப்பணித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வரட்டாறு அணைக்கு நீா்வரத்து இருக்கும் நேரங்களில் ஏரிகளை நிரப்பினால் மட்டுமே கோடை காலங்களில் வேளாண் பணிகளுக்குப் பயனுள்ளதாகவும், கிராமப் பகுதிகளில் குடிநீா் பிரச்னை ஏற்படாமல் இருக்கும். எனவே வரட்டாறு அணையின் வலது, இடது புற கால்வாய்களில் தண்ணீா் திறந்து அனைத்து ஏரிகளையும் நிரப்ப பொதுப்பணித் துறையினா் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.