பழனியில் புனித நீராடும் சண்முகநதியில் மணல் திருட்டு
பழனியில் பக்தர்கள் புனித நீராடும் சண்முகநதியில் இரவு, பகல் பாராமல் மாட்டு வண்டிகள் மூலம் சட்டவிரோதமாக
பழனியில் பக்தர்கள் புனித நீராடும் சண்முகநதியில் இரவு, பகல் பாராமல் மாட்டு வண்டிகள் மூலம் சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டு வருவதால், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
ஐந்து நதிகள் சங்கமமாகும் சண்முகநதி பிரசித்தி பெற்ற புண்ணிய நதியாகும். பழனியில் தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரத் திருவிழாவுக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள், இந்த நதியில் புனித நீராடிச் செல்கின்றனர்.
தற்போது, இந்த நதி கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தண்ணீரின்றி வற்றிப் போயுள்ளது. இதனால், சண்முகநதியில் கடந்த ஒரு வார காலமாக இரவு, பகல் பாராமல் மாட்டு வண்டிகள் மூலம் மணல் திருடப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனால், நதியில் பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
எனவே, மழைக் காலத்தில் நதியில் தண்ணீர் செல்லும்போது, புனித நீராட நதியில் இறங்கும் பக்தர்கள் குழிகளில் விழுந்து உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலையும் உள்ளது.
இதேபோன்று, திருச்சி காவிரி ஆற்றில் மணல் அள்ளப்பட்டு பள்ளங்கள் ஏற்பட்டதால், தண்ணீர் திறப்பை அடுத்து கடந்த இரு வாரங்களில் ஏராளமானோர் பலியானது குறிப்பிடத்தக்கது.
மணல் கொள்ளை குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டபோது, பொதுப்பணித் துறை அலுவலர்களே மணல் அள்ளும் மாட்டு வண்டிகளுக்கு பாஸ் போட்டு செல்வதாகத் தெரிவிக்கின்றனர். இதனால், சின்னக்கலையமுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களும், கிராம நிர்வாக அலுவலர்களும், பொதுப்பணித் துறை அனுமதியுடனே மணல் அள்ளப்படுவதாக எண்ணியுள்ளனர்.
ஆனால், இது குறித்து பொதுப்பணித் துறை உதவிச் செயற்பொறியாளர் ராஜேந்திரனிடம் கேட்டபோது, சண்முகநதியில் மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இந்த மாட்டு வண்டிகளுக்கு பாஸ் வழங்கிய பொதுப்பணித் துறை ஆய்வாளர் ரங்கராஜிடம் கேட்டபோது, மாட்டு வண்டிக்காரர்கள் மிகவும் சிரமமான குடும்ப சூழலில் உள்ளதாகத் தெரிவித்ததால், மணல் அள்ள அனுமதிக்கப்பட்டதாகவும், இனிமேல் இது தவிர்க்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அதன் பின்னரும், தொடர்ந்து மணல் திருட்டு நடைபெற்று வருகிறது. வெளிப்படையாகவே நடைபெறும் இந்த மணல் திருட்டு குறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்றும், அதை யாரும் கண்டுகொள்ளாத நிலையில், மாவட்ட ஆட்சியர் உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும் என்று பக்தர்களும், பொதுமக்களும் வலியுறுத்துகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.