பாஜக எனும் விருட்சத்தின் விதை!
சியாமா பிரசாத் முகர்ஜி எதற்காக உயிர்த் தியாகம் செய்தாரோ, உலகின் வல்லரசாக இந்தியா மாற வேண்டும் என்ற அவரது கனவும் இப்போது நிறைவேறிக் கொண்டிருப்பதைப் பற்றி...
இந்தியா சுதந்திரம் அடைந்ததும் பண்டித ஜவாஹர்லால் நேரு தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது. அவரது அமைச்சரவையில் மகாத்மா காந்தியின் பரிந்துரையின் பேரில் இருவர் சேர்க்கப்பட்டனர்.
ஒருவர் சட்ட அமைச்சராக இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் உருவாக வழிகோலிய டாக்டர் அம்பேத்கர்; மற்றொருவர், இந்திய அரசியலில் நேரு குடும்ப ஆட்சியின் வீழ்ச்சிக்கு விதை போட்ட டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி. 1947-இல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, நம் தாயகத்தை இந்தியா, பாகிஸ்தான் என இரு துண்டுகளாக்கி ஆங்கிலேயர்கள் தந்தனர்.
பாகிஸ்தான் என அறிவிக்கப்பட்ட பகுதிகளில், ஹிந்துக்கள் மீது நடத்தப்பட்ட கொடூர வன்முறையில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் இனப் படுகொலை செய்யப்பட்டனர். உலக வரலாற்றில் எங்கும் நடந்திராத கொடூரம் இது. தேசப் பிரிவினையின்போது நடைபெற்ற கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை பண்டித நேரு தலைமையிலான காங்கிரஸ் கைவிட்ட நிலையில், அவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். உதவிக் கரம் நீட்டியது. இதனால், சுதந்திர இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். மிக வேகமாக வளர்ந்து கொண்டிருந்தது. அன்றைய
Advertisement
Advertisement
ஆர்.எஸ்.எஸ். தலைவர் குருஜி கோல்வல்கர் சென்ற இடங்களில் எல்லாம் பல்லாயிரக்கணக்கானோர் தன்னார்வமாக திரண்டனர். இதனால், காங்கிரஸுக்குப் போட்டியாக ஆர்.எஸ்.எஸ். உயர்ந்து விடுமோ என்கிற அச்சம் பிரதமர் நேருவுக்கு எழுந்தது. 1948 ஜனவரி 30-ஆம் தேதி மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டார். ஆர்.எஸ்.எஸ். மீது வீண் பழி சுமத்தப்பட்டு அந்த அமைப்பு தடை செய்யப்பட்டது. குருஜி கோல்வல்கர் சிறையில் அடைக்கப்பட்டார். ஆர்.எஸ்.எஸ்.ஸின் செயல்பாடுகள் முழுவதுமாக முடங்கின. இனி ஆர்.எஸ்.எஸ்.ஸின் கதை முடிந்து விட்டது என அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால், சிறையில் இருந்தவாறே குருஜி கோல்வல்கர் மேற்கொண்ட முயற்சிகளால் ஆர்.எஸ்.எஸ். மீதான தடை விலக்கப்பட்டது.
மகாத்மா காந்தி படுகொலை என்ற நெருப்பாற்றை நீந்திக் கடந்தபோதுதான், அரசியல் அதிகாரம் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை ஆர்.எஸ்.எஸ். உணர்ந்தது. சிறையில் இருந்து வெளியே வந்ததும், புதிய கட்சி தொடங்குவது குறித்து குருஜி கோல்வல்கர் ஆலோசிக்கத் தொடங்கினார். அதுவரை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பெரும்பான்மை ஹிந்துக்களின் நலன் பாதிக்கப்படாமல் பாதுகாப்பதில் மட்டுமே முனைப்பாக இருந்த கலாசார இயக்கமாக இருந்தது.
இந்தத் தருணத்தில்தான் நேருவின் ஹிந்து விரோத செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, 1950 ஏப்ரல் 6-ஆம் தேதி மத்திய அமைச்சர் பதவியிலிருந்து சியாமா பிரசாத் முகர்ஜி ராஜிநாமா செய்தார். காங்கிரஸுக்கு மாற்றாக புதிய கட்சி தொடங்கும் எண்ணத்தில் இருந்த அவர், குருஜி கோல்வல்கரை சந்தித்தார். இந்தச் சந்திப்பு, இந்திய அரசியல் வரலாற்றை மாற்றி எழுதப் போகும் சந்திப்பு என்பதை அப்போது யாரும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.
