முன்னெடுக்கப்பட்ட மூன்றாவது வாய்ப்பு
அரசியல் மாற்றம் - அதிகாரம் மாற்றம் என்பது தமிழ்நாட்டுக்கு புதியதல்ல; ஆனால், நிகழ்ந்திருப்பது அடிப்படை மாற்றம் என்பதால் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் கவனம் பெற்றுள்ளன.
அரசியல் மாற்றம் - அதிகாரம் மாற்றம் என்பது தமிழ்நாட்டுக்கு புதியதல்ல; ஆனால், நிகழ்ந்திருப்பது அடிப்படை மாற்றம் என்பதால் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் கவனம் பெற்றுள்ளன. தமிழக வரலாற்றில் எதிர்பாராத திருப்புமுனையாக இந்த மாபெரும் அரசியல் மாற்றம் நிகழ்ந்துள்ளது.
அரசியல் களத்தில் அதிகாரத்தில் இருக்கிற சிலருக்கு இழப்பும் இல்லாத சிலருக்கு வாய்ப்பும் மாறி வந்து திருப்பம் தருதல் என்பது வழக்கமான ஒன்றுதான். எனினும், தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் களம் 60 ஆண்டு கால நெடிய வரலாற்றை புரட்டிப் போட்டுள்ளது. அதுமட்டுமல்ல, யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லாத சட்டப்பேரவையாக நிலைத்தன்மைக்கும் சோதனைக்காலமாக ஒரு விந்தையான தீர்ப்பை தமிழ்நாட்டு மக்கள் வழங்கி உள்ளனர்.
தனி ஒருவரின் நாயக பிம்பத்தின் தாக்கம் தமிழ்நாட்டின் குக்கிராமம்வரை ஊடுருவிப் பாய்ந்துள்ளதை நாம் காண்கிறோம். கடந்த காலங்களில் இது போன்ற பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஆயினும், இத்தகைய விரைவான பலனைத் தந்ததில்லை என்று நாம் கூறமுடியும். இந்த மாற்றத்துக்கு எண்ணற்ற காரணங்கள் இருக்கின்றன. எனினும், முதன்மையான காரணமாக சமூக ஊடகங்களின் வலிமையை உணர்ந்து மக்களின் ஏக்கப் பெருமூச்சுக்கு ஆசுவாசமாக ஒரு பாய்ச்சலை நிகழ்த்தி அது வாக்குகளாக மாற்றம் பெற்றுள்ளதாய் நாம் கொள்ளமுடியும்.
Advertisement
Advertisement
அதனால், 60 ஆண்டுகளுக்குப் பிறகு திராவிட இயக்கப் பின்னணி இல்லாத ஒரு கட்சி தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்து ஆட்சி அமைத்துள்ளது. மேலும், நவீனத்துவத்தின் புதிய இயல்புகளை அடையாளம் காண்பது அரசியலில் மிக முக்கியமான தேவைகளுள் ஒன்று என்பதையும் இந்தத் தேர்தல் முடிவுகள் அரசியல் கட்சிகளுக்கு உணர்த்தியுள்ளன.
சித்தாந்த மாற்றங்களை முன் வைப்பதிலும் ஏற்றுக் கொள்வதிலும் போற்றிப் பாதுகாப்பதிலும் தமிழ்நாடு என்றுமே தனித்துவம் பெற்ற மாநிலமாக விளங்குகிறது. பணமும் திட்டங்களும் மட்டுமே சித்தாந்த வெற்றியை தக்கவைப்பதில்லை என்பதுடன் காரணகாரியத் தொடர்புகளுடன் சுயமரியாதைச் சிந்தனையின் நீட்சி புதியவடிவத்தின் தேடலை வெளிப்படுத்தியுள்ளதை இந்தத் தேர்தல் முடிவுகள் மூலம் நாம் காண்கிறோம். இது புதிதாக ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ள இளைய தலைமுறை வாக்காளர்களின் எச்சரிக்கை மணி எனக் கொள்ளலாம். இனி வருகிற காலத்தில் இன்று வெற்றி பெற்றவர்களுக்கும் இது பொருந்தக் கூடியதாக விளங்கக்கூடும்.
இந்தத் தேர்தலைப் பொருத்தவரை ஒரு முக்கியக்கூறாக விளங்குவது தலைமுறை இடைவெளி ஆகும். அது எப்போதும் புலனுக்கு எளிதில் புலப்படாத சில தன்மைகளை தன்னகத்தே கொண்டதாக உள்ளது. மனிதகுலத்தின் கூட்டுத் தேவைகளும் அதன் பகிர்வும் என்ற நிலையிலிருந்து தனிப்பட்ட தேவைகளும் அதை எவ்வாறேனும் நிறைவு செய்து கொள்ளும் போக்கும் என்ற நிலைக்கு இன்றைய தலைமுறை மாறியுள்ளது. இந்த அடிப்படையில்தான் இந்தத் தேர்தல் முடிவுகளை நாம் நோக்குதல் வேண்டும்.
