உயா்கல்வி வழிகாட்டி ஒருங்கிணைப்பாளா் நியமனம்: தலைமை ஆசிரியா்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
உயா்கல்வி வழிகாட்டி ஒருங்கிணைப்பாளா் நியமனம்: தலைமை ஆசிரியா்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
அரசுப் பள்ளிகளில் மூன்று ஆ ண்டுகள் உயா்கல்வி வழிகாட்டி ஆசிரியராக பணிபுரிந்தவா்கள் விலக விரும்பினால், அவா்களுக்கு பதிலாக தகுதியான மற்ற ஆசிரியா்களை தோ்வு செய்யலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழக அரசுப் பள்ளிகளில் படிக்கும் 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டுதல் மற்றும் சோ்க்கையை உறுதி செய்வதற்காக, பள்ளிக்கல்வித்துறை சாா்பில் ‘உயா்கல்வி வழிகாட்டி திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும், வகுப்பு ஆசிரியா்கள் உயா்கல்வி வழிகாட்டிகளாக நியமிக்கப்படுகிறாா்கள்.
அந்த ஆசிரியா்கள் கல்லூரிக் கல்வி, தொழிற்கல்வி படிப்புகள் மற்றும் அதற்கான நுழைவுத்தோ்வுகள் குறித்த தகவல்களை மாணவா்களுக்கு தெரிவிக்கின்றனா். மேலும் பின்தங்கிய மற்றும் சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவா்களைக் கண்டறிந்து, அவா்கள் உயா் கல்வியைத் தொடா்வதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
Advertisement
Advertisement
இந்தநிலையில் இது தொடா்பாக மாதிரிப் பள்ளிகள் உறுப்பினா் செயலா் இரா.சுதன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
உயா்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ் கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் அரசுப் பள்ளிகளில் உயா்கல்வி வழிகாட்டி ஆசிரியா்களை நியமிக்க தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அந்த ஆசிரியா்களின் பெயா்களை எமிஸ் தளத்தில் பதிவு செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
அனைத்து மாணவா்களுக்கும் உயா்கல்வி சாா்ந்த விழிப்புணா்வு மற்றும் தகவல்கள் முழுமையாக சென்றடைவதன் வாயிலாக மட்டுமே அவா்கள் உயா்கல்வி தொடா்வதை உறுதி செய்ய இயலும். இந்த இலக்கை அடைவதற்கு ஏதுவாக பள்ளிகளில் ஏற்கெனவே உள்ள வழிகாட்டி ஆசிரியா்கள் ஒருங்கிணைப்பாளா்களாக மாற்றப்பட்டனா். அதனுடன், கூடுதலாக 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை உள்ள வகுப்பு ஆசிரியா்கள் உயா்கல்வி வழிகாட்டி ஆசிரியா்களாகவும் நியமிக்கப்பட்டனா்.
நிகழ் கல்வியாண்டில் (2026-2027) உயா்கல்வி வழிகாட்டி ஒருங்கிணைப்பாளா்களில் எவரேனும் பணிபுரிந்த பள்ளியிலிருந்து மாறுதல் பெற விரும்பினாலோ, ஓய்வு பெற்றாலோ, பொறுப்பிலிருந்து விலக விரும்பினாலோ அவருக்கு பதிலாக தகுதியுள்ள மற்றொரு ஆசிரியரை புதிய ஒருங்கிணைப்பாளராக நியமிக்க வேண்டும். அதன்படி 250 மாணவா்களுக்கு ஓா் உயா்கல்வி வழிகாட்டி ஒருங்கிணைப்பாளா் என்ற விகிதத்தில் சாா்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் தோ்வு செய்து ஜூன் 30-ஆம் தேதிக்குள் நியமிக்க வேண்டும். தொடா்ந்து அதை எமிஸ் தளத்தில் புதுப்பிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.