முகப்பு
கட்டுரைகள்

பிணம் தின்னும் சாத்திரங்கள்

சென்னைப் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய நடவடிக்கை ஒன்று தமிழகத்தின் கலை - இலக்கியவாதிகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

Updated On : 27 பிப்ரவரி 2014, 1:25 am IST
பகிர்:

சென்னைப் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய நடவடிக்கை ஒன்று தமிழகத்தின் கலை - இலக்கியவாதிகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. எழுத்தாளர் புதுமைப்பித்தனின் இரண்டு சிறுகதைகளைப் பாடத்திட்டத்திலிருந்து பல்கலைக்கழகம் நீக்கியிருக்கும் செயல்தான் அது. இதன் பின்னணியைச் சற்று பார்ப்போம்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் "சென்னைப் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ள எழுத்தாளர் புதுமைப்பித்தனின் "துன்பக்கேணி' என்கிற சிறுகதை தலித்துகளின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக உள்ளது. எனவே அச்சிறுகதையை பாடத்திட்டத்திலிருந்து நீக்க வேண்டும்' என்று கோரப்பட்டிருந்தது.

அந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, சென்னைப் பல்கலைக்கழகம் "துன்பக்கேணி' சிறுகதையை பாடத்திட்டத்திலிருந்து நீக்கியது. இந்நடவடிக்கைக்கு பல்கலைக்கழகத்திற்குள்ளேயே ஆதரவும் எதிர்ப்பும் இருந்த நிலையில், கடந்த சனிக்கிழமை பல்கலைக்கழகத்தின் "கல்வியாளர்கள் குழு' கூடியது.

Advertisement

Advertisement

அக்குழு, புதுமைப்பித்தனின் "துன்பக்கேணி' சிறுகதை நீக்கப்பட்டதை அங்கீகரித்ததோடு, பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ள, புதுமைப்பித்தனின் மற்றொரு சிறுகதையான "பொன்னகரம்' சிறுகதையையும் நீக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. இப்போது "பொன்னகரம்' கதையும் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. நீக்கப்பட்ட அக்கதைக்கு பதிலாக, புதுமைப்பித்தனின் "ஒருநாள் கழிந்தது' என்கிற சிறுகதை பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் ஒரு விஷயம். பல்கலைக்கழகம் நீக்கம் செய்திருக்கும் இரண்டு சிறுகதைகளுமே தற்போது எழுதப்பட்டவை அல்ல. 1930களில், அன்றைய இதழியலில் மறுமலர்ச்சி சர்வகலாசாலை என்று சொல்லத்தக்க "மணிக்கொடி' இதழில் எழுதப்பட்டவை.

வெளிவந்து ஏறக்குறைய எண்பது ஆண்டுகள் கடந்த பின்பு, ஒரு படைப்பு ஒரு குறிப்பிட்ட வகுப்பினரின் உணர்வுகளை புண்படுத்துவதாக இருக்கிறது என்று "கண்டுபிடிக்க'ப்பட்டிருப்பது தமிழ் இலக்கிய உலகில் இதுவரை நடந்திராதது.

மேலும், புதுமைப்பித்தன் தமிழிலக்கியத்தில் யதார்த்த படைப்புகளுக்கு முன்னத்தி ஏர். சிறுகதைகளில் மின்சாரம் பாய்ச்சியவர். தமிழிலும் உலகத்தரத்திற்கு சிறுகதைகள் படைக்க முடியும் என்பதை நிறுவியவர். தமிழில் சிறந்த சிறுகதைகளின் வரலாறு அவரிலிருந்துதான் தொடங்குகிறது.

அவருடைய கதைகளை பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் வைக்க வேண்டுமென்று யாரும் மனு போடவில்லை. அவர்களாகவே வைக்கிறார்கள் அவர்களாகவே எடுக்கிறார்கள். என்ன ...தனம் இது?

எந்தப் படைப்பையுமே அது எழுதப்பட்ட காலத்தோடும் சமூகச் சூழலோடும் பொருத்திப் பார்க்க வேண்டியது அவசியம். குறிப்பிட்ட இவ்விரு கதைகளில் ஒரு குறிப்பிட்ட வகுப்பினரின் உணர்வுகள் புண்படுவதாக சில மாணவர்கள் கருதினால், அக்கதை எழுதப்பட்ட காலத்தையும் அன்றைய சமூகச் சூழலையும் அந்த எழுத்தாளரின் இலக்கியப் பங்களிப்பையும் பற்றி விளக்கி, இலக்கியத்தை இலக்கியமாகப் பார்க்க, மாணவர்களை பயிற்றுவிக்க வேண்டியது ஆசிரியர்களின் கடமையில்லையா?

யாரோ ஒரு சிலருடைய விருப்பத்திற்காக சிறந்த கலை - இலக்கியப் படைப்புகள் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்படுமேயானால், நாளைய தலைமுறையினர் தங்களின் கடந்த கால சமூக, கலாசார வரலாற்றை அறிவதெப்படி?

சரி, இப்போது இவர்கள் புதிதாகச் சேர்த்திருக்கும் "ஒருநாள் கழிந்தது' கதையில் தங்கள் மனம் புண்படும்படியான கருத்துகள் இருப்பதாக வேறு சிலர் கூறினால் அந்தக் கதையையும் பாடத்திட்டத்திலிருந்து நீக்கிவிடுவார்களா? ஒருவேளை நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கின் தீர்ப்பில் புதுமைப்பித்தனின் கதைகளை நீக்கத் தேவையில்லை என்று உத்தரவிடப்பட்டால் அப்போது பல்கலைக்கழகம் என்ன செய்யும்?

புதுமைப்பித்தன் இந்த பல்கலைக்கழகக் கல்வியாளர் எவரிடமும் பயின்றதில்லை. ஆனால், இந்தக் கல்வியாளர்களில் பலர், புதுமைப்பித்தன் படைப்புகளை ஆய்வு செய்தே தகுதி பெற்றுள்ளனர்.

இதுபோன்ற சச்சரவுகளில் தனக்கு உடன்பாடு இல்லை என்பதை அன்றே புதுமைப்பித்தன் தனது கவிதையொன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.

"ஐயா! நான் செத்ததற்குப் பின்னால் நிதிகள் திரட்டாதீர்.

நினைவை விளிம்பு கட்டி கல்லில் வடித்து வையாதீர்.

வானத்து அமரன் வந்தான்காண், வந்ததுபோல் போனான்காண் என்று புலம்பாதீர்.

அத்தனையும் வேண்டாம்; அடியேனை விட்டுவிடும்!'

முடிக்குமுன் தமிழ் எழுத்தாளர்களுக்கு ஒரு வார்த்தை: தனது சிறுகதை எதையும் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சேர்க்க அனுமதிக்கப்போவதில்லை என ஒவ்வொரு எழுத்தாளரும் தீர்மானித்து அதன்படியே செயல்பட வேண்டும். ஏற்கெனவே பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ள சிறுகதைகளின் ஆசிரியர்கள் தங்கள் கதைகளைத் திரும்பப் பெறுவதாக அறிவிக்க வேண்டும். தகப்பனை வெளியேற்றிய வீட்டில் பிள்ளைகளுக்கு என்ன வேலை?

களையப்பட வேண்டியவை கல்விக்

கூடங்களில் மண்டியிருக்கும் களைகளே தவிர, பாடத்திட்டத்தில் இடம் பெற்றிருக்கும் கலைகள் அல்ல!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.