""கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை என்ற தகுதி தேவையா?'' என்ற கேள்விக்கு வாசகர்களிடம் இருந்து வந்த கடிதங்களில் சில
கல்வி நிலையங்கள் என்பவை கல்வி, ஒழுக்கம் இரண்டையும் இரு கண்கள் எனப் போற்றுபவை. சில தனியார் கல்வி நிர்வாகங்கள் தங்களின் சுயநலத்துக்காக மத, மொழி அடிப்படையில் சிறுபான்மை என்ற அந்தஸ்தைப் பெறுகின்றன.
சுயநலத்துக்காக
கல்வி நிலையங்கள் என்பவை கல்வி, ஒழுக்கம் இரண்டையும் இரு கண்கள் எனப் போற்றுபவை. சில தனியார் கல்வி நிர்வாகங்கள் தங்களின் சுயநலத்துக்காக மத, மொழி அடிப்படையில் சிறுபான்மை என்ற அந்தஸ்தைப் பெறுகின்றன. இந் நிறுவனங்களில் கற்பிக்கும் ஆசிரியர்கள், படிக்கும் மாணவர்கள் அனைவரும் சிறுபான்மையினர் அல்ல. ஆசிரியர்களை அடிமைகளாக நடத்துவதற்கு இந்த உரிமை பயன்படுத்தப்படுகிறது. கல்வி வளர்ச்சியும் மாணவர் முன்னேற்றமும் சிறுபான்மை என்ற தகுதியால் மட்டுமே வந்துவிடாது. ஆசிரியர்களின் கற்பிக்கும் திறன், நல் வழிகாட்டலால் மூலமே அது சாத்தியம். மொழி, மதம், இனம் ஆகிய வேறுபாடுகள் இல்லாமல் வாழவேண்டும். மாணவர்கள் நெஞ்சில் அந்த எண்ணங்கள் வராமலிருக்க இந்தத் தகுதி தேவையில்லை.
செ. டேவிட் கோவில்பிள்ளை, தென்காசி.
Advertisement
Advertisement
கலாசாரம் ஒன்றே
ஜாதி, மதம், இனம், மொழி என்று வேறுபட்டிருந்தாலும் கலாசாரம், பண்பாடு என்ற வகையில் ஒன்றுபட்டே வாழ்கிறோம். "வேற்றுமையில் ஒற்றுமை' என்பதே சுதந்திர இந்தியாவின் தார்மிக முழக்கம். ஆனால் அரசியல்வாதிகள், "ஒற்றுமையில் வேற்றுமை' காண்பதே அரசியல் ஆதாயம் என்று சிந்தித்துச் செயல்படுகின்றனர். ஓட்டு வங்கிக்காகவே "சிறுபான்மையினர்' என்ற சொல்லாக்கத்தை உருவாக்கியிருக்கின்றனர். கல்விச் சலுகை, கட்டணச் சலுகை, கல்வி உதவித்தொகை சிறுபான்மையினருக்கு வழங்கப்படுகிறது. சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள்தான் இந்த நிறுவனங்களை நடத்துகின்றனர். பெரும்பாலும் "கொள்ளைதான்' நடக்கிறது. அனைவருக்குமான கட்டாயக் கல்வி மூலம் அரசு ஒதுக்கியுள்ள 25% ஒதுக்கீடு சட்டம் சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களுக்குப் பொருந்தாது! கல்வி நிறுவனங்களில் கூடாது இந்தப் பிரிவினைத் தகுதி!
முருகு மகிழ்நன், உடுமலைப்பேட்டை.
தன்னாட்சி பெற்றவை
சிறுபான்மைக் கல்வி நிறுவனங்கள் "தன்னாட்சி பெற்ற' நிறுவனங்களாகவே செயல்பட்டுவருகின்றன. இந் நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்களின் ஊதியம் உள்ளிட்ட செலவுகளையும் மாணவர்களுக்கான செலவுகளையும் அரசே ஏற்றுக்கொள்கிறது. ஆனால் பணி நியமனம் செய்வது, இட மாற்றம் செய்வது, பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது போன்ற அதிகாரம் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருப்பதால் எதேச்சாதிகாரப் போக்கு காணப்படுகிறது. பிற மதங்களைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு அதிக எண்ணிக்கையில் பணி வழங்கப்படுவதில்லை. பதவி உயர்விலும் பாரபட்சம் காட்டப்படுகிறது. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளிலும் பிற மதத்தினருக்கு அதிக இடங்கள் தரப்படுவதில்லை. தாளாளர் அல்லது செயலாளர் நியமனங்கள் முறையாக நடப்பதில்லை. அரசின் சலுகைகளைப் பெற்றுக்கொண்டு அரசின் அதிகார வரம்புக்குள் வராமல் தன்னிச்சையாகச் செயல்படும் சிறுபான்மை என்ற தகுதி தேவையில்லை. அரசு மறுபரிசீலனை செய்வது நல்லது.