இந்தச் சந்திப்பின் விளைவாக 1951 அக்டோபர் 21-ஆம் தேதி தில்லியில் "பாரதிய ஜன சங்கம்' என்ற அரசியல் கட்சி பிறந்தது. 1952-இல் நடைபெற்ற முதல் மக்களவைத் தேர்தலில் ஜன சங்கம் மூன்று இடங்களில் வென்றது. கொல்கத்தா தென்கிழக்கு தொகுதியில் வென்று காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்தார் சியாமா பிரசாத் முகர்ஜி.
இப்படி தொடங்கிய பயணம் இன்று தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி செய்யும் அளவுக்கு வளர்ந்துள்ளது. சியாமா பிரசாத் முகர்ஜியின் பின்னணி அசாதாரணமானது. பண்டித ஜவாஹர்லால் நேருவுக்கு எந்த வகையிலும் குறைவில்லாதது. 1901-ஆம் ஆண்டு ஜூலை 6-ஆம் தேதி கொல்கத்தாவில் புகழ் பெற்ற குடும்பத்தில் பிறந்தவர் சியாமா பிரசாத் முகர்ஜி. தந்தை ஆசுதோஷ் முகர்ஜி; தாய் ஜோக்மயா தேவி.
1924-இல் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பதிவு செய்த அவர், 1926-இல் பிரிட்டனில் சட்ட மேற்படிப்பு முடித்தார். 1934-இல் தனது 33-ஆவது வயதில் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சியாமா பிரசாத் முகர்ஜி நியமிக்கப்பட்டார். உலகின் மிக இளம் வயது துணைவேந்தர் அவர்தான். நான்கு ஆண்டுகள் துணைவேந்தராக உயர் கல்வித் துறையில் அவர் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் இன்றளவும் பேசப்படுகின்றன. மாகாண சட்டப்பேரவை உறுப்பினர், மாகாண எதிர்க்கட்சித் தலைவர், மாகாண நிதி அமைச்சர், இந்து மகா சபை தலைவர் எனப் பல்வேறு பொறுப்புகளில் காலத்தால் நிலைத்து நிற்கும் சாதனைகள் படைத்த சியாமா பிரசாத் முகர்ஜிக்கு பாரதிய ஜன சங்கத்தை வலுப்படுத்த உறுதுணையாக பண்டிட் தீன்தயாள் உபாத்யாய, பால்ராஜ் மதோக், வாஜ்பாய், அத்வானி, நானாஜி தேஷ்முக் போன்றோரை அரசியல் களத்துக்கு குருஜி கோல்வல்கர் அனுப்பினார்.
அதன் முதல் தேசிய மாநாடு 1952 டிசம்பரில் கான்பூரில் நடைபெற்றது. நாடு சுதந்திரம் அடைந்தபோது 17 மாகாணங்களும், 565 சமஸ்தானங்களும் இருந்தன. ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியால், சில சமஸ்தானங்கள் பாகிஸ்தானுடன் இணையவும், பல சமஸ்தானங்கள் தனி நாடாகவும் இருக்க விரும்பின.
இது பெரும் ஆபத்தில் முடியும் என்பதை உணர்ந்த நாட்டின் முதல் துணைப் பிரதமர் சர்தார் வல்லபபாய் படேல் ராணுவத்தை அனுப்பி, முரண்டு பிடித்தவர்களை வழிக்கு கொண்டுவந்து, சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைத்தார்.
ஜம்மு- காஷ்மீர் மாநில மன்னர் ஹரிசிங் தனி நாடாக இருக்க விரும்பினார். சர்தார் படேலின் விருப்பப்படி, மன்னர் ஹரிசிங்குடன் பேச்சு நடத்திய குருஜி கோல்வல்கர், தனி நாடாக இருப்பது பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்பதைப் புரிய வைத்து இந்தியாவுடன் இணைய சம்மதிக்க வைத்தார்.
