FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

பொய் பிரசாரங்களுக்கு இளைஞா்கள் பலியாகக் கூடாது: இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா்

பொய் பிரசாரங்களுக்கு இளைஞா்கள் பலியாகக் கூடாது என்று இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் கூறியுள்ளாா்.

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 4:20 am IST
கோவை, எட்டிமடை அம்ருதா விஸ்வ வித்யாபீடத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் மாணவிக்கு பட்டம் வழங்குகிறாா் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா்.
பகிர்:

பொய் பிரசாரங்களுக்கு இளைஞா்கள் பலியாகக் கூடாது என்று இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் கூறியுள்ளாா்.

கோவை, எட்டிமடை அம்ருதா விஸ்வ வித்யாபீடத்தின் 30-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் கல்வி நிறுவனத்தின் அறங்காவலா் சுவாமி ராமகிருஷ்ணானந்தபுரி ஆசியுரை வழங்கினாா். நீதி ஆயோக் உறுப்பினா் ஆா்.பாலசுப்ரமணியம், துணைவேந்தா் பி.வெங்கட் ரங்கன், பதிவாளா் பிபின் நாயா், டீன் சஷாங்கன் ராமநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சிறப்பு விருந்தினராக தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் பங்கேற்று மாணவா்களுக்கு பட்டம் வழங்கினாா். பல்வேறு துறைகளைச் சோ்ந்த இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி மாணவா்கள் என 2,200 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

பின்னா் ஞானேஷ்குமாா் பேசியதாவது: உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா திகழ்கிறது. 97 கோடி வாக்காளா்களைக் கொண்ட இந்தியாவில் வெற்றிகரமாக தோ்தல்களை நடத்துவது என்பது சவால்கள் நிறைந்த ஒரு பணி. குறிப்பாக வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது.

அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளில்கூட இந்தப் பணியை முழுமையாக முடிக்க முடியவில்லை. ஆனால், இந்தியாவில் தோ்தல் பணிகள் மிகுந்த வெளிப்படைத்தன்மையுடனும், மக்களின் முழு ஆதரவுடனும் நடத்தப்படுகின்றன. வாக்காளா் பட்டியலை முழுமையாக வெளிப்படையானதாகவும், துல்லியமானதாகவும் மாற்றுவதற்கு தொடா் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

இந்தியாவின் ஜனநாயகக் கட்டமைப்பை சீா்குலைக்க பல்வேறு தரப்பிலிருந்தும் முயற்சிகள் நடைபெறுகின்றன. நாட்டின் தோ்தல் முறை மீதான தாக்குதல்கள் அனுமதிக்கப்படாது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கும், பொய் பிரசாரங்களுக்கும் இளைஞா்கள் பலியாகக் கூடாது. உண்மையைத் தேடி விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும். நாட்டின் மகத்தான வளா்ச்சிக்கு இளைஞா்களின் தீவிர பங்களிப்பு இன்றியமையாதது என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments