தேர்தல் நடத்தை விதிமுறைகளில் எவை தளர்த்தப்பட வேண்டும் என்பது குறித்து... வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...
தேர்தல் காலங்களில் விதிமுறைகளை முறைப்படுத்துவது பல ஆண்டுகளாக நிகழ்ந்து வருகிறது.
சில விதிமுறைகள் வேண்டாம்
தேர்தல் காலங்களில் விதிமுறைகளை முறைப்படுத்துவது பல ஆண்டுகளாக நிகழ்ந்து வருகிறது. யுபிஐ பணப் பரிமாற்றத்தின்மூலம் ஒரு தொகையைக் குறிப்பிட்டு அதற்கு மேல் பரிவர்த்தனை செய்யக் கூடாது என்றும், அவ்வாறு செய்யப்பட்டால் அதற்கான காரணங்களை விளக்க வேண்டும் என்கிற விதிமுறையைக் கொஞ்சம் தளர்த்தினால் நன்றாக இருக்கும். இதுபோன்ற சில விதிமுறைகளைத் தவிர மற்றவற்றை கண்டிப்பாகக் கடைப்பிடிப்பதே ஜனநாயகத்துக்கு நல்லது.
உஷா முத்துராமன், மதுரை.
மருத்துவத்துக்கு தளர்வு
மருத்துவ அவசர நிலையின்போது தேர்தல் நடத்தை விதிகளின்படி ஆவணங்களை எவ்வாறு சமர்ப்பிக்க முடியும்? அவசர நிலை, கடனைக் குறிப்பிட்ட தேதியில் அடைக்க அல்லது சுபநிகழ்வுக்காக கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டால் அதற்கான ஆவணங்களை வழங்கி திரும்பப் பெற அதிகபட்சம் 7 நாள்கள் வரை ஆகலாம். ஆவணங்களை வழங்கியவுடன் பறிமுதல் செய்த பொருளை விரைந்து ஒப்படைக்க வேண்டும். மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு செல்லும் பணத்துக்கு அல்லது பணப் பரிவர்த்தனைக்கு எளிதில் அணுகக்கூடிய ஆவணங்களை ஏற்றுக் கொள்ளலாம்.
மூ. கிருத்திகா, திருப்பூர்.
வரம்புக்குள் தளர்வு
அதிக மக்கள்தொகை, பல்வேறு மதங்கள், கலாசாரங்களைக் கொண்டிருக்கும் இந்தியாவுக்கு வேறெந்த நாட்டுக்கும் இல்லாத மிகப் பெரிய பலம் உண்டென்றால், அது அமைதியான, நேர்மையான, ஜனநாயக முறையில் நடைபெறும் தேர்தல்தான். அத்தகைய சிறப்பைப் பெற்றிருக்கும் நம் நாட்டில் தொடர்ந்து நம்பகத்தன்மையுடன் செயல்பட வேண்டுமானால் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். திருமணம் மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக எடுத்துச் செல்லும் பணம் போன்ற வகைகளுக்கு தளர்வுகள் வரம்புக்குள் இருத்தால்தான் தேர்தல் நேர்மையான தேர்தலாக அமையும்.
ப. கோவிந்தராசு, ஊத்தங்கால்.
அரசியல்வாதிகளிடம் பறிமுதல்
தேர்தல் நடத்தை விதிமுறைகளை சிலருக்கு கட்டாயம் தளர்த்த வேண்டும். குறிப்பாக குறு- சிறு விவசாயிகள், வியாபாரிகள், திருமண நிகழ்வுகளில் இருப்பவர்கள், மருத்துவ சிகிச்சை அவசரத்தில் இருப்பவர்கள், கடனைச் செலுத்த செல்கிறவர்கள் உள்ளிட்டோர் கொண்டுசெல்லும் ரொக்கத்துக்கு அதிகாரிகள் பெரிதாக விசாரணை நடத்தியோ அல்லது பறிமுதல் செய்து வைத்துக் கொண்டு அவர்களை அலைக்கழிப்பது ஏற்புடையதல்ல.
அரசியல் பிரமுகர்கள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களைப் பிடித்து சோதனை செய்து அவர்களிடத்தில் இருக்கும் பணத்தைப் பறிமுதல் செய்யலாம். அப்பாவிகளுக்கு விலக்கு அளிப்பதே சரியானது.
புஷ்பா குமார், திருப்போரூர்.
அலுவலர்களுக்கு அறிவுரை
இணையம் மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரை செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாடுகளைத் தளர்த்தலாம். மேலும், தேர்தல் பரப்புரை குறித்த வீதி நாடகங்கள், சிறிய குழுக்கள் வழியான கலந்துரையாடல்களை உள்ளூர் காவல் துறைமூலம் அனுமதிக்கலாம். சாலையில் காரில் அவசர நிலையில் பயணிக்கும் பொதுமக்களுக்கு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் இடையூறு ஏற்படாதவாறு மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி.க்கள் அறிவுரைகள் வழங்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகளில் அதிக பாதிப்புக்கு உள்ளாவது நகர்ப்புற மக்களே.
கே.ஆர்.ராஜேந்திரன், திருப்பரங்குன்றம்.
வணிகர்கள் அவதி ரூ. 50,000-க்கும் அதிகமாக பணம்
எடுத்துச் சென்றால் அதற்கான ஆவணங்களை உடன் எடுத்துச் செல்ல வேண்டும் என்பது வணிகர்களுக்கு பெருத்த சிரமத்தை ஏற்படுத்தும். இது 30 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட விதிமுறை; தற்போது விலைவாசி உயர்ந்துள்ளதால் இந்தத் தொகையை சில மடங்கு உயர்த்தலாம். அதற்கு மேல் எடுத்துச் செல்வதற்கு மட்டுமே ஆவணங்களை எடுத்துச் செல்ல அறிவுறுத்தலாம். எண்ம பணப் பரிவர்த்தனை காரணமாக அனைத்து வணிகர்களும் ஜிஎஸ்டி வரம்புக்குள் வந்துவிட்டதால் இந்தத் தளர்வுகளை வழங்கலாம்.
ஆ. ஜூட் ஜெப்ரி ராஜ், கோவை.
எளிதாக்கலாம்
சுதந்திரமான, நியாயமான முறையில் தேர்தலை நடத்துவதற்கு நடத்தை விதிமுறைகள் தேவையான தளர்வுகளுடன் அமல்படுத்தப்படுகின்றன. இது அரசியல் கட்சிகளின் ஒழுங்கை உறுதி செய்கிறது. முக்கிய அம்சங்களாக, தேர்தல் காலத்தில் அரசின் வளர்ச்சிப் பணிகள் முழுமையாக நிறுத்தப்படாமல் அவசர பொதுநலத் திட்டங்களுக்கு அனுமதி வழங்குதல்; நிர்வாகம் பாதிக்காத வகையில் அரசு அதிகாரிகளின் இடமாற்றங்களைத் தவிர்த்தல்; மக்கள் நலன்களுக்கு நேரடித் தொடர்புள்ள சிறிய திட்டங்கள் தொடர அனுமதி வழங்குதல் என நடைமுறைகளை எளிதாக்க வேண்டும்.
ரமேஷ் ராஜேந்திரன், சேலம்.
உடனடித் திட்டங்கள்...
தமிழகம் உள்பட 5 மாநிலத் தேர்தல் நேர்மையுடனும், வெற்றிகரமாகவும் நடைபெற தேர்தல் ஆணையம் விதித்துள்ள அனைத்துக் கட்டுப்பாடுகளும் முக்கியமானவை என்றாலும், நடைமுறைச் சிக்கல்களை உத்தேசித்து சில தளர்வுகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளலாம். முக்கியமாக ரொக்கப் பரிமாற்றம் ரூ 50,000-க்குள் இருப்பது இன்றைய பண மதிப்பில் மிகக் குறைந்த ஒன்று. எனவே, இந்தத் தொகையின் வரம்பை உயர்த்த வேண்டும். மக்களுக்குத் தேவையான, உடனடிப் பலன் தரக்கூடிய திட்டங்களை நிறைவேற்ற விதிமுறைகளில் தளர்வுகளை அறிவிக்கலாம்.
கே.ராமநாதன், மதுரை.
வெறுப்பை அதிகரிக்கும்
தலைவர்களின் சிலைகளை மூடுவது தேவையற்றது. அதைப்போல எம்.பி., எம்எல்ஏ-வாக இருந்தவர்கள் செய்த நலத் திட்ட விவரங்களில் உள்ள அவர்களின் பெயரை மறைப்பதும் தேவையற்றது. இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியது. அரசியல்வாதிகள், பொதுமக்கள் கொண்டு செல்லும் பொருள்களுக்கு இடையேயான வித்தியாசத்தை சோதனை நடத்தும் அதிகாரிகள் அறிவர். இத்தகைய நடவடிக்கை அரசு, அதிகாரிகள் மீது வெறுப்பைத்தான் ஏற்படுத்துமே தவிர, வேறு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
கடைப்பிடிப்பது கடமை
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டால் அவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். எனினும், சில விதிமுறைகள் ஏழை மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. ரூ. 50,000 வரைதான் ரொக்கமாக கொண்டு செல்ல முடியும் என்பதை ஏற்க முடியவில்லை. வங்கி போன்ற நிதி நிறுவனங்கள் மூலம் பெறப்படும் தொகைக்குத்தான் ஆவணங்கள் வைத்துக் கொள்ள முடியும். சிறுதொழில் முனைவோர் வியாபார நிமித்தம் பணப் பட்டுவாடா செய்வதற்கும் இந்த விதிமுறை பெரும் இடர்ப்பாடாக இருக்கும்.
