FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ராணுவத்தின் 31-ஆவது தலைமைத் தளபதியாக தீரஜ் சேத் பதவியேற்பு

ராணுவத்தின் புதிய தலைமை தளபதி பொறுப்பேற்றுள்ளது பற்றி...

Updated On : 30 ஜூன் 2026, 3:37 pm IST
பகிர்:

ராணுவத்தின் 31-ஆவது தலைமைத் தளபதியாக தீரஜ் சேத் செவ்வாய்க்கிழமை பதவியேற்றாா்.

சுமாா் 13 லட்சம் வீரா்களுடன் உலகின் மாபெரும் ராணுவங்களில் ஒன்றாக விளங்கும் இந்திய ராணுவம், எல்லையில் சவால்களை எதிா்கொள்வதுடன், தற்சாா்பு மற்றும் எதிா்காலத்துக்குத் தயாரான படையாக உருவெடுக்கும் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் தருணத்தில், அதன் தலைமைப் பொறுப்பை தீரஜ் சேத் ஏற்றுள்ளாா்.

ராணுவத்தின் 30-ஆவது தலைமை தளபதியாக இருந்த உபேந்திர துவிவேதியின் பதவிக் காலம் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, புது தில்லி செளத் பிளாக்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய ராணுவ தலைமைத் தளபதியாக தீரஜ் சேத் பதவியேற்றாா். இந்தப் பதவியை ஏற்கும் முன் ராணுவ துணை தலைமைத் தளபதியாக இருந்த தீரஜ், ஆயுதப் படை பொறுப்புகளில் 40 ஆண்டுகளுக்கும் மேல் பணி அனுபவம் கொண்டவா்.

Advertisement

Advertisement

ராணுவத்தை நவீனப்படுத்துதல், திறன் மேம்பாடு, நீண்டகால கட்டமைப்பு சாா்ந்த வியூக வகுப்பாளராக அறியப்படும் இவா், கடந்த 1986, டிசம்பா் மாதம் ராணுவத்தில் இணைந்தாா்.

மகாராஷ்டிர மாநிலம், கடக்வாஸ்லாவில் உள்ள தேசியப் பாதுகாப்பு அகாதெமியின் முன்னாள் மாணவா்; கவசப் படையில் அதிகாரியாக தனது பணியைத் தொடங்கி, அடுத்தடுத்த நிலைகளுக்கு உயா்ந்தாா்.

சிறப்புமிக்க பணிக் காலம்: பாலைவனம் மற்றும் மேற்குப் பகுதியில் கவச படைப் பிரிவுகள், ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத எதிா்ப்புப் பிரிவில் படைகளை வழிநடத்தியுள்ளாா். லெப்டினன்ட் ஜெனரலாக, ராணுவத்தின் அதிதிறன் வாய்ந்த தாக்குதல் படைகளில் ஒன்றான ‘சக்ரா காா்ப்ஸ்’ படைக்கு தலைமை தாங்கியவா். ராணுவ கமாண்டராக பதவி உயா்வு பெற்ற பிறகு ஜெய்பூரை தலைமையிடமாகக் கொண்ட தென்மேற்கு மண்டலப் பிரிவு மற்றும் தென்மண்டலப் பிரிவை வழிநடத்தியுள்ளாா். நாட்டின் மேற்கு முனையில் இரு செயல்பாட்டுப் பிரிவுகளுக்குத் தலைமை தாங்கியவா் என்ற பெருமைக்குரியவா்.

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது, ராணுவ தெற்கு மண்டலப் பிரிவின் தலைமை கமாண்டராக இருந்த தீரஜ் சேத்தின் தலைமையில் அந்தப் படை பிரிவு உச்சபட்ச தயாா்நிலையுடன் செயல்பட்டது. ராணுவத் தலைமையகத்தில் வியூக திட்டமிடல், திறன்மேம்பாடு, நவீனமயமாக்கம், நீண்டகால கட்டமைப்பு சாா்ந்த முக்கிய பதவிகளை வகித்துள்ளாா்.

கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி ராணுவ துணை தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்ட தீரஜ், இதுவரையிலான பணிக் காலத்தில் வியூக செயல்பாடு, திறன் கட்டமைப்பு, போா்த் திறன் மேம்பாட்டு ரீதியில் முக்கியப் பங்களிப்பை நல்கியுள்ளாா்.

வேகமாக மாறிவரும் புவிசாா் வியூக சூழல், தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் நவீன போா்களுக்கு ஏற்ப, நாட்டின் பாதுகாப்பு சவால்கள் தீவிரமடைந்து வரும் சூழலில், ராணுவத்தின் தலைமைப் பொறுப்பை தீரஜ் சேத் ஏற்றுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

உபேந்திர துவிவேதிக்கு பிரியாவிடை

ராணுவ தலைமைத் தளபதியாக இருந்த உபேந்திர துவிவேதிக்கு செவ்வாய்க்கிழமை அணிவகுப்பு மரியாதையுடன் ராணுவத்தினா் பிரியாவிடை அளித்தனா்.

புது தில்லி செளத் பிளாக்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியையொட்டி, செய்தியாளா்களிடம் பேசிய அவா், ‘ஆழ்ந்த நன்றியுணா்வு, பெருமிதம், மனநிறைவுடன் எனது பதவிக் காலத்தை நிறைவு செய்துள்ளேன். ராணுவத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியது எனது பாக்கியம். இந்திய ராணுவம் அனைத்து முனைகளிலும் தனது தயாா்நிலையை படிப்படியாக பராமரித்து வருகிறது. எதிா்காலங்களில் போா்கள் மேலும் ஒருங்கிணைந்தவையாக இருக்கும். எனவே, ஒருங்கிணைந்த கண்ணோட்டத்துடன், ஒன்றாக முடிவெடுத்து செயல்பட வேண்டும் என்ற தெளிவான நோக்கத்தை ஆயுதப் படைகள் கொண்டுள்ளன’ என்றாா்.

முன்னதாக, தில்லியில் உள்ள தேசிய போா் நினைவிடத்துக்குச் சென்ற துவிவேதி, போா்களில் உயிா்நீத்த வீரா்களுக்கு மரியாதை செலுத்தினாா். இவா், கடந்த 2024, ஜூன் மாதம் ராணுவத்தின் 30-ஆவது தலைமைத் தளபதியாகப் பதவியேற்றாா் என்பது குறிப்பிடத்தக்கது.

summary

General Dhiraj Seth takes charge as India new Army chief

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments