ரூ.15 லட்சம் பொருள்கள் மீட்பு: 9 பேர் கைது
திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திருடப்பட்ட ரூ.15 லட்சம் மதிப்பிலான நகை, மோட்டர் சைக்கிள்கள்,
திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திருடப்பட்ட ரூ.15 லட்சம் மதிப்பிலான நகை, மோட்டர் சைக்கிள்கள், கார் ஆகியவற்றை மீட்ட போலீஸார், அதில் ஈடுபட்ட 9 பேரை கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலகுண்டு, செம்பட்டி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பட்டிவீரன்பட்டி உள்ளிட்ட இடங்களில் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டு வந்தன.
மேலும் பெண்களிடம் நகைகளை பறித்து செல்லும் சம்பவங்களும் நடந்து வந்தன.
Advertisement
இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்திய போலீஸார் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 9 பேரை புதன்கிழமை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 36 பவுன் நகை, 15 மோட்டார் சைக்கிள்கள், ஒரு கார், ரொக்கம் ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி. பெ.ஜானகிராமன் தெரிவித்தது:
தொடர்ச்சியாக நடந்த திருட்டு சம்பவங்களையடுத்து குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை ஆய்வாளர் மணிகண்டன், ஆய்வாளர்கள் எஸ்.கருணாகரன் (வத்தலகுண்டு), சுரேஷ் (பட்டிவீரன்பட்டி), மாரியப்பன் (செம்பட்டி) உள்ளிட்டோரை எஸ்.பி. த.ஜெயச்சந்திரன் நியமித்திருந்தார்.
தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி மோட்டார் சைக்கிள் மற்றும் நகை திருட்டில் ஈடுபட்ட வந்த வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த அ.மோகன், மூ.சண்முகசூரியா(எ)சண்முகம் (33), நிலக்கோட்டை செ.ராஜேஷ் (23), சின்னாளப்பட்டியைச் சேர்ந்த மு.பால்பாண்டி (25), மு.சசிக்குமார் (27), க.வெங்கடேஷ், வீ.கார்த்திக் (23), ஜே.புதுக்கோட்டையைச் சேர்ந்த வி.சுஜித் (19) மற்றும் ச.கோகுல் (19) ஆகியோரை கைது செய்துள்ளனர்.
இந்த கூட்டத்தின் தலைவனாக சண்முகசூரியா செயல்பட்டு வந்துள்ளார்.
மேலும் கடந்த மார்ச் மாதம் வத்தலகுண்டு பகுதியில் திருச்சி வியாபாரியிடம் ரூ.5 லட்சத்தை கொள்ளையடித்ததும் சண்முகசூரியாதான் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள், நகை, பணம் மற்றும் காரின் மதிப்பு ரூ.15 லட்சம் என்றார் அவர்.
அப்போது திண்டுக்கல் டி.எஸ்.பி. மு.சுருளிராஜா, வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் பராவாசுதேவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.