நிர்மலா சீதாராமன்! 
விவாதமேடை

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் வளர்ச்சிக்கானதா, தொடர்ச்சிக்கானதா? என்பது குறித்து... வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் வளர்ச்சிக்கானதா, தொடர்ச்சிக்கானதா? என்பது குறித்து...

தினமணி செய்திச் சேவை

வளர்ந்த பாரதம்

அமெரிக்க அதிபரின் வரி விதிப்பு அச்சுறுத்தல்கள், உலகளாவிய பொருளாதார மந்த நிலை, உலக நாடுகளுக்கு இடையே போர்ப் பதற்றங்கள், அரசு எதிர்கொண்டிருக்கும் சவால்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், ஐந்து மாநிலங்களில் நடக்கவிருக்கும் தேர்தல்களுக்கு முக்கியத்துவம் தராமலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஒன்றையே பிரதானமாகக் கருதி தொலைநோக்குப் பார்வையுடனும், மிகுந்த கவனத்துடனும் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பட்ஜெட்டில் கவர்ச்சிக்கு வேலையில்லை. 2047-இல் "வளர்ந்த பாரதம்' எனும் இலக்கை அடைய தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சியே இன்றைய தேவை.

கே.ராமநாதன், மதுரை.

வளர்ச்சிக்கானது

தொடர்ந்து ஒன்பது முறை ஒரே நிதியமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்வது என்பது சிறந்த ஆளுமைக்குச் சான்று. மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் இதுபோன்ற நிகழ்வு பாராட்டுக்குரியது. சர்வதேச அளவில் பொருளாதார நிலையை எண்ணிப் பார்க்கும்போது, நமது பட்ஜெட் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை பிரதிபலிப்பதைக் காணமுடியும். கவர்ச்சியும் கைத்தட்டலும் தேவையில்லை; தேசத்தின் முன்னேற்றமே நோக்கம் என்கிற உயரிய எண்ணத்தின் வெளிப்பாட்டை நமது பட்ஜெட் வெளிப்படுத்துகிறது. வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய இந்த பட்ஜெட் வரவேற்புக்குரியது.

வீ.வேணுகுமார், கண்ணமங்கலம்.

சமமாகப் பார்க்கவில்லை

பாஜக ஆட்சியோ அல்லது பாஜக கூட்டணி ஆட்சியோ நடைபெறும் மாநிலங்களுக்கு இந்த பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்தும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு குறைந்த நிதி ஒதுக்கீடு செய்தும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியாவில் அனைத்து மாநிலங்களையும் சமமாகப் பார்க்கும் மனநிலை மத்திய பாஜக அரசுக்கு இல்லை என்பதை இந்த பட்ஜெட்டின் மூலம் அறிய முடிகிறது. தொலைநோக்குப் பார்வையில்லாமல் தயாரிக்கப்பட்ட இந்த பட்ஜெட் மந்தமான பட்ஜெட். இந்த பட்ஜெட் இந்தியாவின் வளர்ச்சிக்குரியதல்ல.

கே.ஆர்.ராஜேந்திரன், திருப்பரங்குன்றம்.

ஆறுதல் அளிக்கிறது

மத்திய பட்ஜெட்டில் வீட்டுக் கடன் வட்டிக்கு வழங்கப்பட்ட வரிச் சலுகை நடுத்தர மக்களுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது. மின்சார

வாகனங்களுக்கும், சூரிய ஒளி மின்சார தகடு அமைப்புகளுக்கும் வழங்கப்படும் மானியம் சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் செலவு குறைந்த ஆற்றல் பயன்பாட்டை ஊக்குவிக்கிறது. சென்னை-பெங்களூரு இடையே ஒரு மணி நேரத்தில் பயணிக்கும் புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இது வர்த்தகத்தையும், சரக்குப் போக்குவரத்தையும் வேகப்படுத்தும்.

ரமேஷ்.ஆர்., சேலம்.

வளர்ச்சிக் கண்ணோட்டத்துடன்...

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் கவர்ச்சிகர அறிவிப்புகள் இல்லை. அனைத்துத் துறைகளின் வளர்ச்சியை மனதில் கொண்டு நிதி ஒதுக்கி இருப்பது அவருக்கே உரித்தான பாணி. சிறப்பான வளர்ச்சி என்ற குறிக்கோளுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த பட்ஜெட் நாட்டின் வளர்ச்சிக்கானது என்று உறுதிபடக் கூறலாம். அடுத்தவர்களின் பாராட்டு, எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி தயாரிக்கப்பட்ட பட்ஜெட்டாக திகழ்கிறது.

நந்தினி கிருஷ்ணன், மும்பை.

வேலைவாய்ப்புக்கு திட்டமில்லை

வேலைவாய்ப்பை அதிகரிக்கும் அம்சங்கள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. வங்கிகளின் பொருளாதார நிலை ஸ்திரமாக இல்லை. அதைச் சீரமைக்க பட்ஜெட்டில் சரியான திட்டங்கள் எதுவும் கூறப்படவில்லை. உள்நாட்டு உற்பத்திக்கு முக்கியத்துவம், ஏற்றுமதிக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மரபுசாரா சக்திக்கான மூலப் பொருள்கள், மருந்துப் பொருள்கள் ஆகியவற்றின் வரியைக் குறைத்துள்ளது என்பதெல்லாம் வளர்ச்சிக்கான பட்ஜெட் என்று கூறினாலும், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்திப்பது கவலைக்குரியது.

தி சேகர், பீர்க்கன்கரணை.

ஏமாற்றம் அளிக்கிறது

எந்த ஒரு நீண்ட காலத் திட்டங்களும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. மக்களின் அன்றாட அடிப்படைத் தேவைகள், பட்டினிச் சாவுகள், விவசாயத்துக்கான நீர்த் தேவையை நிறைவு செய்யும் நதிநீர் இணைப்பு குறித்தோ, விலைவாசியைக் கட்டுக்குள் வைப்பது குறித்தோ, வேலைவாய்ப்புக்கு எந்த வழிகளும் பட்ஜெட்டில் இடம் பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது. புல்லட் ரயில் திட்டம் மட்டுமே மிகப் பெரிய திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் இந்த பட்ஜெட் வளர்ச்சிக்கான பட்ஜெட் அல்ல.

மகிழ்நன், கடலூர்.

நம்பிக்கையூட்டும் பட்ஜெட்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் நாட்டின் வளர்ச்சிக்கானது. நுகர்வோருக்கான வரிக் குறைப்பு சாமானிய மக்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக அமைந்துள்ளது. மருந்துகள் தயாரிப்பு திட்டத்துக்கு ஐந்து ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு, நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு முதுகெலும்பான அதிவேக ரயில் வழித்தடங்களுக்கு நிதி ஒதுக்கீடு போன்றவை நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் என்பதில் சந்தேகமில்லை. நம்பிக்கையூட்டும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது.

வே.ஸ்ரீநிவாசன், பெருங்குளத்தூர்.

வரிகள் உயர்த்தப்படவில்லை

முக்கிய தொழில் வளர்ச்சித் திட்டங்களுக்கு முதலீடுகள் மிகப் பெரிய அளவில் செய்யப்படுகின்றன. அதே சமயம் வரிகள் எதுவும் உயர்த்தப்படவில்லை. ரயில் பயணங்களில் மூத்த குடிமக்களுக்கான பயணக் கட்டண சலுகை வழங்கப்படவில்லை. சமையல் எரிவாயு விலை உயர்த்தப்படவில்லை. அதில் மானியம் குறைக்கப்பட்டு விட்டது. இதுபோன்ற திட்டமில்லா செலவினங்கள் குறைக்கப்பட்டு, அந்தத் தொகை தொழில் வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்தியா தொழில் வளர்ச்சி பெற்ற நாடாக விரைவில் மாறும் என நம்பலாம்.

டி.சேகரன், மதுரை.

வளர்ச்சியே இலக்கு

வளர்ச்சியை முன்னோக்கி தொடர்ச்சியாக செயல்படுத்த திட்டங்கள் நிறைந்த பட்ஜெட் இது. 7% வளர்ச்சியைக் கொண்ட இலக்கு, வளர்ச்சியடைந்த பாரதம்- 2047 என்ற நிலையை வரலாற்றில் பதிய வைக்கும் முயற்சி. ரூ. 11.7 லட்சம் கோடி கடன் வாங்கும் நிலை இருந்தாலும், 7% பொருளாதார வளர்ச்சியின் மூலம் கடன்களை அடைத்துவிட முடியும். வெளிநாட்டு நிறுவனங்கள், இந்திய அரசு தரும் 20 ஆண்டுகளுக்கு வரி விலக்கு என்கிற நிலையில், அந்நிய முதலீட்டாளர்கள், பெரு நிறுவனங்கள் இந்தியாவுக்கு அதிக அளவில் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

தாமஸ் எட்மண்ட்ஸ், தாம்பரம்.

தொலைநோக்கு பட்ஜெட்

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை எப்போதும் தொடர் வளர்ச்சிக்கானது. நிதி ஸ்திரத்தன்மை சீரமைப்பைக் கொண்டு வருவதுடன் மூலதனச் செலவின் வேகத்தைத் தக்க வைக்க வேண்டியுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் புதிய அறிவிப்புகள் வளர்ச்சிக்கானதாக இருந்தாலும், அவற்றை நடைமுறைப்படுத்துவதில் ஏற்படும் தாமதங்கள், வேலைவாய்ப்பு உருவாக்கத்தையும் இறுதியில் பொருளாதார வளர்ச்சியையும் மந்தமாக்கும். மொத்தத்தில் கவர்ச்சிகர அறிவிப்புகள் இல்லாமல், எதிர்காலத்தை மனதில் கொண்டு தாக்கல் செய்யப்பட்ட தொலைநோக்கு பட்ஜெட் இது.

க.அருச்சுனன், செங்கல்பட்டு.

முன்னேற்றப் பாதையில்...

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த இந்த பட்ஜெட் நாட்டின் வளர்ச்சிக்கானது. மக்களின் மனதைப் புரிந்து கொண்டு சிறப்பான பட்ஜெட்டை தயாரித்த அவருக்குப் பாராட்டுகள். இதுபோன்ற பட்ஜெட்டை தாக்கல் செய்தால் இந்தியாவின் வளர்ச்சி அதிகரிக்கும் என்பதைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப தயாரித்துள்ளார். அடித்தட்டு மக்கள், நடுத்தர வர்க்கம் என்று அனைவரையும் மனதில் கொண்டு உருவாக்கப்பட்ட பட்ஜெட். இதுபோன்ற பட்ஜெட்தான் நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும்.

உஷா முத்துராமன், மதுரை.

பாராட்டுக்குரியது

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் வளர்ச்சிக்கான தொடர்ச்சியான பட்ஜெட். இதில் நிதிப் பற்றாக்குறை கணிசமான அளவுக்கு குறைக்கப்பட்டிருக்கிறது. புற்றுநோய்க்கான மருந்துகளின் வரிகள் குறைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அதிவேக ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. ரயில்வே துறையை நவீன

மாக்குவதற்கு போதிய நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. சாமானிய மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படாமல் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது.

அ.பட்டவராயன், திருச்செந்தூர்.

சம்பிரதாயம்

பட்ஜெட் என்பது ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு சம்பிரதாயம் என்ற அளவில்தான் உள்ளது. வருமான வரி உச்சவரம்பை உயர்த்தியது என்று ஆறுதல் அடைந்து விட்டு பிறகு துறை ரீதியான பயனாளிகளிடம் அது கடைப்பிடிக்கப்படுவதில்லை. உதாரணத்துக்கு, பதிவுத் துறையில் முன்பு ரூ.2 லட்சம் வரை முன் ரொக்கமும், மீதத் தொகைக்கு காசோலை அல்லது வரைவோலை மூலம் வரவு வைக்க வேண்டும் என்றிருந்ததை, தற்போது ரூ. 20,000 மட்டுமே ரொக்கமாக செலுத்த வேண்டும் என மாற்றப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.

ஆர்.ஜி .பாலன், திசையன்விளை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோமாலியாவில் உணவு விநியோகம்: நிதிநெருக்கடியால் விரைவில் நிறுத்தம்? ஐ.நா. எச்சரிக்கை

ஏ.ஐ. உச்சி மாநாட்டில் ரூ.24 லட்சம் கோடி முதலீடுகள் உறுதி: அமெரிக்கா, சீனா உள்பட 86 நாடுகள் ஆதரவுடன் பிரகடனம் ஏற்பு

அந்நியச் செலாவணி கையிருப்பு 72,572.7 கோடி டாலராக அதிகரிப்பு!

அமெரிக்காவிடம் இருந்து வரிப்பணம் திரும்பக் கிடைக்குமா? 17,500 கோடி டாலா் நிலுவை; எதிா்பாா்ப்பில் நிறுவனங்கள்

திருப்பத்தூரில் நெல் கொள்முதல் நிலையம்: சௌமியா அன்புமணி வலியுறுத்தல்

SCROLL FOR NEXT