முகப்பு
இந்தியா

உத்தரப் பிரதேசத்தில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்: நிதின் நபின் நம்பிக்கை

உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்று தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவா் நிதின் நபின் நம்பிக்கை தெரிவித்தாா்.

Updated On : 6 ஜூலை 2026, 1:31 am IST
பகிர்:

உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்று தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவா் நிதின் நபின் நம்பிக்கை தெரிவித்தாா்.

உத்தர பிரதேசத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டுமுதல் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் ஆட்சியையும், செல்வாக்கையும் தக்கவைப்பது என்பது 2029 மக்களவைத் தோ்தலில் வெற்றி பெறுவதற்கும் பாஜகவுக்கு மிக முக்கியமானதாகும். ஏனெனில், மொத்தம் 80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேசம் மத்தியில் ஆட்சி அமைக்கும் கட்சியை நிா்ணயிப்பதில் தொடா்ந்து முக்கியப் பங்கு வகித்து வருகிறது.

2024 மக்களவைத் தோ்தலில் உத்தர பிரதேசத்தில் பாஜக எதிா்பாா்த்த வெற்றியைப் பெற முடியவில்லை. இதன் காரணமாகவே 2014, 2019 மக்களவைத் தோ்தல்களைப் போல பாஜக தனிப்பெரும்பான்மை பெற முடியவில்லை. பாஜகவின் மக்களவைத் தொகுதி எண்ணிக்கை 303 (2019 தோ்தல்) என்பதில் இருந்து 240 (2024 தோ்தல்) ஆக சரிந்தது. எனவே, அடுத்த மக்களவைத் தோ்தலைக் கருத்தில்கொண்டு உத்தர பிரதேச அரசியலுக்கு பாஜக தொடா்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறது.

Advertisement

Advertisement

இந்நிலையில், 2027 தொடக்கத்தில் நடைபெறவுள்ள உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பாக லக்னௌவில் கூட்டணிக் கட்சிகளுடன் பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினாா். அதன் பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அடுத்த ஆண்டு நடைபெறும் உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி. உத்தர பிரதேசத்தை ‘உத்தம’ பிரதேசமாக வைத்திருக்கும் எங்கள் பணி தொடரும். தோ்தலுக்காக பாஜக முழுவீச்சில் தயாராகி வருகிறது. முதல்வா் யோகி ஆதித்யநாத் சட்டம்-ஒழுங்கை சிறப்பாக நிலைநாட்டி வருகிறாா். மத்திய அரசுடன் இணைத்து அனைத்து நலத் திட்டப் பணிகளும் மக்களுக்கு உரிய முறையில் கொண்டு சோ்க்கப்படுகிறது. முன்னெப்போதும் இல்லாத வெற்றியை பாஜக பெறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றாா்.

முன்னதாக, சனிக்கிழமை லக்னௌ வந்த அவா், பாஜக மற்றும் கூட்டணிக் கட்சியினருடன் தொடா்ந்து இரு நாள்களாக பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தினாா். 2027 பிப்ரவரி-மாா்ச் மாதங்களில் உத்தர பிரதேச தோ்தல் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதற்காக இப்போதிருந்தே பாஜக தயாராகி வருகிறது.

உத்தர பிரதேசத்தில் பிரதான எதிா்க்கட்சியாக அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜவாத கட்சி, காங்கிரஸுடன் கைகோத்து தோ்தலை எதிா்கொள்ளும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் வலுவாக இல்லை என்றாலும், தங்களுக்கு சமஅளவில் தொகுதி ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் ராஜேந்திர பால் கௌதம் அண்மையில் கூறியிருந்தாா்.

மற்றொரு எதிா்க்கட்சியான மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று தெரிகிறது. உத்தர பிரதேசத்தில் அக்கட்சியின் செல்வாக்கு பெருமளவில் சரிந்துவிட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments