மைதானங்களில் எதிர்காலம்!
ஒரு மாநிலத்தின் எதிர்காலம் வகுப்பறையில் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. அது மைதானங்களிலும் தீர்மானிக்கப்படுகிறது.
முனைவர் செ. அ. ராகுல் கோல்டன்
ஒலிம்பிக் போட்டிகளிலும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும், காமன்வெல்த் போட்டிகளிலும் இந்தியா தொடர்ந்து தனது சாதனைகளை உயர்த்தி வருகிறது. அதில் தமிழகத்தின் பங்கு குறித்த எதிர்பார்ப்பும் கேள்வியும் எழுகிறது. பல துறைகளில் முன்னோடி மாநிலமாக விளங்கும் தமிழ்நாடு ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் தனது பெயரை பொறிக்க முடியவில்லை?
தமிழகத்தில் ஆயிரக்கணக்கான திறமையான மாணவர்கள் உள்ளனர். கிராமங்களில் ஓடிக்கொண்டிருக்கும் சிறுவர்களின் வேகமும், கடற்கரைப் பகுதிகளில் நீந்தும் குழந்தைகளின் திறமையும், மலையோரப் பகுதிகளில் வாழும் இளைஞர்களின் உடல் வலிமையும் உலகத் தரத்துக்குச் செல்லக் கூடியவை. ஆனால், அந்த திறமைகள் சரியான நேரத்தில் கண்டறியப்படுவதில்லை; ஊக்குவிக்கப்படுவதில்லை.
Advertisement
Advertisement
இதற்கு முக்கியக் காரணம், நமது கல்வி அமைப்பு இன்னும் மதிப்பெண் மையமாக இருப்பதுதான். பள்ளிகளில் மாணவர்களின் திறமைகள் மதிப்பெண்களால் மட்டுமே அளவிடப்படுகின்றன. பொதுத் தேர்வு, நுழைவுத் தேர்வு, போட்டித் தேர்வு என்று தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் கல்வி வாழ்க்கையில் விளையாட்டு பெரும்பாலும் பின்தள்ளப்படுகிறது. பல பள்ளிகளில் விளையாட்டு மைதானங்களே இல்லை. சில பள்ளிகளில் மைதானம் இருந்தாலும், விளையாட நேரமில்லை. விளையாட்டு நேரம் இருந்தாலும், அது கூடுதல் பாட வகுப்புகளுக்காக பயன்படுத்தப்படுகிறது.
உலகின் விளையாட்டில் சிறந்த நாடுகளைப் பார்த்தால் ஒரு உண்மை தெளிவாகப் புரிகிறது. ஒலிம்பிக் பதக்கங்கள் பெறும் வீரர்கள் விளையாட்டு அரங்குகளில் உருவாகவில்லை, பள்ளி மைதானங்களிலே உருவாகிறார்கள். அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, தென் கொரியா போன்ற நாடுகள் பள்ளிக் கல்வியின் ஒரு பகுதியாகவே விளையாட்டை மாற்றியுள்ளன.
ஹரியாணா மாநிலத்தை எடுத்துக்கொண்டால், நாட்டின் மக்கள்தொகையில் மிகச் சிறிய பங்கையே கொண்டிருந்தாலும், ஒலிம்பிக் மற்றும் சர்வதேச போட்டிகளில் அதிக பதக்கங்களை வென்ற வீரர்களை வழங்கியுள்ளது. காரணம், அங்கு விளையாட்டுக்கு வழங்கப்படும் சமூக மரியாதை, குடும்ப ஆதரவு மற்றும் அரசின் நீண்டகால முதலீடு. பஞ்சாப், மணிப்பூர் போன்ற மாநிலங்களும் இதே பாதையில் பயணித்து சாதித்துள்ளன.
தமிழ்நாட்டில் திறமை இல்லாததால் பதக்கம் வரவில்லை என்று யாரும் கூற முடியாது. உலக செஸ் அரங்கில் தமிழ்நாடு இன்று ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக விளங்குகிறது. சர்வதேச அளவில் கிரிக்கெட், ஹாக்கி, டென்னிஸ், ஸ்குவாஷ், தடகளம் உள்ளிட்ட பல துறைகளில் தமிழக வீரர்கள் சாதித்துள்ளனர். ஆனால், ஒலிம்பிக் பதக்கம் என்ற இலக்கை அடைய வேண்டுமானால் திறமையை உருவாக்கும் அமைப்பே அடிப்படையில் மாற வேண்டும்.
