சொல்லப் போனால்... ரசிக வெறியும் அரசியல்மயமும்
தவெக தலைவர் விஜய் ரசிகர்களும் இளைஞர்களும் அரசியல்மயமாக வேண்டியது பற்றி...
யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். யார் வேண்டுமானாலும் முதல்வராகலாம்; யாரையும் யாரும் எதற்காகவும் குறைகூற முடியாது; ஜனநாயகத்தில் கூடவும் கூடாது.
ஆனால்... திரைப்படத்தில் ஒரே ஒரு பாட்டில் ஆடிப்பாடி முடிந்ததும் முதல்வர் நாற்காலியில் கதாநாயகன் அமர்வதைப் போல அரசியலிலும் இன்ஸ்டன்ட் ஆக முதல்வராக விரும்பும்போது... ஏதோ திரைப்படம் எடுப்பதைப் போலவே, ரூ. 400 கோடி பட்ஜெட் திரைப்படத்துக்குப் பதிலாக, நிஜப் படத்தை (எத்தனை ஆயிரம் கோடிகள் செலவு எனத் தெரியவில்லை) எடுக்க முனையும்போது... ஒரு தேர்தல் முடிந்தவுடனே முதல்வர் நாற்காலியில் அமர்ந்துவிட முடியுமா?
தமிழ்நாட்டின் முதல்வர்களாக இருந்து மறைந்த எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருவரையும் வெறும் திரை நட்சத்திரங்களாகக் கொள்ள முடியாது. எம்ஜிஆர் மிகப் பெரும் அரசியல் பின்புலத்திலிருந்து உருப்பெற்று வந்தவர். அவருடைய அடியொற்றி வந்தவர் ஜெயலலிதா.
Advertisement
அரசியலுக்குள் நடிகர் என்.டி. ராமாராவ் நுழைந்த விதம் தனி. ஆந்திரத்தில் தெலுங்கு தேசத்தை அவர் தொடங்கியபோது அந்த மாநில நலன்களை காங்கிரஸோ, ஜனதா கட்சியோ காப்பாற்றவில்லை என்ற அதிருப்தி மக்களிடையே இருந்தது. அந்தக் கொதிநிலையைப் பயன்படுத்திக்கொண்ட என்.டி. ராமாராவ் ஊர்ஊராக மிகப் பெரிய சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு மக்களை நேரில் சந்தித்தார் (சைதன்ய ரதமோ, யாத்திரையோ என்று நினைவு). குறுகிய காலத்திலேயே வென்றார்.
இவர்களை எல்லாம் கண்டதன், கேட்டதன் கவர்ச்சியோ, தொடர்ச்சியோ, இங்கே எப்போதும் சினிமா கதாநாயகர்களுக்கு முதல்வர் பதவியின் மீது ஒரு கண் இருந்துகொண்டே இருக்கிறது; ஆசை யாரை விடுகிறது? சிவாஜி கணேசன், பாக்கியராஜ், டி. ராஜேந்தர், விஜயகாந்த், சரத்குமார், கமல்ஹாசன்... ஆனால், எம்.ஜி.ஆரைத் தவிர இங்கே வென்றவர்கள் எவருமில்லை.
இப்போது நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி, இந்தத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி, முதல்வராகும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். அது அவருடைய விருப்பம், அவருடைய அரசியல், அவருடைய கனவு.
ஒருவர் மெக்கானிக் வேலைக்குச் செல்லும்போது, எல்லாவற்றையும் கற்றுக்கொண்டுதானே செல்ல முடியும்? ஆனால், அரசியலுக்கு வருவதற்கும் அதன் மூலம் முதல்வராவதற்கும் முன்னே நடிகர் விஜய் உள்பட எவரொருவரும் தன்னை அதற்கெனத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்தானே?
மார்ச் 15 ஆம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இரு வாரங்கள் கழித்து மார்ச் 29 ஆம் தேதிதான் வீட்டிலிருந்து வெளியே வருகிறார் த.வெ.க. தலைவர் விஜய் – தனியார் ஹோட்டலில் வேட்பாளர்கள் அறிமுகம்.
தேர்தல் அறிவித்ததிலிருந்து பிரசார நிறைவு நாள் வரையிலும் மொத்தம் 38 நாள்களில் விஜய் வெளியே வந்தது மொத்தம் 14 நாள்கள் மட்டுமே (மற்ற நாள்களெல்லாம் ஓய்வு). இவற்றிலும் 9 நாள்கள் / இடங்களில் மட்டுமே பேசினார். இவற்றில் வேட்பாளர் அறிமுகம், தேர்தல் அறிக்கை வெளியீடு, திருப்பூரில் அறிக்கை வாசித்தது மற்றும் பிரசார நிறைவில் ஒய்எம்சிஏ திடலில் பேசியது எல்லாமும் அடக்கம் – நீதி வழங்க வேண்டும் என்றார்.
