முகப்பு
புதுதில்லி

ஏழைகளின் முன்னேற்றம்தான் அரசின் நோக்கம்: முதல்வர் ஷீலா தீட்சித்

ஏழைகளையும், நலிந்த பிரிவினரையும் முன்னேற்றம் பெறச் செய்வதுதான் தில்லி பிரதேச அரசின் ஒரே நோக்கம் என்று முதல்வர்

Updated On : 12 செப்டம்பர் 2013, 10:47 am IST
பகிர்:

ஏழைகளையும், நலிந்த பிரிவினரையும் முன்னேற்றம் பெறச் செய்வதுதான் தில்லி பிரதேச அரசின் ஒரே நோக்கம் என்று முதல்வர் ஷீலா தீட்சித் தெரிவித்தார்.

நஜஃப்கர் அருகே உள்ள இஷாபூரில் ஏழை எஸ்.டி., ஓ.பி.சி., சிறுபான்மை, ஆதரவற்ற குழந்தைகளுக்கான கேஐஎஸ்எஸ் இருபாலர் இலவச உறைவிடப் பள்ளித் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. இப்பள்ளியைத் தொடக்கிவைத்து முதல்வர் ஷீலா தீட்சித்  பேசியது:

தலைநகரில் உள்ள ஏழை மக்களையும், நலிந்த பிரிவினரையும் முன்னேற்றம் பெறச்    செய்வதிலும், அவர்களுக்கான நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதிலும் தில்லி பிரதேச அரசு முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

ஒடிசா மாநிலம், புவனேசுவரத்தில் உள்ள கலிங்கா சமூக அறிவியல் மையத்தின் (கே.ஐ.எஸ்.எஸ்.) ஆதரவுடன்  இந்த உறைவிடப் பள்ளியைத் தில்லி பிரதேச அரசு அமைத்துள்ளது. இப்பள்ளியில் மாணவர்களுக்கு உணவு, தங்குமிடம், சீருடைகள், புத்தகங்கள் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். 1 முதல் 3-ஆம் வகுப்பு வரை 250 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இப் பள்ளி படிப்படியாக 12-ஆம் வகுப்பு வரை 1,500 மாணவர்களாக மேம்படுத்தப்படும். இப் பள்ளியில் சேருவதற்கு ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் உள்ள எஸ்.சி., ஓ.பி.சி., சிறுபான்மைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தகுதி உடையவர்கள்.

நாட்டில் நலிந்த பிரிவினருக்காக மாதிரி இலவச உறைவிடப் பள்ளி ஒன்றை உருவாக்கும் அரசின் முயற்சியில் பணம் ஒரு பிரச்னையாக இருக்காது. மாணவரின் கல்வி வளர்ச்சிக்காக நிதி செலவிடுவதை தில்லி பிரதேச அரசு ஒரு பொருட்டாகக் கருதாது. மாணவர்களுக்கு கல்வி புகட்டுவதுடன் தொழில் பயிற்சியும், விளையாட்டுப் பயிற்சியும் அளிக்க அரசு நடவடிக்கை எடுக்கும். கல்வி ஒன்றுதான் பிறரால் களவாடாவும், தட்டிப் பறிக்கவும் முடியாத செல்வமாகும் என்றார் முதல்வர் ஷீலா தீட்சித்.

தில்லி பிரதேச எஸ்.சி., எஸ்.டி. நலத் துறை அமைச்சர் ராஜ் குமார் சௌகான் பேசுகையில், "இந்த இலவச உறைவிட இருபாலர் பள்ளியை அமைக்க தில்லி பிரதேச அரசின் மூன்று துறைகள் இணைந்து பணியாற்றின. எஸ்சி, எஸ்டி, ஓபிசி, சிறுபான்மை நலத் துறை இப் பள்ளியை அமைப்பதற்காக போதுமான உதவிகளை அளித்தது. அதேபோன்று, கல்வித் துறை இப் பள்ளி இயங்குவதற்கு பழைய பள்ளிக் கட்டடத்தை அளித்தது. அக் கட்டடத்தைப் புனரமைக்கப் பொதுப் பணித் துறை விரைவாக செயல்பட்டது. தரமான கல்வியை அளிப்பதற்காக எனது துறை மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது' என்றார்.

மஹபால் மிஸ்ரா எம்.பி., பரத் சிங் எம்எல்ஏ, தலைமைச் செயலர் டி.எம். ஸ்போலியா உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.