மனதை ஒருமுகப்படுத்தும் வாசிப்பு
புத்தகங்கள் என்னவெல்லாம் செய்யும் என்று கேட்பவர்களுக்கு புரட்சிகூடச் செய்யும் என்று சொல்ல முடியும்.
புத்தகத்தை மேலிருந்து கீழாக வாசித்தவர்களின் வாழ்க்கை கீழிருந்து மேலாகச் செல்லும், தலைகுனிந்து படித்தவர்கள்தான் பின்னாளில் தலைநிமிர்ந்து செல்கிறார்கள், எந்தப் புத்தகத்தை நாம் மீண்டும் மீண்டும் எடுத்து வாசிக்கிறோமோ அது நல்ல புத்தகம் இல்லை, எந்தப் புத்தகம் நம்மை மீண்டும் மீண்டும் தேடி எடுத்து வாசிக்கத் தூண்டுகிறதோ அதுதான் நல்ல புத்தகம் என்று சிலர் உவமை கூறுவார்கள்.
படி! படி! நூலைப் படி! சங்கத் தமிழ் நூலைப்படி! என்று முறைப்படி மாணவர்களை ஊக்கப்படுத்தி, எப்படி படிக்க வேண்டும், எதை எதைப் படிக்க வேண்டும், எப்போதெல்லாம் படிக்க வேண்டும், படிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று தன் பாடலில் வகைப்படுத்தி, வழிகாட்டி பாடி வைத்தார் பாவேந்தர் பாரதிதாசன். காலை எழுந்தவுடன் படிப்பு என்று சிறு பிள்ளைகளுக்கு முதன்முதலில் பாடவேளைகளைப் பிரித்து அட்டவணை தயாரித்துக் கொடுத்தார் மகாகவி பாரதியார்.
புத்தகங்கள் என்னவெல்லாம் செய்யும் என்று கேட்பவர்களுக்கு புரட்சிகூடச் செய்யும் என்று சொல்ல முடியும். அறிவுப் புரட்சிதானே என்று நீங்கள் கேட்கலாம்; ஆனாலும், ஆட்சியிலும் புரட்சி செய்திருக்கிறது. ஆம், ரஷியாவில் மாபெரும் புரட்சி ஏற்பட்டு மறுமலர்ச்சி தோன்ற மக்கள் சிந்தனையில் மாற்றம் ஏற்பட உந்துசக்தியாக அப்போதைய 10 புத்தகங்கள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
Advertisement
Advertisement
தொல் தமிழ்நாட்டைப் பொருத்தவரை வழிபடும் கடவுளையும் நிறைய வாசித்தவர்களாக, கற்றவர்களாகத்தான் கொண்டாடியிருக்கிறார்கள். திருமுருகாற்றுப்படையில் முருகப் பெருமானை நக்கீரர் புகழ்ந்து போற்றும் போது "மாலவன் மார்ப! நூலறி புலவ!' என்று பாடுவார். நூல் பல கற்றவரைத்தான் கடவுளாக வழிபட்டிருக்கிறார்கள். அறமும், நெறியும், இலக்கியமும் இலக்கணமும் வாழ்வியலும் தத்துவமும் கற்ற புலவர்கள், அறிஞர்கள் விவாதிக்கக்கூடிய அவைதனில் நெற்றிக்கண் கொண்ட சிவனும் ஒருவராக அமர்ந்து ஆய்வில் பங்கு பெற்றிருக்கிறார்.
புத்தகத்தை வாங்கி வாசிப்பவர்கள் உண்டு; புத்தகங்களிலேயே வசிப்பவர்களும் உண்டு; அதன் எழுத்துகளை, கருத்துகளை, கற்பனையை, அழகை, வாசத்தை, வண்ணத்தை, எழுதியவரின் எண்ணத்தை நேசிப்பவர்கள் உண்டு; இனியாவது ஒரு புத்தகத்தை வாங்கி வாசித்துவிட வேண்டும் என யோசிப்பவர்கள் உண்டு; படித்துவிட்டு பின்பு தந்துவிடுகிறேன் என்று பிறரிடம் புத்தகங்களை வாங்குபவர்களும் உண்டு. ஒருமுறை தான் படித்தது அடுத்து வர இருக்கிற ஏழு பிறப்பிலும் உடன் வந்து புகழ் சேர்க்கும் என்கிறார் வள்ளுவர்.