இதுவரையிலும் எந்தவோர் அரசியல் கட்சியுமே ஒரு சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த அளவுக்கு ஒழுங்கற்ற – மிகச் சுருக்கமான தேர்தல் பிரசாரத்தைத் திட்டமிட்டிருப்பார்களா? என்று தெரியவில்லை. கும்பிடிப்பூண்டியில் மூன்று முறை பிரசாரம் ரத்து, கடலூரில் 3 அல்லது 4 முறை அறிவிக்கப்பட்டு, ரத்து செய்யப்பட்டுக் கடைசி வரை செல்லவேயில்லை. எத்தனை முறை பிரசாரம் ரத்து செய்யப்பட்டது என்பதற்குச் சரியான கணக்கு இல்லை.
விஜய் எப்போது பிரசாரத்துக்கு வருவார்? எப்போது பிரசாரத்துக்கு வர மாட்டார்? என்பதை யாரால் சொல்ல முடியும்? இவற்றையெல்லாம் யார்தான் தீர்மானிக்கிறார்கள்?
பிரசாரத்துக்குச் சென்றுதான் தலைவர்கள் பிரசாரம் செய்வார்கள். பிரசாரத்துக்குச் செல்லாமலேயே பிரசாரத்துக்கு அனுமதி மறுக்கிறார்கள் என்று பிரசாரம் செய்ய முடியுமா? ஏதோவோர் உத்தியைப் போலவே இவர்கள் இதையும் பிரசாரம் செய்தனர். தேர்தல் ஆணையத்துக்குப் பதிலாக அரசை, திமுக என இலக்காக வைத்து.
நாட்டில் தேர்தல் பிரசாரத்தை இத்தனை முறை ரத்து செய்ததன் மூலம் வரலாற்றுப் புகழ் பெறும் அரசியல் தலைவர் அனேகமாக விஜய்யாகத்தான் இருப்பார்.
விஜய் போன்ற தீவிர ரசிகர் கூட்டத்தைக் கொண்ட நடிகர்கள் வரும்போது கூட்டம் நடத்தும் இடத்தில் தொடங்கி, கூட்டத்துக்கு வருவோர் மட்டுமின்றி, மக்களுடைய பாதுகாப்பு (கரூர்க் கதை தெரிந்ததுதானே) வரையிலும் என்னென்ன ஏற்பாடுகளைக் காவல்துறையினர் உள்பட பலரும் செய்ய வேண்டும் என்பது பற்றி முடிவு செய்வார்கள். சென்னையில் விஜய் பிரசார சாலைவலத்தால் திங்கள்கிழமை மாலை பாடி மேம்பாலம் படாதபாடுபட, போக்குவரத்து முழுவதுமாக நிலைகுலைந்தது. அவர் போகிற, வருகிற பாதைகள் தொடங்கி, அனைத்து இடங்களிலும் காவல் துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். திடீர் திடீரெனக் கடைசி நேரத்தில் பிரசாரத்தை ரத்து செய்தால் எவ்வளவு மனித உழைப்பும் திட்டமிடலும் வீண்?
(கரூரில் இரவு நேரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானதன் காரணமாகவோ, அல்லது வேறு ஏதேனும் குறிப்பிட்ட காரணத்தாலோ இந்த சீசனில் தன் ஒட்டுமொத்த பிரசாரத்தையுமே இருட்டுவதற்கு முன்னரே முடித்துக்கொண்டு விஜய் வீடுதிரும்பிவிட்டார்).
இந்தத் தேர்தல் பிரசார காலத்தில், அடுத்த முதல்வராகும் பெருங்கனவுக்கு ஊடே, ஒரு கட்சியைக்கூட 24 மணி நேர வேலையாகக் கவனிக்க முடியாத ஒருவர், 38 நாள்களில் 24 நாள்கள் ஓய்வெடுத்த ஒருவர், அதிகாரத்தைக் கைப்பற்றி, முதல்வராகிறபட்சத்தில் மட்டும் எவ்வளவு நேரம் மக்கள் பணி புரிவார்? எத்தனை முறை வெளியே வருவார்? பாவம் ரசிகர்கள் / தொண்டர்கள்.
