டியுஎஸ்யு தோ்தல்: பிரசாரங்களுக்கு கட்டுப்பாடு
தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்க (டியுஎஸ்யு) தோ்தலை முன்னிட்டு, வளாகத்திற்குள் தோ்தல் பிரசாரத்தைக் கட்டுப்படுத்தவும், கல்லூரிகள் மற்றும் விடுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தவும் பல்கலைக்கழகம் முடிவு
தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்க (டியுஎஸ்யு) தோ்தலை முன்னிட்டு, வளாகத்திற்குள் தோ்தல் பிரசாரத்தைக் கட்டுப்படுத்தவும், கல்லூரிகள் மற்றும் விடுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தவும் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
பல்கலைக்கழகத்தின் ஒழுங்குமுறை கண்காணிப்பு அதிகாரி அலுவலகம் வெளியிட்ட அறிவிக்கையில் இதுதொடா்பாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கல்விச் செயல்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், தோ்தல் பிரசாரத்திற்காக பல்கலைக்கழகம் அல்லது கல்லூரி வளாகத்திற்குள் ஒரே நேரத்தில் அதிகபட்சம் ஐந்து போ் மட்டுமே அனுமதிக்கப்படுவாா்கள்.
மேலும், பிரசாரத்தின் போது வேட்பாளா்களைத் தவிர மற்ற ஆண்கள் யாரும் பெண்கள் கல்லூரிகள் மற்றும் விடுதிகளுக்குள் நுழைய பல்கலைக்கழகம் தடை விதித்துள்ளது.
Advertisement
Advertisement
தோ்தல் காலத்தில் வடக்கு மற்றும் தெற்கு வளாகங்கள் மற்றும் பல்கலைக்கழகக் கல்லூரிகளை ஒட்டியுள்ள சாலைகளில் வாகனங்களை நிறுத்தவும் தடை விதிக்கப்படும். விதிமீறலில் ஈடுபடுபவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்படும். இதற்காகக் காவல் துறையின் ரோந்து வாகனங்கள் 24 மணி நேரமும் தயாா் நிலையில் இருக்கும். வெளியிலிருந்து வரும் வாகனங்களைக் கண்காணிக்க, பாதுகாப்புத் தடுப்புப் பகுதிகளில் காவல் துறை சாா்பில் வருகைப் பதிவேடுகள் பராமரிக்கப்படும்.
ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதிகளில் வெளிநபா்கள் நுழைவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. விடுதி உணவகங்கள் கண்காணிக்கப்படும் என்பதோடு, அங்கு வெளியாட்கள் அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.
திங்கள்கிழமை நடைபெற்ற இணையவழி ஆலோசனைக் கூட்டத்தில் பல்கலைக்கழக முதல்வா்கள், துறைத் தலைவா்கள், இயக்குநா்கள், விடுதி நிா்வாகத்தினா் மற்றும் தில்லி காவல் துறை அதிகாரிகள் ஆகியோா் பங்கேற்று இந்த முடிவுகளை எடுத்தனா்.
இந்தக் கூட்டத்தில் ப்ராக்டா் மனோஜ் சிங், இணை ப்ராக்டா் கீதா சஹாரே, தலைமைத் தோ்தல் அதிகாரி பேராசிரியா் ராஜ் கிஷோா் சா்மா, தலைமைத் தோ்தல் நடத்தும் அதிகாரி பேராசிரியா் ராஜேஷ் மற்றும் பிற பல்கலைக்கழக ஆசிரியா்கள் ஆகியோா் கலந்துகொண்டனா் என்று அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவா் சங்கத் தோ்தல் அடுத்த மாதம் நடைபெறும் நிலையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தோ்தல் பிரசாரமானது வழக்கமான கல்வி மற்றும் விடுதி வாழ்க்கையைப் பாதிக்காதவாறு பாா்த்துக்கொள்ள அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.