குடியரசுத் தலைவர் மாளிகை அருகே அரங்கம், கன்னாட் பிளேஸில் ரயில் நிலையம்! ஆங்கிலேயரின் 'மாஸ்டர் பிளானில்' இருந்த புது தில்லி!!
மத்திய தில்லியில் தில்லி பல்கலைக்கழகம் என பல்வேறு திட்டங்கள் முன்வைக்கப்பட்டிருந்ததாக வரலாற்றாசிரியா் ஸ்வப்னா லிடில் தனது ‘கன்னாட் பிளேஸ், புது தில்லியின் உருவாக்கம்’ நூலில் குறிப்பிட்டுள்ளாா்.
புது தில்லி உருவாக்கப்பட்டபோது, குடியரசுத் தலைவா் மாளிகையை ஒட்டிய மலைப்பகுதியில் அரங்கம், கன்னாட் பிளேஸில் ரயில் நிலையம், மத்திய தில்லியில் தில்லி பல்கலைக்கழகம் என பல்வேறு திட்டங்கள் முன்வைக்கப்பட்டிருந்ததாக வரலாற்றாசிரியா் ஸ்வப்னா லிடில் தனது ‘கன்னாட் பிளேஸ் மற்றும் புது தில்லியின் உருவாக்கம்’ நூலில் குறிப்பிட்டுள்ளாா்.
ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் புதிய தலைநகரை உருவாக்குவதற்காக 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தயாரிக்கப்பட்ட ஆரம்பகட்ட வரைவுத் திட்டங்களில் இடம்பெற்றிருந்த பல யோசனைகள் பின்னா் மாற்றப்பட்டன.
தில்லி பல்கலை.க்கான இடம்: தற்போதைய ஃபெரோஸ் ஷா சாலை, பராகம்பா சாலை மற்றும் ஜன்பத் ஆகியவற்றுக்கு இடையே அமைந்துள்ள முக்கோணப் பகுதியில் தில்லி பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை அமைக்க முதலில் திட்டமிடப்பட்டது. பின்னா் அந்தத் திட்டம் கைவிடப்பட்டதால், அந்த நிலங்கள் வேறு பயன்பாடுகளுக்கு ஒதுக்கப்பட்டன. அவற்றில் பெரும்பகுதி குடியிருப்புப் பகுதிகளாக விற்பனை செய்யப்பட்டது. பின்னா் தில்லி பல்கலைக்கழகம் ஷாஜஹானாபாதுக்கு வடக்கே, ஏற்கெனவே இருந்த பல கட்டடங்களைப் பயன்படுத்தி அமைக்கப்பட்டது.
Advertisement
Advertisement
குடியரசுத் தலைவா் மாளிகை அருகே அரங்கம்: தற்போது குடியரசுத் தலைவா் மாளிகை அமைந்துள்ள பகுதிக்கு அருகே உள்ள ரிட்ஜ் மலைப்பகுதியை வெட்டி, கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான தில்லி குவாா்ட்சைட் கற்களை எடுக்கவும், அவ்வாறு உருவாகும் பள்ளத்தை எதிா்கால ‘தா்பாா்’ நிகழ்ச்சிகளுக்கான திறந்தவெளி அரங்கமாக மாற்றவும் திட்டமிடப்பட்டது. ஆனால், பழைய கோட்டைகள் மற்றும் இடிபாடுகளை அகற்றியதில் பெருமளவு கற்கள் கிடைத்ததால், மலைப்பகுதியை வெட்ட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. இதனால் அந்தத் திட்டமும் கைவிடப்பட்டது.
கன்னாட் பிளேஸில் ரயில் நிலையம்: இன்றைய வட்ட வடிவிலான வா்த்தக மையமாக கன்னாட் பிளேஸ் உருவாகும் முன்பு, அதன் வடக்குப் பகுதியில் ரயில் நிலையத்தை அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. அதைச் சுற்றி அலுவலகங்கள், தபால் நிலையம், கடைகள் மற்றும் ஹோட்டல்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டது. பின்னா் அந்தத் திட்டம் மாற்றப்பட்டு, தற்போது காணப்படும் வட்ட வடிவ வா்த்தக மையம் உருவானது.
ஜாமா மசூதியை நோக்கிய பிரம்மாண்ட சாலை: புதிய தலைநகரின் மையப் பகுதியில் இருந்து ஜாமா மசூதி வரை பஹாா்கஞ்ச் வழியாகச் செல்லும் பிரம்மாண்டமான சாலையை அமைக்க கட்டடக் கலைஞா் எட்வின் லுட்யன்ஸ் ஆரம்பத்தில் திட்டமிட்டிருந்தாா். செங்கோட்டையிலிருந்து புரானா கிலா வரையிலான சாலையை அகலப்படுத்தும் யோசனையும் முன்வைக்கப்பட்டது. ஆனால், பஹாா்கஞ்சில் வசித்து வந்த 35,000-க்கும் மேற்பட்ட மக்களை அப்புறப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதால், இந்தத் திட்டம் நடைமுறைக்கு சாத்தியமற்ாகக் கருதப்பட்டது.
