இளம் வயது திருமண அவலம்
பெண்கள் நாட்டின் கண்கள், வீட்டின் குலவிளக்கு என்றெல்லாம் நாம் போற்றுகிறோம், பாராட்டுகிறோம்; பெண் கல்வி குறித்து பரவலாகப் பேசப்படுகிறது.
பெண்கள் நாட்டின் கண்கள், வீட்டின் குலவிளக்கு என்றெல்லாம் நாம் போற்றுகிறோம், பாராட்டுகிறோம்; பெண் கல்வி குறித்து பரவலாகப் பேசப்படுகிறது. ஆனால், நடைமுறையில் நிலைமை தலைகீழ்.
இந்தியாவில் திருமண வயதானது சட்டப்படி பெண்களுக்கு 18 வயது என்றும், ஆண்களுக்கு 21 வயது என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் அண்மையில் வெளியாகியுள்ள ஆய்வு முடிவு நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும். 18 வயது முதல் 29 வயது வரையுள்ள பெண்களில் 25 சதவீதத்துக்கும் அதிகமானேர், திருமண வயதை அடைவதற்கு முன்னரே திருமணம் செய்து கொண்டுள்ளனர் என்று தேசிய குடும்ப நல வாரியம் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பெண்களில் 18}29 வயது வரம்பில் இருப்போரில் 28 சதவீதத்தினர், 18 வயதை அடைவதற்கு முன்னரே திருமணம் செய்துள்ளனர். ஆண்களைப் பொருத்தவரையில், 21}29 வயது வரம்பில் இருப்போரில் 17 சதவீதத்தினர் 21 வயதை அடைவதற்கு முன்னரே திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
தேசிய குடும்ப நல வாரியம் மேற்கொண்டுள்ள இந்த ஆய்வானது, நாடு முழுவதும் சுமார் 5.78 லட்சம் பெண்களிடம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தகைய இளம் வயதில் திருமணம் கொண்டவர்களில் 10 சதவீதத்தினர் 15 வயதுக்கு முன்னரே தாம்பத்ய உறவை மேற்கொண்டுள்ளனர். அதுபோல, 38% பேர் 18 வயதுக்கு முன்னரே தாம்பத்ய உறவை மேற்கொண்டுள்ளனர். 58% பெண்கள் 20 வயதில் தாம்பத்ய உறவை மேற்கொண்டுள்ளனர் என ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறப் பெண்களுடன் ஒப்பிடுகையில், நகர்ப்புறங்களில் வசிக்கும் பெண்கள் 2 ஆண்டுகளுக்குப் பின்னரே தாம்பத்ய உறவில் ஈடுபட்டுள்ளது தெரியவருகிறது.
சட்டப்படி திருமண வயதை எட்டுவதற்கு முன்னரே திருமணம் செய்து கொண்டுள்ள பெண்கள் உள்ள மாநிலங்களில் முதலிடம் வகிக்கிறது மேற்கு வங்கம். இதைத் தொடர்ந்து, பிகார், ஜார்க்கண்ட் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள். மேற்கு வங்க மாநிலத்தைப் பொருத்தவரையில், ஐந்தில் 2 பெண்கள் 18 வயதுக்கு முன்னரே திருமணம் செய்து கொள்கின்றனராம். அதாவது, மேற்கு வங்கத்தில் 44% பெண்கள், பிகாரில் 42%, ஜார்க்கண்டில் 39%, ஆந்திரத்தில் 36% பெண்கள் 18 வயதுக்கு முன்னரே திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இதில் குறிப்பிடத்தக்க அம்சம், கல்வி கற்போர் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, இளம் வயதில் திருமணம் செய்வது குறைந்து வந்துள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுபோல, திருமணம் வயதை எட்டுவதற்கு முன்னரே ஆண்களுக்கு ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், பிகார், ஜார்க்கண்ட், குஜராத், அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் திருமணங்கள் நடைபெறுகின்றன என்றும் ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்களைவிட பெண்களே இளம் வயது திருமணங்களால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என்பது கண்கூடு. இத்தகைய சூழ்நிலையால், பல பெண் குழந்தைகளுக்கு பள்ளி, கல்லூரிப் பருவ வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதே தெரியாமல் போகிறது. மேலும், போதிய கல்வியறிவும் பெற முடியாத நிலை ஏற்படுகிறது. இளம் வயதுத் திருமணத்தால் குடும்பச் சுழலில் சிக்கித் தவிப்பதிலேயே அவரது வாழ்நாள் வீணாகிறது.
இளம் வயது திருமணம் அல்லது குழந்தைத் திருமணம் என்பது இந்தியாவில் பல நூற்றாண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருவதுதான். உடல்ரீதியாகவும் மனதளவிலும் முதிர்ச்சியடையாத, பக்குவப்படாத நிலையில், பல பெண்கள் மணமாலையைச் சுமந்து வருகின்றனர். இத்தகைய இளம் வயதுத் திருமணங்களுக்கு சமூக பழக்க வழக்கங்கள், பொருளாதார நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
இளம் வயது திருமணங்களால் பெண் இறப்பு விகிதம், சிசு இறப்பு விகிதம் அதிகரிப்பு, பெண்களுக்கு பாலியல் ரீதியிலான தொல்லைகள் அதிகம் ஏற்படுகின்றன என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியில் பின்தங்கியோர், குடும்பத்தில் அதிக உறுப்பினர்களைக் கொண்டவர்கள் இத்தகைய இளம் வயது திருமணங்களை அதிகம் மேற்கொள்கின்றனர்.
குழந்தைப் பேறு பாக்கியம் உறுதி செய்ய, சில சமூகங்களில் உறவுகளுக்குள் சிக்கல் ஏற்படாமல் இருக்க, உறவு விடுபடாமல் இருக்க நெருங்கிய உறவினர்களுக்குள் மணம் முடித்தல் போன்ற காரணங்களால் இளம்வயது திருமணங்களை ஆதரித்து வந்துள்ளனர். மேலும், வறுமை, இளம் வயதில் பெண்களை விலைக்கு விற்பது, வரதட்சிணை, சமூக கலாசாரம் உள்ளிட்டவை இளம் வயது திருமணங்கள் அதிகரிக்கக் காரணங்களாக உள்ளன.
15 முதல் 19 வயது வரையுள்ள ஒரு பெண் குழந்தைப் பேற்றின்போது இறப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அதுபோல, 15 வயதுக்குக்கீழ் கர்ப்பம் தரிக்கும் பெண்களுக்கு பிரசவ காலத்தின்போது இறப்பு விகிதம் அதிகம் இருக்கும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. அதுபோல, 18 வயதுடைய பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளில் 60% குழந்தைகள் இறக்க வாய்ப்புள்ளது. மேலும், இத்தகைய வயதுடைய பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள் எடை குறைந்தும், போதிய ஊட்டச் சத்தின்றியும் பிறக்கும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இளவயது திருமண அவலம் உலகின் பல நாடுகளிலும் பரவலாகக் காணப்படுகிறது. ஆப்பிரிக்கா, தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா, மேற்கு ஆசியா, தென் அமெரிக்காவைச் சேர்ந்த நாடுகளில் மரபின் பெயரால் இளம் வயது திருமணங்கள் அதிக அளவில் நடைபெற்றுள்ளன.
இளம்வயது திருமணங்களைத் தடுக்க பல்வேறு நலத் திட்டங்களும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டாலும், அவை குறைந்தபாடில்லை. இந்த வழக்கங்களால் பெண்களுக்கு கல்வி போன்ற உரிமைகள் மறுக்கப்படுவதுடன் வாழ்வுரிமையும் பாதிக்கப்படுகிறது என்று துணிந்து கூறலாம்.
"சாத்திரங்கள் பலபல கற்பராம்... மூடக் கட்டுக்கள் யாவும் தகர்ப்பராம்' என்ற முண்டாசுக் கவி பாரதி கண்ட புதுமைப் பெண்ணைக் காணும் நாள் எந் நாளோ?