மு.க. இப்ராஹிம், வேம்பார்.
ஒரு குடையின் கீழ்
சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்கள் மட்டுமின்றி அனைத்துக் கல்வி நிறுவனங்களுமே ஒரு குடைக்கீழ் (அரசு கட்டுப்பாட்டுக்குள்) வரவேண்டும். முதலில் மாநகராட்சி, நகராட்சி, நலப்பள்ளிகள் ஆகியவற்றை அரசுப்பள்ளிகளாக்க வேண்டும்; அடுத்து அரசு உதவி பெறும் - ஜாதி அடிப்படையில் இயங்கும் - தனியார் பள்ளிகளை அரசுப்பள்ளிகளாக்க வேண்டும். சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் அவர்களுடைய மதத்தைச் சேர்ந்த மாணவர்கள் எவ்வளவு குறைவாக மதிப்பெண் பெற்றாலும் அதே பள்ளியிலேயே தக்கவைத்துக் கொள்கின்றனர். மற்ற மதத்தவரை மாற்றுச் சான்றிதழ் கொடுத்து கட்டாயமாக வெளியேற்றுகின்றனர். வேறு பள்ளிகளில் படித்தவர்களைச் சேர்த்துக்கொள்ளும்போதும், 60 விழுக்காட்டுக்கு மேல் மதிப்பெண் பெறும் படித்த மாணவர்களையே சேர்த்துக்கொண்டு, தங்கள் பள்ளிதான் சிறந்த பள்ளி என்கின்றனர். கல்வி நிறுவனங்களுக்கு இனியும் சிறுபான்மை என்ற தகுதி தேவையில்லை.
பூவை. பி. தயாபரன், புள்ளம்பாடி.
சமத்துவம் எது?
கல்வி நிறுவனங்களுக்குச் சிறுபான்மை என்ற தகுதி அளிக்கப்படுவதால், பொதுவான விதிகளுக்குக் கட்டுப்படாமல் தவறான சலுகைகளைப் பெற்றுப் பயனடைகின்றன. இது தவறு. அனைத்துக் கல்வி நிறுவனங்களும் பொதுவான கல்வித்துறை விதிகளைப் பின்பற்ற வேண்டும், இதுவே சமத்துவமாகும். சிறுபான்மை என்ற பாகுபாடு கூடாது.
ச.மு. விமலானந்தன், திருப்பத்தூர்.
அப்போதைய பொறுப்பு
மத, இனச் சிறுபான்மையினரைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருந்த அந்நாள்களில் சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்கள் சட்ட பாதுகாப்பு வரையறை செய்யப்பட்டு, கட்டடப் பராமரிப்பு, ஊதியம் மற்றும் சில சலுகைகளுடன் நிதியாதாரங்களும் வழங்கப்பட்டன. அதே நிலை இன்றும் தொடர்கிறது. இதற்குக் காலவரையறை செய்து நீக்கிவிடலாம். கல்வி தனியார்மயமானதால் ஏற்பட்ட முன்னேற்றத்தை, செழிப்பை, வெற்றியைக் கண்கூடாகப் பார்த்த பின்னரும் சிறுபான்மை எனப்பிரிக்கும் தகுதி தேவையற்றதே.
மு.அ.ஆ. செல்வராசு, வல்லம்.
மிஷினரிகளின் தொண்டு
ஒரு குறிப்பிட்ட ஜாதீய வட்டத்துக்குள் உள்ளவர்களுக்கு மட்டுமே கல்வி உரிமையானதாக இருந்த நிலையை மாற்றி,கடைநிலையில் உள்ளவர்களுக்கும் கல்வி கிடைக்கச் செய்தவர்கள் கிறிஸ்தவ மிஷினரிகள். அந்த அடிப்படையிலேயே கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை என்ற தகுதி வழங்கப்பட்டுள்ளது. அதுவும் கத்தோலிக்க திருச்சபை, தென்னிந்திய திருச்சபை போன்ற முறையான அமைப்பு நடத்தும் பள்ளிகளுக்கு மட்டுமே இந்தத் தகுதி வழங்கப்பட்டுள்ளது. தனி நபராக கிறிஸ்தவரோ, முஸ்லிம்களோ நடத்தும் பள்ளிகளுக்கு இந்த அந்தஸ்து வழங்கப்படுவதில்லை. சிறுபான்மைப் பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமனம் செய்ய மட்டுமே சலுகை வழங்கப்படுகிறதே தவிர மற்ற விசேஷ சலுகைகள் எதுவும் வழங்கப்படுவதில்லை. பிற தனியார் பள்ளிகளுக்கு உள்ள சலுகைகள்தான் சிறுபான்மைச் சமூக பள்ளிகளுக்கும் வழங்கப்படுகிறது.
ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
நிச்சயம் தேவை
கல்வி நிறுவனங்கள் அனைத்தும் வணிகமயமாகிவிட்டன. அரசியல்வாதிகள், பெருந்தொழிலதிபர்கள் தங்களுடைய கருப்புப் பணத்தை வெள்ளையாக்க, கல்விச் சேவை என்ற போர்வையில் கல்வி நிறுவனங்களைத் துவக்கி மக்கள் பணத்தைச் சுரண்டுகின்றனர். இந்தியாவில்தான் இந்தக் கல்வி வியாபாரம் அமோகமாக நடக்கின்றது. ஏழை, எளிய மக்களுக்கு உயர் கல்வி இன்னமும் எட்டாக்கனிதான், காரணம் உயர்ந்துவிட்ட கல்விக் கட்டணம். சிறுபான்மையினர், மலைவாழ் மக்கள், பழங்குடிகளுக்குச் சலுகைகள் அளிக்கப்படவில்லையெனில் உயர் ஜாதியினர்தான் கல்வியில் ஆதிக்கம் செலுத்துவர். இதன் எதிரொலி அனைத்து தளங்களிலும் இருக்கும். மொழி, மத, இனச் சிறுபான்மையினர் கல்வி பெற இந்தத் தகுதி அவசியமானது.
பி.ஜே. ஜீவன், கும்பகோணம்.
அணுகினால் தரலாம்
சிறுபான்மைத் தகுதி தேவை என்று அணுகும் கல்வி நிலையங்களுக்குக் கொடுக்கலாம். அணுகிய ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்துக்குச் சொந்தமான கல்வி நிலையங்களுக்கும், கிறிஸ்தவ, முஸ்லிம், சீக்கிய கல்வி நிறுவனங்களுக்கும் சிறுபான்மை என்ற தகுதி தேவைப்படும். இதனால் மாணவ, மாணவியருக்குக் கல்விக் கட்டணம் குறையும். சொத்துவரி விலக்கும் உண்டு.
எஸ். நாகராஜன், குரோம்பேட்டை.
தரமான கல்வி
சிறுபான்மைக் கல்வி நிலையங்களில் தரமான கல்வியுடன் ஒழுக்கத்தையும் வலியுறுத்துகின்றனர். மாணவ, மாணவிகளிடம் ஒழுக்கம் இல்லையென்றால் உடனே பெற்றோரை அழைத்து எடுத்துக்கூறி திருத்துகின்றனர். திருந்தாதவர்களைப் பள்ளியைவிட்டே அனுப்பவும் தயங்குவதில்லை. படிப்பில் மதிப்பெண் குறைந்தால் கூடுதல் நேரம் பள்ளியில் இருந்து படிக்கச் சொல்லி ஊக்குவிக்கின்றனர். எனவே இந்தத் தகுதி அவசியம்.
எஸ். ஃபரிதா பானு, காயல்பட்டினம்.
இனி தேவையில்லை
நாடு சுதந்திரம் அடைந்தபோது சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தோர், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், நலிவுற்றோர் என்று எல்லா பிரிவுகளிலும் பெண்கள் கல்வியில் பின் தங்கியிருந்தனர். அவர்களின் முன்னேற்றத்துக்காக கல்விக்கூடங்கள் நிறையத் தேவைப்பட்டன. எனவே சிறுபான்மையினர் கல்விக்கூடங்களை நிறுவினர். அவற்றுக்கு அரசின் உதவியும் வழங்கப்பட்டன. இப்போது தனியார் துறையிலும் அரசு ஆதரவிலும் கல்விக்கூடங்களின் எண்ணிக்கைகள் பெருகிவிட்டன. இப்போது தரமான கல்வி தரும் தனியார் பள்ளிகளை மக்கள் நாடத் தொடங்கிவிட்டார்கள். பல சிறுபான்மைக் கல்வி நிலையங்கள் பணம் காய்க்கும் மரங்களாகிவிட்டன. இனியும் தனிச்சட்டமும் தனி அந்தஸ்தும் தேவையில்லை.
ஞானமகன், ஆரப்பள்ளம்.
பேதம் ஏன்?
கற்பிக்கப்படும் கல்வி அனைவருக்கும் பொதுவானது. இதில் கல்விக்கூடங்களில் சிறுபான்மை - பெரும்பான்மை என்ற பேதங்கள். சிறுபான்மை கல்விக்கூடம் என அழைக்கப்படும்போது,சமூகத்திலிருந்து ஒதுக்கிவைத்துவிட்ட உணர்வினைத் தருகிறது. சமூகக் கட்டமைப்பில் ஒவ்வொரு சிறுபான்மை இனங்களும் தனித்தனியாகப் பிரிந்து, இயங்க ஆரம்பிக்கும்போது ஒரே நாடு என்ற தனித்துவம் பலவீனப்பட்டு போகும். அனைத்து சமுதாய மக்களும் சமத்துவமான கல்வி பெற அரசும் கல்வியாளர்களும் முயல வேண்டும்.
எம்.எஸ். இப்ராகிம், சென்னை.