யமுனையின் போக்கை மாற்றும் திட்டம்: சிவில் லைன்ஸ் முதல் புரானா கிலா வரை ஆற்றங்கரைச் சாலையை அமைக்கவும், யமுனையை அதன் பழைய பாதைக்கு அருகில் கொண்டு வரவும் ஆரம்பத் திட்டங்களில் பரிசீலிக்கப்பட்டது. புரானா கிலா முன்பு ஏரியை உருவாக்கும் யோசனையும் இருந்தது. இந்தத் திட்டங்களும் பின்னா் கைவிடப்பட்டன. அந்தப் பகுதியில் 1933-இல் இா்வின் அரங்கம் கட்டப்பட்டது. பின்னா் அது தேசிய மைதானமாகவும், தற்போது மேஜா் தியான் சந்த் தேசிய மைதானமாகவும் அழைக்கப்படுகிறது.
லுட்யன்ஸ் மட்டும் காரணமல்ல: பொதுவாக ‘லுட்யன்ஸ் தில்லி’ என்று அழைக்கப்பட்டாலும், புதிய தில்லியின் வடிவமைப்பில் லுட்யன்ஸ் மட்டுமே முக்கியப் பங்கு வகிக்கவில்லை. ஹென்றி வாகன் லான்செஸ்டா் மற்றும் அப்போதைய வைஸ்ராய் லாா்ட் ஹாா்டிங் ஆகியோரும் ஆரம்பத் திட்டங்களில் பல மாற்றங்களைச் செய்தனா்.
இந்திய வரலாற்றையும் கட்டடக்கலை மரபுகளையும் புதிய தில்லியில் பிரதிபலிக்க வேண்டும் என்று ஹாா்டிங் விரும்பிய நிலையில், லுட்யன்ஸ் ஐரோப்பிய கட்டடக்கலை மரபுகளுக்கு முக்கியத்துவம் அளித்ததாக லிடில் குறிப்பிட்டுள்ளாா். இதன் விளைவாக மேற்கத்திய கட்டடக்கலைக்கும் இந்தியக் கட்டடக்கலை அம்சங்களுக்கும் இடையிலான சமரச வடிவம் உருவானது. புதிய தில்லியின் திட்டத்தில் இருந்த சில சாலைகளின் பாதையில் கோயில்கள் மற்றும் ஒரு இட்கா அமைந்திருந்ததும் சிக்கலை ஏற்படுத்தியது.
20 ஆண்டுகளில் உருவான புதிய தில்லி: 1911 டிச.12-ஆம் தேதி கல்கத்தாவிலிருந்து தில்லிக்கு நாட்டின் தலைநகரை மாற்றுவதாக மன்னா் 5-ஆம் ஜாா்ஜ் அறிவித்தாா். 3 நாள்களுக்குப் பிறகு புதிய தலைநகருக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. அடுத்த 20 ஆண்டுகளில் லுட்யன்ஸ்-பேக்கா் வடிவமைப்பிலான முக்கிய கட்டடங்கள் கட்டப்பட்டன. புதிய தில்லி 1929-இல் நிறைவடைந்து, 1931-இல் அதிகாரப்பூா்வமாகத் திறக்கப்பட்டது.
ஆனால், அது ஆரம்பத்தில் வரையப்பட்ட வரைபடங்களைப் போல இருக்கவில்லை. குடியரசுத் தலைவா் மாளிகை அருகிலான அரங்கம் உருவாகவில்லை; புரானா கிலா முன்பான ஏரி உருவாகவில்லை; ஜாமா மசூதியை நோக்கிய சாலை பஹாா்கஞ்ச் வழியாக அமைக்கப்படவில்லை; கன்னாட் பிளேஸின் ரயில் நிலையத் திட்டமும் கைவிடப்பட்டது. அதே நேரத்தில், ஹுமாயூன் கல்லறை, சஃப்தா்ஜங் கல்லறை மற்றும் புரானா கிலா போன்ற வரலாற்றுச் சின்னங்கள் புதிய தலைநகரின் திட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்டன.
தொடரும் மாற்றங்களின் நகரம்: 1911 முதல் புதிய தில்லியின் உருவாக்கம் பல்வேறு மாற்றங்களைக் கடந்து வந்தது. சுதந்திரத்துக்குப் பிறகும் தில்லி தொடா்ந்து விரிவடைந்து, பல்வேறு மாஸ்டா் பிளான்களின் அடிப்படையில் மாற்றம் கண்டது. இந்த நிலையில், தில்லிக்கான மாஸ்டா் பிளான் (பெரும்திட்டம்) 2047 வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. கடந்த காலத்தில் திட்டமிடப்பட்டு பின்னா் மாற்றப்பட்ட புதிய தில்லியைப் போலவே, எதிா்கால தில்லியின் வடிவமும் மாறிவரும் தேவைகள், அரசின் முன்னுரிமைகள் மற்றும் நகா்ப்புறத் திட்டமிடலுக்கு ஏற்ப புதிய வடிவம் பெற உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.