முகப்பு
கட்டுரைகள்

வீடு அமைவதெல்லாம்...

எலி வளை ஆனாலும் தனி வளை வேண்டும்' என்பது தமிழர்களின் "வீடு தேடி அலைந்த' அனுபவத்தினால் கிடைத்த பழமொழியாகத்தான் இருக்க வேண்டும். நடுத்தர வர்க்கத்தினருக்கும், ஏழைகளுக்கும் சொந்த வீடு என்பது பெரும் கனவு. சிலருக்கு மட்டுமே அக் கனவு கைகூடும்.

Updated On : 2 மே 2013, 2:43 am IST
பகிர்:

எலி வளை ஆனாலும் தனி வளை வேண்டும்' என்பது தமிழர்களின் "வீடு தேடி அலைந்த' அனுபவத்தினால் கிடைத்த பழமொழியாகத்தான் இருக்க வேண்டும். நடுத்தர வர்க்கத்தினருக்கும், ஏழைகளுக்கும் சொந்த வீடு என்பது பெரும் கனவு. சிலருக்கு மட்டுமே அக் கனவு கைகூடும்.

வீட்டுமனை, கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வு போன்றவற்றால் பலருக்கு அக் கனவு வெறும் கனவாகவே ஆகிவிடுவதும் உண்டு. சரி, சொந்த வீடு விஷயத்தில்தான் இப்படி என்றால் வாடகை வீடாவது அவர்கள் திருப்திப்படும் அளவுக்குக் கிடைக்கிறதா என்றால் அதுவுமில்லை.

ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகள் வைத்திருக்கும் வசதி படைத்தோருக்கும், ஒரு வீடுகூட (சொந்தமாக) இல்லாத நடுத்தர வர்க்கத்தினருக்கும் ஒரேவிதமான கவலைதான், எந்த வீட்டில் குடியிருப்பதென்று!

Advertisement

Advertisement

மக்கள்தொகைப் பெருகி வருவதாலும், மனித நேயம் சுருங்கி வருவதாலும் அனைத்து வசதிகளுடன் கூடிய வாடகை வீடு கிடைப்பது அரிதாகிவருகிறது.

"யானை படுத்தாலும் குதிரை மட்டம்' என்பதைப்போல பல வீடுகளில் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடினாலும் வாடகையைக் குறைத்துக்கொள்ள மாட்டார்கள்.

சில வீடுகளோ ஆதிகால மனிதன் வாழ்ந்த இருண்ட குகைகளே தேவலாம் என்பதைப் போலிருக்கும். ஆனால் அத்தகைய வீடுகளுக்கும் எப்போதும் "கிராக்கி' இருக்கும்!

ஒருசில வீட்டு உரிமையாளர்கள் மட்டுமே தங்கள் நலன் கருதி வாடகை ஒப்பந்த விதிகளைப் பின்பற்றுகின்றனர். பெரும்பான்மையானோர் "வாடகைதாரர்கள் செய்ய வேண்டியது-செய்யக் கூடாதது' என அவர்கள் அளவில் ஒரு விதியைப் பின்பற்றுகின்றனர். அதை நாம் "விதியே' என்று கேட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

பல வீடுகள் தேடி அலைந்து இந்த வீடாவது கிடைத்ததே என்ற விரக்தி மன நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பவர், வீட்டு உரிமையாளரிடம் போய் வாடகை ஒப்பந்த விதிகளைப் பற்றி வாய் திறக்க முடியுமா?

தங்கள் வீட்டில் வாடகைக்குக் குடியிருப்போர் சொந்த பந்தங்களுடன் இருந்தால் தங்களுக்கும் ஒருவிதப் பாதுகாப்பு ஏற்படும் என வீட்டு உரிமையாளர்கள் நினைத்த காலம் மலையேறிவிட்டது. இப்போதெல்லாம், வாடகைக்கு வீடு தேடிச் செல்வோர் பொதுவாக எதிர்கொள்ள வேண்டிய கேள்விகளில் ஒன்று, "வீட்டில் எத்தனை பேர்?' என்பது.

அப்போது, தன்னைப் "பாசக்காரப் பயல்' எனப் பிறர் நினைக்க வேண்டும் என்பதற்காக "வீட்டில் அக்கா, தம்பி, அண்ணன், அப்பா, அம்மா' எனப் பட்டியலிடத் தொடங்கினால் அவ்வளவுதான், வீடு கிடைக்காமல் போய்விடும்.

கணவன்-மனைவியுடன் ஒன்று அல்லது இரண்டு குழந்தை இருப்போருக்கே வீடு கிடைக்கும் காலம் இது. வீடு கேட்டு வருபவருடன் வயதான பெற்றோரும் வசிக்கிறார் எனத் தெரிந்தாலே பலர் வீடு கொடுப்பதில்லை.

வயதானவர்கள் என்றாலே இந்த நிலைமை என்றால், மனநலம் பாதிக்கப்பட்ட அல்லது மாற்றுத்திறனாளி உறுப்பினர்களைக் கொண்ட குடும்பத்தினர் வீடு தேடி அலையும் அவலத்தைச் சொல்லவே வேண்டாம்.

"இல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பது' வள்ளுவர் கால விருந்தோம்பல். இன்றைக்கு பல இடங்களில் வீட்டு உரிமையாளர்கள் தரும் நெருக்கடியால் வந்த விருந்தினரைக்கூட வரவேற்க முடியாத நிலையே வாடகைக்குக் குடியிருப்போருக்கு ஏற்படுகிறது. அப்புறம் எப்படி வருவிருந்து பார்த்திருப்பது?

வந்திருக்கும் நெருங்கிய உறவினர்கள் ஒருசில நாள்களுக்கு மேல் தங்கினால் வீட்டு உரிமையாளர்களிடமிருந்து முதலில் முறைப்பும், அப்புறம் கண்டிப்பும் புறப்படும். அதையும் மீறி விருந்தினர்கள் தங்கினால் அதற்கென தனியாக "குறுந் தொகை' வாடகையுடன் சேர்த்து வசூலிக்கப்படும்.

தமிழகத்தில் அண்மைக்காலமாக இக் கலாசாரம் பல இடங்களில் பரவி வருகிறது. உறவினர்கள் வந்து தங்குவதால் கூடுதலாக ஏற்படும் தண்ணீர் செலவு, வீட்டைப் பராமரிக்க வேண்டிய நிலை ஆகியவற்றைக் காரணம் காட்டுகின்றனர் வீட்டு உரிமையாளர்கள்.

இதேபோல, தென் மாவட்டங்களில் வீடு கேட்டுச் செல்வோரிடம் சிலர் தொடுக்கும் கேள்வி, ""நீங்க என்ன "ஆளு'?'' என்பது. இங்கே "ஆளு' என்ற சொல்லுக்கு "ஜாதி' எனப் பொருள்.

நாம் என்ன ஜாதி, மதமாக இருந்தாலும் அவர்களுக்குப் பிடித்த ஜாதி, மதமாக இருந்தால்தான் வீட்டைப் பார்ப்பதற்கே அனுமதிப்பார்கள்.

இத்தனை நிபந்தனைகளையும் தாண்டி அன்பும், சிரித்த முகமும் உள்ள வீட்டு உரிமையாளர், நிறைந்த வசதி, குறைந்த வாடகையில் வீடு கிடைத்தால் மறுமையில் அல்ல, இம்மையிலேயே நாம் நல்ல (வாடகை) வீடு பேறு அடைந்த மகிழ்ச்சி கொள்ளலாம்.

"மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்' என்றார் கவியரசு கண்ணதாசன். மனைவி மட்டுமல்ல, (வாடகை) வீடு அமைவதுகூட இறைவன் கொடுத்த வரம்தான்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.