உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் ஒடிசாவுக்கு அரிசி ஒதுக்கீடு அதிகரிக்கும்: மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்
உணவுப் பாதுகாப்புச் சட்டம் அமலுக்கு வந்தால் ஒடிசாவுக்கான அரிசி ஒதுக்கீட்டு அளவு அதிகரிக்குமே
உணவுப் பாதுகாப்புச் சட்டம் அமலுக்கு வந்தால் ஒடிசாவுக்கான அரிசி ஒதுக்கீட்டு அளவு அதிகரிக்குமே தவிர குறையாது என்று மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக, ஒடிசா மாநில உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் நலத் துறை அமைச்சர் பிரதாப் கேசரி தேவுக்கு அவர் எழுதியிருக்கும் கடித விவரம்: உணவுப் பாதுகாப்புச் சட்டம் அமலுக்கு வந்தால் ஒடிசாவுக்கான வருடாந்திர அரிசி ஒதுக்கீட்டு அளவில் 12,000 டன் குறையும் என்று கருதி அது சம்பந்தப்பட்ட மசோதாவை எதிர்க்க நீங்கள் முடிவு செய்திருப்பதாக அறிகிறேன்.
உங்களது மாநிலத்துக்கான வருடாந்திர அரிசி ஒதுக்கீட்டு அளவில் 32,000 டன் அதிகரிக்கிறது என்பதே உண்மை.
Advertisement
Advertisement
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஒடிசாவில் வழங்கப்பட்ட சராசரி வருடாந்திர அரிசியின் அளவு கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 20.77 லட்சம் டன்னாக இருந்து வருகிறது. ஆனால் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் ஒடிசாவுக்கு மத்திய அரசின் அரிசி ஒதுக்கீடு 21.09 லட்சம் டன்னாக இருக்கும் என்று ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
மாநில அமைச்சர் மறுப்பு: ஒடிசாவுக்கு கடந்த வாரம் வந்த ஜெய்ராம் ரமேஷ், உணவுப் பாதுகாப்புச் சட்டம் அமலுக்கு வந்தால், அந்த மாநிலத்துக்கான அரிசி ஒதுக்கீடு அதிகரிக்கும் என்றார். ஆனால் அதை உடனே தேவ் மறுத்தார்.
"மாநில மக்களை ஜெய்ராம் ரமேஷ் திசை திருப்பப் பார்க்கிறார். உணவுப் பாதுகாப்புச் சட்டம் அமலுக்கு வரும்போது ஒடிசாவுக்கான அரிசி ஒதுக்கீடு 1.82 லட்சம் டன்னில் இருந்து 1.70 லட்சம் டன்னாக குறையும் என முதல்வர் நவீன் பட்நாயக் தெளிவுபடுத்தியிருக்கிறார். அதோடு உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் பயனாளி ஒருவருக்கு மாதந்தோறும் 5 கிலோ அரிசிதான் வழங்கப்படும். ஆனால் மாநிலத்தில் தற்போது மாதந்தோறும் ஒரு குடும்பத்துக்கு 25 கிலோ அரிசியை விநியோகித்து வருகிறோம்.
எனவே இச்சட்டம் நடைமுறைக்கு வந்தால் சிறிய குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்படும்' என்று தேவ் குறிப்பிட்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.