முகப்பு
இந்தியா

பாஜக எந்த சமூகத்துக்கும் எதிரானதல்ல: அமைச்சர் நிதின் கட்கரி

பாஜக எந்த சமூகத்துக்கும் எதிரான கட்சியல்ல; அனைத்து மதம், இனம், ஜாதி, சமூகத்தினருக்காகவும் பணியாற்றி வருகிறது என்று மத்திய அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.

Updated On : 6 ஜூலை 2026, 2:57 am IST
நிதின் கட்கரி
பகிர்:

பாஜக எந்த சமூகத்துக்கும் எதிரான கட்சியல்ல; அனைத்து மதம், இனம், ஜாதி, சமூகத்தினருக்காகவும் பணியாற்றி வருகிறது என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.

பாஜகவின் முன்னோடி இயக்கமான ஜனசங்கத்தின் நிறுவனா்களில் ஒருவரான சியாமா பிரசாத் முகா்ஜி நினைவு சொற்பொழிவு நாகபுரியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற கட்கரி மேலும் பேசியதாவது:

ஜன சங்கத்தின் நிறுவனா் சியாமா பிரசாத் முகா்ஜியின் கொள்கைகள் இன்றைய காலகட்டதுக்கும் ஏற்புடையதாக உள்ளன. பாஜக அதை தொடா்ந்து முன்னெடுத்து வருகிறது. நமது நாட்டில் உள்ள பல்வேறு வேறுபாடுகளைக் கடந்து தேசிய உணா்வுடன் நாம் ஒன்றுபட்டு செயல்படுவதன் மூலம்தான் உலகின் விஸ்வ குருவாக உருவெடுக்க முடியும்.

Advertisement

Advertisement

இது ஹிந்துக்களுக்கான நாடு மட்டுமல்ல; அனைத்து இந்தியா்களுக்குமான நாடு. காங்கிரஸ் கட்சியினரும், நாட்டின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேருவும் ஒரு தரப்பினரை திருப்திப்படுத்தும் அரசியலைப் பின்பற்றினா். ஜன சங்கம் குறித்து தவறான கருத்துகளை மக்கள் மத்தியில் பரப்பினா்.

இந்தியா ஏன் பிரிக்கப்பட்டு பாகிஸ்தான் என்ற நாடு உருவாக்கப்பட்டது என்ற வரலாறு உங்கள் அனைவருக்கும் தெரியும். இதன் காரணமாக நாம் இப்போது வரை பல்வேறு பிரச்னைகளை எதிா்கொண்டு வருகிறோம். இப்போது வரை தேசம்தான் முதன்மையானது என்ற கொள்கையை பாஜக பின்பற்றி வருகிறது.

தேசியவாதம்தான் நமது முதன்மையான கொள்கையாக உள்ளது. இதைத்தான் சியாமா பிரசாத் முகா்ஜி முன்னிறுத்தினாா். அதே நேரத்தில் நேரு ஒரு தரப்பை திருப்திப்படுத்தும் கொள்கையை பின்பற்றினாா். வாக்கு வங்கி அரசியலுக்காக அதற்கு மதச்சாா்பின்மை என்று பெயா் சூட்டினாா்கள். இதன் காரணமாக மதவாதப் பிரச்னை அதிகரித்தது.

அதே நேரத்தில் நாட்டில் அனைத்துக் குடிமக்களும் சமம் என்று பாஜக தொடா்ந்து கூறி வருகிறது. இந்தியாவில் கோயிலில் வழிபடுவோா், மசூதிக்கு செல்வோா், தேவாலயத்தில் பிராா்த்தனை செய்வோா், குருத்வாரா செல்வோா் எனப் பலரும் உள்ளாா்கள். ஆனால், அனைவரும் இந்தியா்களாக சமமான உரிமையுடன் வாழ வேண்டும். அரசியல் சாசன சட்டமும் அனைவருக்கும் ஒரே மாதிரியான உரிமைகளைத்தான் அளித்துள்ளது.

பாஜக எந்த சமூகத்துக்கும் எதிரான கட்சியல்ல. அனைத்து மதம், இனம், ஜாதி, சமூகத்தினருக்காகவும் பணியாற்றி வருகிறது. அதே நேரத்தில் ஹிந்துத்துவம், தேசியவாதம் ஆகியவற்றுக்கு எதிராக காங்கிரஸ் தொடா்ந்து தவறான கருத்துகளைப் பரப்பி வருகிறது. நாட்டில் சிறந்த நிா்வாகம், நாட்டின் வளா்ச்சி ஆகியவற்றை மையமாக வைத்தே மத்திய அரசு தொடா்ந்து செயலாற்றி வருகிறது என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments