கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று காலமானார்..
இயக்குநர் இமயம் பாராதிராஜா, தன்னுடைய 84-வது வயதில் உடல் நலக் குறைவால் இன்று காலமானார். என் இனிய தமிழ் மக்களே என்ற கரகரப்பு குரலோடு தன்னுடைய படங்களைத் தொடக்கியவர், இன்று உலகைவிட்டு பிரிந்தார்.
இன்று தமிழ் மண்ணிலிருந்து இயக்குநர் இமயம் விடைபெற்றுக் கொண்டது என்ற செய்தி திரையுலகினர் மட்டுமல்லாமல், அவரது திரை ரசிகர்களுக்கும் பேரிடியாகவே வந்து சேர்ந்தது.
சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய திறமையால், திரையுலகில் கோலோச்சி வந்தவர், இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை, வசனம், நடிப்பு என பன்முகத் திறன்களைக் கொண்டிருந்தார் பாரதிராஜா.
Advertisement
Advertisement
1941ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி தேனி மாவட்டம் அல்லிநகரத்தில், பெரிய மாயத்தேவர் - கருத்தம்மா தம்பதிக்கு பிறந்தவர்தான் பாரதிராஜா. இவரது இயற்பெயர் சின்னசாமி. சந்திரலீலா என்பவரை 1974ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மனோஜ் என்ற மகன் இருந்தார். ஜனனி என்ற மகள் இருக்கிறார்.
மேக்-அப் போட்ட முகங்களையும், ஸ்டைலான கதாநாயகர்களையும், கார் ஓடும் சாலைகள் பெரிய மாளிகைகளுக்குள் சுழன்று சுழன்று இயங்கிக் கொண்டிருந்த காமெராக்களை கிராமங்கள் பக்கம் திருப்பினார். கண்களைக் கூசும் சூரிய வெளிச்சத்தில், கட்டாந்தரை மண்ணில் காமெராக்களை ஓடவிட்டு மனித உணர்வுகளை படம்பிடித்து திரைக் கொட்டகைகளில் வெளியிட்டார். சாமானியர்கள் தங்கள் கிராமங்களில் நடக்கும் சம்பவங்களை திரையில் பார்த்து, உணர்வுகள் கொந்தளிக்க, கண்ணீர் விட்டும், கைதட்டியும் வரவேற்றனர். மண் தரையில் அமர்ந்து பாரதிராஜாவின் படங்களைப் பார்த்து மகிழ்ந்தவர்களும் அழுதவர்களும் ஏராளம்.
அதுவரை, ஒப்பனை செய்யப்பட்ட முகங்களுக்குப் பின்னால் கற்பளைக் கதாப்பாத்திரங்களின் நடிப்பாலும் குரல்களாலும் ஈர்க்கப்பட்டுவந்த வந்த சாமானியன், ஒப்பனையற்ற, அழுக்கு ஆடை கதாப்பாத்திரங்கள் கிராமத்துச் சாலைகளில் செருப்பு அணியாமல் தங்களைப் போலவே கிராமத்து வாடையுடன் வசனங்களைப் பேசியிருந்தது நிச்சயம் திரையுலகின் தலையெழுத்தையே மாற்றியது என்று சொல்லலாம்.
ஒரு கதை என்பது கற்பனையில் மட்டும் உருவாவது அல்ல, ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் நாள்தோறும் உருவாகிக் கொண்டே இருக்கிறது என்பதைத்தான் பாரதிராஜா தன்னுடைய இயக்கத்தின் மூலம் படங்களாக்கி, பட்டிதொட்டியெங்கும் ஓடவிட்டார்.
பாரதிராஜாவின் பல படங்களின் கதைகள், ஒவ்வொரு கிராமத்திலும் நடந்திருக்கும். அவை சில காதுகளுக்கு மட்டுமே கேட்டிருக்கும்.
அதுபோல, கிராமங்களில் தங்களுக்கென பேச குரல் இல்லாத பெண்களுக்காகவும் பல படங்களில் வலிமையான பெண் கதாபாத்திரங்களை அமைத்திருந்தார். அவர் ஏற்கனவே இருக்கும் கதாநாயகிகளை விடவும் தன்னுடைய கற்பனையில் வடித்த பெண்களையே நிஜத்தில் தேடினார். அந்த புதிய முகத்தில் மயில், குயில்களைக் கொண்டு வர முடியும் என்று தன்னுடைய திறமை கொடுத்த நம்பிக்கையால் தமிழ் சரியாக பேச முடியாதவர்களையும் நடிப்பின் வாடை இல்லாதவர்களையும் தன்னுடைய இயக்கத்தின் மூலம் பேச வைத்தார். கைதட்டுகளை வாங்கிக் கொடுத்தார்.
முதல் மரியாதையில் வடிவுக்கரசி, சிவாஜி, ராதா பேசும் வசனங்களுக்காகவே பலரும் அந்தப் படத்தைத் திரும்ப திரும்ப பார்த்தார்கள். பலரும் வடிவுக்கரசியின் பார்வையில்கூட படத்தை விமர்சித்திருந்தார்கள்.
மண் வாசனையில் ரேவதிக்காக கண்ணீர் விடாதவர்களே இருக்க மாட்டார்கள்.
வெறும் கிராமத்துப் படம் எடுப்பவர் என்ற வட்டத்துக்குள் சிக்கிக் கொள்ளாமல், சிகப்பு ரோஜாக்கள் திரைப்படம் மூலம் திரில்லர் படத்தையும் கொடுத்தார்.
முதல் மரியாதை படத்தை எடுத்த போது, அந்த படத்தின் மீது முதலில் நடிகர் சிவாஜிக்கே பிடிமானம் இல்லை என்று அவரே கூறியிருந்த நேர்காணல்கள் வெளியாகியிருந்தன. அந்தப் படத்தில் இசையமைத்ததற்கான தொகையை பாரதிராஜா கொடுத்தபோது இளையராஜா, படத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் செக் வாங்கவே இல்லை என்றெல்லாம் செய்திகளும் உண்டு. ஆனால், முதல் மரியாதைப் படத்தைப் பற்றி பேசாதவர்களே இருக்க முடியாத நிலை உருவானது.
பாரதிராஜா படங்களுக்கு இளையராஜாவின் இசைதான் உயிர் என்று பேசப்பட்டு வந்த நிலையில், அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, ஏ.ஆர். ரஹ்மானை வைத்து திரையிசைப் பாடல்களை அமைத்துக் கொண்டார்.
இப்படி எந்த வட்டத்துக்குள்ளும் அவர் அடங்கவில்லை. இயக்குநராக மட்டுமல்ல, நடிகராகவும் ஜொலித்தார். அவரது வாழ்வில் சொல்லொணாத் துயரமாக அவரது மகன் மனோஜ் மறைவுதான் அவரை பெரிய அளவில் பாதித்துவிட்டது. கடைசி காலங்களில், புத்திர சோகத்தினால் வாடிய பாரதிராஜா, இன்று உடல்நலக் குறைவால் காலமானார்.