அதற்கான தீர்வு தினமும் விளையாட்டு வகுப்புகள் என்ற புதிய கல்விப் புரட்சியாகும். அனைத்துப் பள்ளிகளிலும் தினமும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் கட்டாய விளையாட்டு வகுப்பு அறிமுகப்படுத்தப்பட வேண்டும். இது திட்டமிட்ட உடற்பயிற்சி, விளையாட்டுப் பயிற்சி மற்றும் திறன் மதிப்பீடு ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை அடிப்படை உடல் இயக்கத் திறன்கள் கற்றுத்தரப்பட வேண்டும். ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களின் இயல்பான திறமைகள் கண்டறியப்பட வேண்டும். ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை சிறப்புப் பயிற்சி வழங்கப்பட வேண்டும். இதன் மூலம் மாநில அளவிலான திறமை தரவுத்தளம் உருவாக்கப்படலாம்.
ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு சிறப்பு விளையாட்டு அடையாளம் வழங்கப்பட வேண்டும். உதாரணமாக, நீலகிரி மற்றும் கொடைக்கானல் பகுதிகளை நீண்ட தொலைவு ஓட்டப் பயிற்சிக்கான மையங்களாக மாற்றலாம். கடலோர மாவட்டங்களில் நீச்சல் மற்றும் படகுப் போட்டிகளை ஊக்குவிக்கலாம். கிராமப்புறங்களில் தடகளம், மல்யுத்தம் வளர்க்கப்படலாம். நகரப் பகுதிகளில் வில்வித்தை, துப்பாக்கிச் சுடுதல், ஜிம்னாஸ்டிக்ஸ் போன்ற விளையாட்டுகளுக்கு நவீன வசதிகளை ஏற்படுத்தலாம்.
தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கி வருகிறது.
சர்வதேச பதக்க வீரர்களுக்கு உயர்ந்த ஊக்கத்தொகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. புதிய விளையாட்டு வளாகங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அடித்தளத்தில் மாற்றம் ஏற்படாவிட்டால் அதன் முழுப் பலனையும் பெற முடியாது.
அனைத்துப் பள்ளிகளிலும் கட்டாய விளையாட்டு வகுப்பு, குறைந்தபட்ச விளையாட்டு உள்கட்டமைப்பு, கூடுதல் உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனம், மாவட்ட அளவிலான திறமை கண்டறிதல் மையங்கள், பள்ளி மாணவர்களுக்கான வருடாந்திர உடற்திறன் மதிப்பீடு, ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கான சிறப்பு பயிற்சி மையங்கள், கிராமப்புற மாணவர்களின் திறமைகளுக்கு முழுக் கல்வி உதவித்தொகை, விளையாட்டு வீரர்களுக்கான மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து ஆதரவு, விளையாட்டின் மீதான பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு திட்டங்கள், பள்ளி முதல் ஒலிம்பிக் வரை ஒருங்கிணைந்த திறமை வளர்ப்பு அமைப்பு போன்றவற்றை அமல்படுத்த அரசு முன்வர வேண்டும்.
ஒரு மாநிலத்தின் எதிர்காலம் வகுப்பறையில் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. அது மைதானங்களிலும் தீர்மானிக்கப்படுகிறது. கல்வியில் முன்னுதாரணமாக திகழும் தமிழகம் விளையாட்டிலும் முன்னுதாரணமாக மாற பள்ளி மைதானங்களில் புதிய புரட்சி தொடங்க வேண்டும். எத்தனை மதிப்பெண்கள் எடுத்தாய்? என்ற கேள்வியுடன், எந்த விளையாட்டில் சாதித்தாய்? என்ற கேள்வியும் பள்ளிகளில் ஒலிக்க வேண்டும். அந்த நாள் வந்துவிட்டால், ஒலிம்பிக் மேடையில் தமிழ்நாட்டின் ஒவ்வொருவரும் இந்தியக் கொடியை உயர்த்தி நிற்கும் காட்சி நிஜமாகும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.