இந்தத் தேர்தலில் ஓர் அரசியல் கட்சியின் வெற்றிக்கும் மற்றொரு கட்சியின் பின்னடைவுக்கும் தனி நபர்களோ, கூட்டு முயற்சியின் பலவீனமோ காரணம் அல்ல. மாறாக, முந்தைய தலைமுறையால் சரியான முறையில் புரிந்து கொள்ளப்படாத இளைய தலைமுறையின் ஆழ்மன வெளிப்பாடுகளின் விளைவு என்றே கொள்ள வேண்டும்.
ஒரு தத்துவம் நிராகரிக்கப்படுகிற சூழலில் அதை மறுதலித்து பெரும்பான்மையான இளைய தலைமுறை வாக்காளர்கள் தமிழ்நாட்டில் மக்களாட்சிக்கான புதிய பரிமாணத்தை எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர். அதைப் புரிந்து கொள்வதில் உள்ள தெளிவு மற்றும் தெளிவற்ற நிலை ஆகிய வேறுபட்ட புள்ளிகளில் தொடர்பற்று நிற்கிற இளைய மற்றும் சற்று முந்தைய தலைமுறையினரின் மாற்றுக்கோண வெளிப்பாடு இந்தத் தேர்தலில் தெளிவாகவே எதிரொலித்துள்ளது. அதனால்தான் வாக்காளர்களின் எதிர்பார்ப்பும் ஓர் அரசியல் கட்சியின் அணுகுமுறையும் பெருமளவு ஒன்றை ஒன்று நிறைவு செய்யக் கூடியதாக இருக்கிற போது வேட்பாளர் குறித்த எந்த அறிமுகத் தேவையும் இன்றி புதுமுகங்கள் வெற்றி பெற்றுள்ளனர். அவ்வாறு நிறைவு செய்யாத சூழலில் அறிமுகமான முகங்கள்கூட வெற்றி வாய்ப்பை இழந்துள்ளனர்.
தேர்தல் தொடர்பான வழக்கமான அணுகுமுறைக்கும் இன்றைய சமூக ஊடகங்களின் வழி முன்னெடுக்கப்படும் வீரியமான ஊடுருவலுக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி உள்ளது. இது வியப்பையும் அதிர்ச்சியையும் தரும் வகையில் கணிப்புகளைப் புறந்தள்ளி பல ஊகங்களை நகைப்புக்குரியதாக்கி எதிர்பாராத முடிவுகளைத் தந்துள்ளது. இளைய தலைமுறை வாக்காளர்கள் குறிப்பாக பெண்கள் உரிமை, உணர்வு மற்றும் பண்பாட்டு ரீதியாக மாற்று வடிவம் பெற்று வருவதைக் கவனத்தில் கொள்ளாது மேலோட்டமாக அணுகியதால் கணிப்புகள் தவறின என்றும் கூறலாம். ஆகவே, அரசியல் வெற்றியை விரும்புபவர்கள் மாறிவரும் சமுதாய நடைமுறைக்கேற்ப தங்களை தகவமைத்துக் கொள்ள வேண்டும் என்பது மிக நுட்பமாக உணர்த்தப்பட்டுள்ளது.
சலிப்பூட்டுகிற இலவசங்களின் வாக்குறுதிகளில் இருந்தும், அதைத் தொடர்ச்சியாக விளம்பரப்படுத்துவதிலிருந்தும் அரசியல் கட்சிகள் வெளியே வரவேண்டும்.
மக்களின் தேவைகள் இலவசங்களின் வழியே நிறைவு செய்யப்படுவதில் இருந்து மாற்றம் வேண்டும். அதற்கான ஆக்கபூர்வமான வழியை அரசியல் கட்சிகள் கண்டறிதல் வேண்டும் என்ற இடத்துக்கு தமிழ்நாட்டு இளைய தலைமுறை வாக்காளர்கள் முன்னேறியுள்ளனர்.
இதை அரசியல் கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும். இதிலிருந்து நழுவி இறுதியாக வாக்குக்கு பணம் மூலம் வெற்றியைத் தீர்மானிக்கலாம் என்ற எண்ணத்தின் தோல்வி முகத்தின் தொடக்கப் புள்ளியே இந்தத் தேர்தல் முடிவுகள் ஆகும். ஆட்சியாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மீது இருந்த பல ஆண்டுகளின் குமுறல்கள், தொடர்ச்சியான உதாசீனப்படுத்தல்கள், மற்றும் ஆணவப் போக்கு போன்றவற்றால் எழுந்த வெறுப்புணர்ச்சியை மக்கள் வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர் என்பதை உணர்தல் மிகவும் முக்கியம். ஆதலால், மக்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்குமான இடைவெளி குறைக்கப்பட்டு இணைந்து செயல்படுகிற பந்தம் உருவாக்கப்பட வேண்டும் என்பது இளைய தலைமுறை வாக்காளர்களின் பெரும்பான்மை எண்ணமாக இருக்கிறது. இதை உணர்ந்து கொள்ளுதல் அரசியல் முன்னெடுப்பாளர்களுக்கு எதிர்கால வாய்ப்புகளைச் சாதகமாக்க கூடும்.
