முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

சேவைக் குறைபாடும் வாடிக்கையாளர்களும்...

இங்கு தமிழில் பேசும் அதிகாரிகள், ஊழியர்கள் அதிகம் பணியில் இருப்பதில்லை.

Updated On : 29 மே 2026, 6:41 am IST
பகிர்:

ஆறு. சுப்பிரமணியன்

இணையத்தின் வரவால் இன்று நாம் பல வசதிகளை அறிதிறன்பேசி மூலம் பெற்று வருகிறோம். அவசர நிதித் தேவை, தனிநபர் கடன், வங்கி சார்ந்த பணப் பரிமாற்ற சேவைகள், யுபிஐ பரிவர்த்தனைகள், இதர நுகர்வோர் சேவைகள் அனைத்தையும் கைப்பேசி வாயிலாகச் செய்துவிட முடியும். இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும்போது சில தவறுகள் நிகழ்கின்றன.

இணையவழியில் பொருள்களை வாங்குவோரில் பலரும் சேவைக் குறைபாடுகள் தொடர்பாக எங்கு தொடர்பு கொள்ள வேண்டும் என்பதை 90% பேர் அறிந்திருப்பதில்லை அல்லது அதற்கான விழிப்புணர்வை பயனர்களுக்கு நிறுவனங்கள் ஏற்படுத்துவதில்லை.

Advertisement

Advertisement

இணையத்தில் நாம் நிதித் தேவைக்காக தேடினோம் என்றால், அடுத்த சில நிமிஷங்களில் நமக்கு அறிமுகம் இல்லாத கைப்பேசி எண்களில் இருந்து வரும் அழைப்புகளில் கடன் சார்ந்த தகவல்களைத் தெரிவிப்பார்கள்.

இதேபோன்று ஆயுள்காப்பீடு, வாகனங்களுக்கான காப்பீடு என எவையெல்லாம் வணிக நோக்குடையதோ அதெற்கெல்லாம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் பேசி, மீண்டும் மீண்டும் அழைத்து தங்கள் வர்த்தகத்தை நடத்தி பணம் சம்பாதித்து விடுவார்கள்.

அதன் பிறகு, நீங்கள் அவர்களைத் தொடர்பு கொள்ள முடியாது அல்லது அவர்கள் ஒரு சேவை மையத்தின் தொலைபேசி எண்ணைத் தருவார்கள். அதை நீங்கள் தொடர்பு கொண்டால், மறுமுனையில் "ஐவிஆர்ஸ்' மூலம் தானியங்கி முறையில் குரல் பதிவு இருக்கும். அதுவும் பெரும்பாலும் ஹிந்தி மொழியில் இருக்கும். ஹிந்தி தெரியவில்லை என்றால், ஆங்கிலத்தில் பேச வேண்டும்; நீண்ட போராட்டத்துக்குப் பிறகே இணைப்பு கிடைக்கும்; ஆனால், தீர்வு கிடைக்காது.

ஒருசில அரசு வங்கிகள் தவிர எஞ்சிய அனைத்து தனியார் வங்கிகளின் சேவை மையங்களிலும் இந்த நிலைதான். தமிழில் பேச வாய்ப்பு கிடைக்காது. ஆங்கிலத்தில் பேசினாலும் அது ஹிந்தி கலந்த ஆங்கிலமாக இருக்கும். அதை அனைவராலும் புரிந்துகொள்ள இயலாது. இதனால் நிதி இழப்பு, சேவைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டோர் சோர்ந்து விடுகிறார்கள். சிறு இழப்பு என்றால் பலரும் புகார் தெரிவிப்பதே இல்லை.

இந்தியா போன்ற பல மொழிகள் பேசும் மக்கள் கொண்ட நாட்டில் சேவைக் குறைபாடுகளுக்கு உதவும் சேவை மையங்கள் பெரும்பாலும் மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, தில்லி, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் மட்டுமே உள்ளன. இங்கு தமிழில் பேசும் அதிகாரிகள், ஊழியர்கள் அதிகம் பணியில் இருப்பதில்லை.

சென்னையில் செயல்படும் சில சேவை மையங்களில்கூட தமிழில் சேவை அளிக்க ஊழியர்கள் இல்லை. இந்த சேவை மையங்களில் தமிழை ஒதுக்குவது ஏன்? என்று வங்கி நிர்வாகத்திடம் கேட்டால், தமிழ்நாட்டில் பெரும்பாலானவர்களுக்கு ஆங்கிலம் தெரியும். ஆகவே, வங்கிச் சேவை ஊழியர்கள் ஆங்கிலத்தில் பேசினாலும், தமிழ் வாடிக்கையாளர்கள் அதை அரைகுறையாகப் புரிந்து கொண்டு பதில் அளிப்பதால், தமிழ் பேசும் சேவை அதிகாரிகளைப் பணியில் அமர்த்துவதில்லை என்கிறார்கள்.

இந்த தொல்லையே வேண்டாம் என்று சிலர் நேரடியாக அருகில் உள்ள சேவை மையங்களுக்கு (கடன் மையங்கள், குறைதீர் மையங்கள்) நேரடியாகச் சென்றால் அங்கு கேட்கப்படும் கேள்விகள், உள்ளே செல்ல அனுமதி வாங்க நம் ஆதார் எண் முதல் அனைத்து விவரங்களையும் கொடுக்க வேண்டும்.

ஒரு நாள் முழுவதும் அந்த சேவை மையத்தில் காத்திருக்கும் நிலையும் ஏற்படலாம். அதிலும், தனியார் நிதி சேவை மையங்களில் மிக துயரமான அனுபவங்களைச் சந்திக்க நேரிட்ட பல வாடிக்கையாளர்கள், தங்கள் அனுபவங்களை வாட்ஸ்-ஆப்பில் பகிர்ந்துள்ளதை நம்மில் பலரும் படித்திருக்கலாம்.

இத்தகைய அனுபவங்களால் சலித்துப் போனவர்கள், புகார் அளிக்க முன்வருவது உண்டு. அவர்கள் வங்கிகள் மற்றும் வங்கி சாராத நிதி நிறுவனங்களின் சேவைக் குறைபாடு குறித்து முதலில் அந்த நிறுவனங்களுக்குத்தான் புகார் அளிக்க வேண்டும். அவர்கள் அதைத் தீர்க்காத நிலையில்தான் ரிசர்வ் வங்கியை நாட முடியும்.

இந்திய ரிசர்வ் வங்கியால் ஒழுங்குபடுத்தப்படும் வங்கி மற்றும் நிதிச் சேவைகள் தொடர்பான புகார்களை எழுப்பவும், தெளிவுரைகளைப் பெறவும் பயனர்களுக்கு ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர் சேவை உதவுகிறது. கட்டணமில்லா உதவி எண்ணைப் பயன்படுத்தி நீங்கள் ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர் சேவை எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் பணம் செலுத்தும் முறைகள் தொடர்பான குறைகளைப் பதிவு செய்ய, அதிகாரபூர்வ ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர் சேவை மின்னஞ்சல் முகவரிக்கு நீங்கள் எழுதலாம். குறைகள் தொடர்பான உதவிக்கு ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர் சேவை எண் (14448) உள்ளது.

வங்கியால் புகார்களைத் தீர்க்க முடியாதபோது மட்டுமே இந்திய ரிசர்வ் வங்கி அவற்றைக் கையாள்கிறது. பிராந்திய ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் நுகர்வோர் கல்வி மற்றும் பாதுகாப்புப் பிரிவுகள் உள்ளன. இந்திய ரிசர்வ் வங்கி வழக்கமான வங்கிச் சேவை கோரிக்கைகளைக் கையாள்வதில்லை. ரிசர்வ் வங்கியின் இந்தச் சேவை கடைசியில்தான் கிடைக்கிறது.

எனவே, சேவை மையங்களின் சேவை நேர்த்தியாகக் கிடைக்க மாவட்டந்தோறும் வங்கி, நிதி நிறுவனங்களின் தொலைபேசி வழி சேவை மையங்களை அமைக்க வேண்டும். அவற்றில் தமிழ் தெரிந்த பணியாளர்களை பணியமர்த்த வேண்டும். குறிப்பாக, உள்ளூர் மக்களை பணியமர்த்த வேண்டும்.

தமிழ்நாட்டின் வாடிக்கையாளர்களை அணுகி நிதிச் சேவைகளை வழங்கி லாபம் சம்பாதிக்கும் இத்தகைய நிறுவனங்கள் தமிழில் பேசும் அதிகாரிகள், ஊழியர்களைப் பணியமர்த்தாமல், அப்பாவி கிராமத்து தமிழ் மக்களை அலைக்கழிப்பது எந்தவிதத்தில் நியாயம்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.