வாசகர்கள்தான் ஒரு சிந்தனையாளரை எழுத்தாளராக்குகின்றனர். வாசகர்கள்தான் ஒரு தொழில்முனைவோரைப் பதிப்பாளராகவும், அச்சிடுவோராகவும், வெளியிடுவோராகவும் மாற்றுகின்றனர். தேனீக்கள் மலர்தோறும் வாசம் செய்து நுகர்ந்து பனித்துளியினும் சிறிய தேன் துளிகளைப் பறந்தோடி அலைந்து திரிந்து சேகரித்து தேன்கூட்டில் வைத்துப் பாதுகாத்து வைத்ததை நம் மருந்துக்கும், விருந்துக்கும், உணவுக்கும், திணவுக்கும் தந்து உதவி செய்கிறது.
அதுபோல, நாம் பல நாள்கள் தேடித்தேடி வாசித்ததை மூளைக்குள் சிந்தனைக்குள் சேகரித்து வைத்ததைப் பேச்சிலும் எழுத்திலும் நடவடிக்கையிலும் பலருடன் பகிர்ந்து கொள்வதால், தலைமுறைகள் தாண்டி வாசகர்கள் மூலம் எழுத்து ஊடுருவுகிறது. படைத்தவன் அழிந்தாலும் படைப்புகள் வாசகர்களால் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. சில ஆயிரம் ஆண்டுகள் தாண்டியும் நம் இலக்கியங்கள் நம் கைகளில் தவழ்கின்றது என்றால், அதற்கு வாசகர்களின் நேசம்தான் காரணம். எவ்வளவு பெரிய அறிஞராயினும் ஒரு காலத்தில் உடலால் மறைந்து விடுகின்றனர். அவர்கள் வாழ்நாள் முழுவதும் படித்து, கற்று, சேமித்துவைத்த மூளையும் நெருப்பாலோ நிலத்தாலோ சிதைந்து போகிறது. அவர்கள் மூளைச்சுரப்பை நூல்களாக உருவேற்றம் செய்து வைக்கிறபோது இயற்கை விதியைக் கடந்தும் அறிவு விரிந்து செல்கிறது. அடுத்த சந்ததியினரைச் சென்று சேர்ந்துவிடும் அற்புதத்தை நூல்கள் நிகழ்த்தி விடுகின்றன.
ஒரு காலத்தில் சட்டப்பேரவைகளிலும், நாடாளுமன்றங்களிலும், நீதிமன்றங்களிலும், மேடைப் பேச்சுகளிலும் புத்தகங்கள், செய்தித்தாள்களில் வரும் செய்திகள், தகவல்கள் பக்க எண் குறிப்பிடப்பட்டு சாட்சியமாக சொல்லப்படுவது அதிகமாக இருந்தது. இன்று நூல்களின் செழுமையை முகநூல் (ஃபேஸ் புக்) கொஞ்சம் கொஞ்சமாக மறைக்கத் தொடங்கி உள்ளது. நூல்களைப் பார்த்து படித்தார்கள் அன்று; முகநூலை மட்டும் பார்த்து கொண்டிருக்கிறார்கள் இன்று. அவர்களை எப்படியும் முகநூலை வாசிக்க வைத்துவிடவேண்டும் என்று சில பதிவர்கள் கடும்முயற்சி எடுக்கின்றனர்; பலன் அவ்வளவாக இல்லை.
கைப்பேசியை அவ்வப்போது கையில் எடுத்து அதன் மேலுள்ள கண்ணாடியைத் துடைத்து உள்நுழைந்து தொடுதிரையை கீழிருந்து மேலாக சிலமுறையும் மேலிருந்து கீழாக பலமுறையும் உருட்டி விரட்டித் தள்ளிவிட்டு மறுபடியும் பைக்குள் வைத்துவிடுகிறார்கள். இந்த மின்னல் வேக ஓட்டத்தை நிறுத்தி அவர்களை அங்கிருக்கும் பதிவை வாசிக்க வைக்க, வேகத்தடைபோல சிலர் எழுத்துக்கிடையே திரை நடிகர், நடிகைகளின் படத்தை வைத்து முயற்சிக்கின்றனர். அப்போதும், திடீரென்று நிறுத்தி படம் பார்க்கின்றனரே தவிர பெரும்பாலானோர் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்று வாசிப்பதில்லை. அப்படியே ஒரு சிலர் படிப்பதும் கண் பிரச்னை, கழுத்துப் பிரச்னையால் உகந்ததல்ல. ஆகவே அச்சிடப்பட்ட காகித வாசிப்பே ஆறுதல் தருவது. வாசிப்பை நேசிப்போம்; நூல் கற்று உயர்வோம்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.