ரெ. பிரபாகரன், செபஸ்தியார்புரம்.
தவிர்க்க வேண்டும்
திருமண நிகழ்வுக்கு ஜவுளி எடுப்பதற்கு குறைந்தபட்சம் ரூ.50,000 முதல் ரூ. ஒரு லட்சம் வரை தேவை. இதற்காக பணம் எடுத்துச் செல்லும்போது எந்த அத்தாட்சியைக் காண்பிக்க இயலும். எனவே, ரூ. ஒரு லட்சம் அல்லது ரூ.2 லட்சம் ரொக்கமாக எடுத்துச் செல்ல விதிமுறைகளில் தளர்வைக் கொண்டு வர வேண்டும். மறைந்த அரசியல் தலைவர்களின் சிலைகளை துணி போட்டு மறைக்கிறார்கள்; இது தேவையற்றது. கொடைக்கானலில் ஒரு கோயிலில் எழுதப்பட்டிருந்த கந்த சஷ்டி கவசம் மறைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் தவிர்க்க வேண்டியவை.
க. அருச்சுனன், செங்கல்பட்டு.
வாகன சோதனையில் தளர்வு
தேர்தல் விதிமுறைகளில் சிலவற்றை கட்டாயம் தளர்த்த வேண்டும். அனைத்து விதிமுறைகளையும் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. சாலைகளில் பயணம் செய்பவரின் வாகனங்களை சோதனை போடுவது; அதில் அதிகமாக பணம் வைத்திருந்தால் அது தேர்தலுக்காகத்தான் பயன்படுத்தப்படுகிறது என்றும், உடனே அதைப் பறிமுதல் செய்வது போன்ற சில விதிமுறைகளைத் தளர்த்தினால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
பிரகதாம்பாள், கடலூர்.
ஆவணங்களுக்கு...
இன்றைய சந்தை மதிப்பின்படி ஒரு பவுன் தங்கம் ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகவும், ஒரு மாட்டின் விலை ரூ.70,000-க்கும் கூடுதலாக விற்கப்படுவதால், ரூ. ஒரு லட்சம் வரை ரொக்கமாக எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. மருத்துவச் செலவு குறித்து அனைவரும் அறிந்ததே. இந்தச் சூழலில் இதுபோன்ற விதிமுறைகள் பொதுமக்களை மிகுந்த சிரமத்துக்கு உள்ளாக்குகின்றன. இதில் ஆவணங்களுக்கு அவர்கள் எங்கே போவார்கள்? அவசரத் தேவைகளுக்கானவை என்பதால், ஆவணங்களைக் கொண்டுவரவோ, தயார் செய்யவோ இயலாது என்பதைப் புரிந்து உடனடியாகத் தளர்த்துதல் அறம்.
ர. சண்முகம் ரங்கசாமி, ஈரோடு.
நிர்வாகம் முடங்கும்
தேர்தல் நடத்தை விதிகளைக் கடுமையாக அமல்படுத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருப்பது வழக்கமான நடைமுறை என்றாலும் ஊடகம், பணப் பரிமாற்றம் உள்ளிட்டவற்றில் எத்தனையோ மாற்றங்கள் வந்தும் இன்னும் பழைய நடைமுறைகளைப் பின்பற்றுவது சரியல்ல. அமைச்சர்கள் மற்றும் உள்ளாட்சி நிர்வாகப் பொறுப்பில் உள்ளோரின் துறை சார்ந்த அறைகள் பூட்டப்படுவதும், அவர்களின் தேர்தல் பிரசாரத்துக்கு சில தடைகள் விதிப்பதும் நிர்வாகத்தை முடக்குவதைப் போன்றது. தேர்தல் கண்காணிப்புக் குழுவில் இருப்பவர்களும் வெவ்வேறு மாநிலங்களில் உயர் பொறுப்பில் இருக்கும் அரசு அலுவலர்கள்தானே?
அ. கருப்பையா, பொன்னமராவதி.