சின்னச்சின்னதான சிலவற்றைத் தவிர்த்து, புதிதாகத் தொடங்கப்பட்ட அரசியல் கட்சியொன்றின் தலைவரைப் போல நடிகர் விஜய் நடந்துகொள்ளவே இல்லை என்றுகூட சொல்லலாம். ஒருவேளை திட்டமிட்டுச் செயல்பட்டிருந்தால் ஒவ்வொரு தொகுதிக்கும் செல்ல முடியாவிட்டாலும் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்றுவர முடிந்திருக்கும். வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி மிகச் சிறப்பான முப்பத்தெட்டு பிரசாரக் கூட்டங்களை நடத்தியிருக்க முடியும். ஆனால், இதைத் தெரிந்துகொள்ளவோ அவராலும் முடியவில்லை, எடுத்துச் சொல்ல பிறராலும் முடியவில்லை (கவனிக்க: காரைக்குடி கதை). பெரும்பாலான இடங்களில் தொகுதியின் வேட்பாளர்கூட பிரசார வாகனத்தில் ஏற்றப்படுவதில்லை.
சந்திக்கவே முடியவில்லை. இதுவரை எத்தனை பேர் விஜய்யைச் சந்தித்திருப்பார்கள், உரையாடியிருப்பார்கள், விவாதித்திருப்பார்கள், விஜய்யை அணுகவே முடியாது, சுற்றியிருப்பவர்களை அணுக முடிந்தாலும் எவ்விதப் பயனுமில்லை என்கிறார்கள் செய்தியாளர்களே.
இதுவரையிலும் ஒரே ஒரு செய்தியாளர் சந்திப்புகூட நடத்தாத, மக்கள் பிரதிநிதிகளாக இருந்து கேள்வி கேட்கக் கூடிய செய்தியாளர்களின் ஒரே ஒரு கேள்விக்குக்கூட பதிலளிக்கத் தயாரில்லாத நிலையில், நேரடியாக முதல்வராகிவிட வேண்டும் என்று நினைக்கிறார்; முதல்வராக வேண்டும் என்று அவருடைய ரசிகர்களும் விழைகிறார்கள்.
தவறில்லை; விஜய்க்குப் பெருங்கூட்டமாக ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வெறிகொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். ரசனையை மதிக்கலாம், வெறியை? திரைப்பட நடிகர், ஏராளமான ரசிகர்களை வைத்திருக்கிறார், பத்தாண்டுகளில் வந்த திரைப்படங்களில் ‘உணர்ச்சிபூர்வமான’, ‘புரட்சிகர’ வசனங்களைப் பேசியிருக்கிறார் என்பதைத் தவிர வேறு என்னென்ன தகுதிகளை பட்டியலிட அவருடைய ரசிகர்களால் இயலுமெனத் தெரியவில்லை; ரசிகர் மன்ற காலத்தில் செய்த உதவிகளைத் தவிர்த்து.
திருச்சி கிழக்கு பற்றியோ, பெரம்பூரைப் பற்றியோ, எழுதிக்கொடுக்காத வரையில் எந்த ஊரைப் பற்றியாவது, எந்தப் பிரச்சினையைப் பற்றியாவது சுயமாக எதையாவது பேச முடியுமா? (காமராஜரைப் போல, கருணாநிதியைப் போல என்றெல்லாம் கஷ்டப்பட வேண்டியதில்லை). குறைந்தபட்சம் பேசத் தெரிந்திருக்க வேண்டாமா? (இன்றைக்கு அரசியல் தலைவர்கள் சிலரின் பேச்சுகள் தரந்தாழ்ந்துவிடுவதற்குக் காரணம் உண்மையிலேயே அவர்கள் அல்ல; அவர்களுக்கு உரை எழுதிக்கொடுக்கிறவர்கள்தான். எழுதிக் கொடுப்பதைத் தலைவர்கள் பேசுகிறார்கள், எக்குத்தப்பாகச் சென்றுவிடுகிறது).
மாற்று என்பதன் மீதான ஆவல் இளைஞர்களிடம் இருக்கிறது. ஆனால், மாற்று எது என்பதிலோ, எவ்வாறு இருக்க வேண்டும் என்பதிலோ எவ்வித புரிதலும் இருப்பதாகத் தோன்றவில்லை. பொத்தாம்பொதுவாக எதற்காக இவர்களுக்கே வாக்களிக்க வேண்டும்? என்று கேள்வியெழுப்புகிற பலருக்கும் இன்னொருவருக்கு வாக்களித்தால் என்னவாகும்? என்பது பற்றிய குறைந்தபட்ச விழிப்புணர்வுகூட இருப்பதில்லை என்பது பெருந்துயரம்.
கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்பட அரசியல் கட்சிகள் எல்லாமும் இளைஞர்களை ஏமாற்றிவிட்டன என்றால்கூட மிகையில்லை. 1960, 70-களை விடுங்கள். 1980, 90-களில்கூட கல்லூரி மாணவர்கள் அரசியல்மயப்பட்டிருந்தனர். ஏதாவதோர் அரசியல் கட்சிகளுடன் அவர்கள் தொடர்பில் இருந்தனர்; குறைந்தபட்சம் ஆர்வம் கொண்டிருந்தனர். அரசியலைச் சிந்தித்தனர். பெரும்பாலான அரசியல் கட்சிகளுக்கு அமைப்புகள் இருந்தன (இப்போது அணிகளும் தலைவர்களும்தான் மட்டும்தான் இருக்கின்றனர்).
அரசியல் கட்சிகளில் இளைஞர்களுக்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கின்றன என்பதுகூட முதன்மையான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம். இன்றைய இளைஞர்களின் புரட்சியெல்லாமும் ஒன்று சமூக ஊடகங்களில் இருக்கிறது; இல்லாவிட்டால் நடிகர்களைக் காண்பதில் இருக்கிறது.
ஏனெனில், இவர்கள் அனைவரும் திரையில் வசனகர்த்தா எழுதிக்கொடுத்துக் கதாயநாயகன் பேசும் வசனங்களை எல்லாம் கொள்கை, கோட்பாடுகளைப் போல (பெரும்பாலான நேரங்களில் இவற்றைப் பற்றிப் பேசுகிற நாயகர்களுக்கே புரிந்திருக்குமா என்பது தெரியவில்லை) வரித்துக் கொண்டுவிடுகிறார்கள்.
கடைசியாக சாதாரண மனிதனாக மக்களைத் த.வெ.க. தலைவர் விஜய் சந்தித்தது எப்போது? மக்கள் தலைவர் என்று எப்போது சொல்லிக் கொள்ள முடியும்? எந்தவிதமான அடிப்படைக் கொள்கையுமில்லாமல், எந்தக் கட்சியிலிருந்து, எத்தகைய குற்றச்சாட்டுகளுடன் இருந்தவர்கள் என்றாலும் சேர்த்துக்கொண்டு வேட்பாளராகப் போட்டியிட வாய்ப்பும் அளித்திருக்கிறார்கள். பிறகெவ்வாறு மாற்று, மாறுபட்டவராக முடியும்?
தவெக தலைவர் அல்லது நடிகர் விஜய் செல்லுமிடங்களில் எல்லாம் ஆண்களும் பெண்களுமாகத் திரளுவதும் முட்டிமோதிக் கொண்டு பார்க்க முனைவதும் அடைபோல நெருக்கியடித்துக் கொள்வதும் மயங்கி விழுவதுமாக எதற்காக இந்த ஆவேசம்? சில விடியோ கிளிப்பிங்குகளைப் பார்க்கவே குலை நடுங்குகிறது. கரூரில் 41 உயிர்கள் பலியாகினவே, யார் பொறுப்பு? அவர்கள் குடும்பத்தைக் காப்பாற்றுகிறவர்கள் யார்?
இந்தக் கூட்டத்தை மட்டுமே வைத்துக்கொண்டு எல்லாவற்றையும் செய்துவிட முடியும் என்றோ, அரசியல் கட்சியை நடத்துவதும் ஆட்சியைப் பிடிப்பதும் என்றோ நினைத்தால்...
தொகுதி மறுவரையறை சட்ட முன்வரைவு பற்றி எப்படியோ தவெக தலைவர் விஜய் கருத்துத் தெரிவித்துவிட்டார், மற்றபடி பல்வேறு முக்கியமான பிரச்சினைகளில் - சொந்தப் படத்துக்குச் சோதனைவந்த காலத்திலும் - அப்படியொன்று நடந்துகொண்டிருப்பதாகக்கூட அறியாதவரைப் போல, அமைதி காக்கிறார்.
வெற்றி தோல்விகள் எல்லாம் தேர்தலுக்குப் பின். ஆனால், இந்த நண்பாக்களும் சரி, நண்பிகளும் சரி, என்ன முயற்சி செய்தாவது கட்சித் தலைவருடன் சேர்ந்து அரசியல்மயமாக வேண்டிய அவசியம் இருக்கிறது; பெருங் கூட்டமும் சவால் பேச்சுகளும் மட்டுமே போதுமானதல்ல – தேர்தலுக்குப் பிறகும்.