குழந்தைகள் பெற்றோரை பெரியவர்களை நிர்ப்பந்தம் செய்தார்கள் என்றும் குழந்தைகளுக்காக பெரியவர்கள் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு வாக்களித்தார்கள் என்றும் கூறுகிற காரணங்கள் இன்று பேசுபொருளாகி உள்ளன. அது அடிப்படை ஆதாரமற்ற வாதமாகும். பொதுமக்களும் வாக்காளர்களும் தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களால் தெரிந்தோ தெரியாமலோ உதாசீனப்படுத்தப்பட்டு வந்ததே இதற்கு முதன்மையான காரணமாக இருக்க முடியும்.
மக்களாட்சியின் சக்தி என்பது அசுர வலிமை கொண்டது என்பதை தமிழ்நாட்டு மக்கள் இந்தத் தேர்தலில் நிரூபித்துள்ளனர். மக்களாட்சியின் மீது மாறா பற்று கொண்டு வாக்களித்த ஒவ்வொருவரைச் சுற்றியும் வெளிப்படுத்த வாய்ப்பு இல்லாத எண்ணற்ற கேள்விகளும் நிராகரிப்புகளும் இருந்துள்ளன. இந்த நிராகரிப்புகளின் கூட்டு வெளிப்பாட்டை மக்கள் அமைதி வழியில் புலப்படுத்தியுள்ளனர். இதன் காரணமாகவே மூன்றாவது வாய்ப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆகவே, தேர்தலை எதிர்கொண்ட தமிழக அரசியல் கட்சிகள் மனசாட்சிக்கு விரோதமின்றி தங்களை சுய பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். மக்கள் தந்துள்ள தீர்ப்பு தற்காலிகமானதே; நிரந்தரமானதல்ல. மக்களின் நலன்கள் காக்கப்படுவதற்கான பல்வேறு கொள்கைப் பின்னணி கொண்ட அரசியல் இயக்கங்கள் வலிமையுடன் செயல்படுதல் ஜனநாயகக் கட்டமைப்பின் உறுதிப்பாட்டுக்கு மிகவும் அவசியமானது.
இன்றைய தலைமுறையின் எண்ண ஓட்டங்களையும் எதிர்பார்ப்புகளையும் புரிந்து கொள்ள வேண்டிய தேவை மக்கள் பிரதிநிதிகளுக்கும் அரசியல் முன்னெடுப்பாளர்களுக்கும் பெற்றோருக்கும் ஏற்பட்டுள்ளது. பெரிய விலை கொடுத்து வெற்றியை வாங்கலாம். ஆனால், உண்மையாகக் கூறவேண்டுமென்றால் தமிழ்நாட்டின் இரு பெரும் திராவிட இயக்கங்களும் இன்று பெரிய விலை கொடுத்து தோல்வியை வாங்கியுள்ளன.
இதைப் படிப்பினையாகக்கொண்டு வாக்களித்த மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக கடுமையான சவால்களை ஏற்றுக்கொண்டு பயணிப்பதில்தான் புதிய அரசின் வெற்றி அடங்கி உள்ளது. எளிய மக்கள் எளிதில் அணுகக் கூடிய வகையில் மக்கள் பிரதிநிதிகளும் அதிகாரிகளும் இருப்பது மட்டுமல்லாது, அவர்களின் பிரச்னைகளை காது கொடுத்துக் கேட்கும் வகையில் நிர்வாக முறைகளும் எளிமைப்படுத்தப்பட வேண்டும்.
வெற்றி பெற்ற அரசியல் கட்சி இவற்றைக் கருத்தில் கொண்டு செயலாற்ற வேண்டும். ஏனென்றால் இளைய தலைமுறையினரும் பெண்களும் பெரிதும் விழிப்புணர்வு கொண்டவர்களாக மாறி வருகின்றனர்.ஆதலால், வாக்குறுதிகளைப் புறந்தள்ளி புதிய உத்திகளைப் பயன்படுத்தி வாக்காளர்களை மற்றொரு முறை சமரசப்படுத்துகிற முயற்சி இனிவரும் காலங்களில் வெற்றியை ஈட்டித் தராது என்பது உறுதி.
கட்டுரையாளர்:
கல்வியாளர்.