அன்றைய பண்டித நேரு அரசின் கவனக்குறைவால் நம் காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்துக் கொண்டது. காஷ்மீரின் எஞ்சிய பகுதி இந்தியாவுடன் இணைந்தபோதும், தனி அந்தஸ்து என்ற பெயரில் தனி நாடு போலவே இருந்தது. தனி கொடி, தனி அரசியல் சட்டம், முதல்வரை பிரதமர் என அழைப்பது என, இந்திய நாட்டின் ஓர் அங்கமாக காஷ்மீர் இருக்கவில்லை; அதுமட்டுமல்ல, வெளிநாடுகளுக்குச் செல்ல நுழைவு இசைவு (விசா) வாங்குவதுபோல, இந்தியர்கள் தங்கள் நாட்டின் ஒரு பகுதியான காஷ்மீர் செல்ல அனுமதி பெற வேண்டியிருந்தது.
இதை எதிர்த்தும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வகை செய்யும் 370-ஆவது சட்டப் பிரிவை நீக்கவும் கோரி, சியாமா பிரசாத் முகர்ஜி பெரும் போராட்டத்தைத் தொடங்கினார். தடையை மீறி காஷ்மீருக்குள் நுழையும் போராட்டத்தை அறிவித்தார். 1953 மே 11-ஆம் தேதி காஷ்மீருக்குள் நுழைய முயன்ற அவரைக் கைது செய்து ஸ்ரீநகர் சிறையில் அடைத்தனர். அதே ஆண்டு ஜூன் 23-ஆம் தேதி சிறையில் இருக்கும்போதே மர்மமான முறையில் அவர் உயிரிழந்தார். பண்டித நேருவுக்குப் போட்டியாக அரசியலில் பெரும் சக்தியாக வர வேண்டியவர்
காஷ்மீர் சிறையில் உயிரிழந்தது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. சியாமா பிரசாத் முகர்ஜியின் மரணத்தின் மர்ம முடிச்சு இன்றுவரை அவிழ்க்கப்படவில்லை. ஆனாலும், அவர் விதைத்த விதை, முளைவிட்டு, மெல்ல மெல்ல வளர்ந்து பாஜக என்ற உலகின் மிகப் பெரிய அரசியல் கட்சியாக இப்போது விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. தீவிரமான கொள்கைப் பிடிப்பாளராக இருந்தபோதும், மதம், ஜாதி, மொழி, கொள்கை வேறுபாடுகளை கடந்து அனைவரிடமும் நட்பு பாராட்டியவர் சியாமா பிரசாத் முகர்ஜி.
தமிழ்நாடு பாரதிய ஜனசங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்றவர் வி.கே.ஜான். அப்போது சென்னை மாகாண சட்டமேலவை எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருந்த, கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த அவர் ஜனசங்க தலைவரானது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. இது குறித்து அப்போது வி.கே.ஜானிடம் கேட்டபோது, "பிரிட்டனில் சட்டம் படித்தபோது சியாமா பிரசாத் முகர்ஜியுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர் தலைவராக இருக்கும் கட்சி தவறானதாக இருக்கவே முடியாது' என்றார்.
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்குவதற்காக தனது உயிரைத் தியாகம் செய்தார் சியாமா பிரசாத் முகர்ஜி. 66 ஆண்டுகள் கழித்து அவரது உயிர்த் தியாகத்துக்கு பலன் கிடைத்தது. 2019 ஆகஸ்ட் 5-ஆம் தேதி இந்திய நாடாளுமன்றத்தில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-ஆவது சட்டப் பிரிவை நீக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. சியாமா பிரசாத் முகர்ஜி எதற்காக உயிர்த் தியாகம் செய்தாரோ, அதன் நோக்கம் நிறைவேறியிருக்கிறது.
உலகின் வல்லரசாக இந்தியா மாற வேண்டும் என்ற அவரது கனவும் இப்போது நிறைவேறிக் கொண்டிருக்கிறது. பாரத தேசம் உள்ள வரை சியாமா பிரசாத் முகர்ஜி நினைவுகூரப்படுவார்.
இன்று (ஜூலை 6) சியாமா பிரசாத் முகர்ஜியின் 125-ஆவது பிறந்த நாள்.
கட்டுரையாளர்: முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.