முகப்பு
சிறப்புக் கட்டுரைகள்

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகளிலிருந்து புறப்படும் சர்ச்சைகள் பற்றி...

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 8:15 AM
மர்ம உலகம்... - சித்திரிப்பு / விஜய்
பகிர்:
Updated On : 21 பிப்ரவரி, 2026 at 10:07 PM

எப்ஸ்டீன் கோப்புகள் வெளிப்பட்டதிலிருந்து உலகளவில் எண்ணற்ற பெருந்தலைகள் உருண்டுகொண்டிருக்கின்றன; நம்ப முடியாத அளவில் சில நாள்கள் முன் உயரத்திலிருந்த ஒருவரை வீழ்த்தியிருக்கிறது – பிரிட்டிஷ் அரசர் மூன்றாம் சார்லஸின் தம்பியும் இளவரசர் என்று முன்னர் அழைக்கப்பட்டவருமான ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் விண்ட்சர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

பிரிட்டனின் பன்னாட்டு வணிகத் தூதராக இருந்த காலகட்டத்தில் பிரிட்டிஷ் அரசின் ரகசியத் தகவல்களை அமெரிக்காவைச் சேர்ந்த நிதியாளரும் பாலியல் குற்றவாளியுமான ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்குப் பகிர்ந்ததுதான் குற்றச்சாட்டு. ஹாங்காங், வியத்நாம், சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கான தனது அதிகாரபூர்வ பயணங்கள் தொடர்பான விவரங்களை அவர் எப்ஸ்டீனுக்குப் பகிர்ந்திருக்கிறார் ஆண்ட்ரூ. பாலியல்ரீதியில் ஆண்ட்ரூவை வெற்றி கொள்ளத் தாம் (சிறுமியாக இருந்தபோது?) ஒரு முறை பிரிட்டனுக்கு எப்ஸ்டீனால் அனுப்பப்பட்டதாக ஏற்கெனவே ஒரு பெண் குறிப்பிட்டிருந்தார். ஆனால், எப்ஸ்டீனுடைய கிரிமினல் நடவடிக்கைகள் பற்றித் தமக்கு எதுவும் தெரியாதெனத் தொடர்ந்து மறுத்துவருகிறார் ஆண்ட்ரூ (சட்டம் தன் கடமையைச் செய்யும் எனக் கைகழுவி விட்டார் மன்னர் சார்லஸ்!).

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 10:08 PM

எப்ஸ்டீன் கோப்புகள் வெளிப்படுத்துதல் சட்டத்தின்படி, 2026 ஜன. 30 ஆம் தேதி சுமார் 30 லட்சம் பக்கங்கள், 1.80 லட்சம் புகைப்படங்கள், 2 ஆயிரம் காணொலிகளை அமெரிக்க நீதித் துறை வெளியிட்டது. இவற்றில் பல பெரும்புள்ளிகள் தொடர்புடைய பதறச் செய்யும் படங்களும் சிக்கலான மின்னஞ்சல்களும் இடம் பெற்றிருக்கின்றன.

Advertisement

தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், முன்னாள் அதிபர் பில் கிளின்டன், பிரிட்டிஷ் தூதர் பீட்டர் மான்டல்சன், எலான் மஸ்க், பில் கேட்ஸ், அனில் அம்பானி போன்றோரின் பெயர்களுடன் உலகளாவிய அளவில் அதிகார மையங்களாக இருந்த பலரின் தொடர்புகளும் இருக்கின்றன.

2025 டிசம்பர் 19 ஆம் தேதியே கொஞ்சம் கோப்புகளும் தகவல்களும் வெளியிடப்பட்டபோதிலும் இவற்றில் பெரும்பாலான தகவல்கள் – செய்திகள்  மறைக்கப்பட்டிருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது.  முன்னதாக, 2024 ஜனவரியில் எப்ஸ்டீனுடைய தோழியான ஜிஸ்லைன் மாக்ஸ்வெல்லுக்கு எதிரான அவதூறு வழக்கொன்றின் ஆவணங்களில் குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லாமல் டொனால்ட் டிரம்ப், இளவரசர் ஆண்ட்ரூ, பில் கிளின்டன் போன்றோரின் பெயர்கள் இருந்தன.

எப்ஸ்டீன் கோப்புகள் வெளியிடப்பட்டு மூன்று வாரங்களாகிவிட்டன. வெளியான நாள் தொடங்கி எண்ணற்றோரை வீழ்த்திக் கொண்டிருக்கின்றன இவற்றின் பக்கங்கள்.

எப்ஸ்டீனுடன் பெரும் செல்வந்தர்கள், அரசுகளின் தலைவர்கள், தூதர்கள், அரசியல் அதிகாரத் தரகர்கள், தேவைகளை முடித்துக் கொடுப்போர், அறக்கட்டளைகள், அறிவாளிகள் என உலகில் பலரும் கொண்டிருந்த தொடர்புகள் அம்பலப்பட்டு வருகின்றன. இவர்களில் பலர் எப்ஸ்டீன்வழி பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களாகவும் இருக்கலாம்; இல்லாதவர்களாகவும்  இருக்கலாம். ஆனால், பாலியல் குற்றவாளியாக அறியப்பட்ட பிறகும்கூட  எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்திருப்பதுதான் விந்தை.

ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் இப்போது எப்ஸ்டீன் கோப்புகளில் இடம் பெற்ற பலரும் பதவிகளிலிருந்து விலகிவருகின்றனர்; அல்லது விலக்கப்படுகின்றனர். நிறைய விசாரணைகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. பிரிட்டன் உள்பட பல்வேறு நாடுகளின் விசாரணை அமைப்புகளும் கோப்புகளை முழுமையாக ஆராயத் தொடங்கியிருக்கின்றன.

எப்ஸ்டீன் தொடர்புடைய அமெரிக்காவில் தொடர் விளைவுகள் இப்போதுதான் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது; விலகல்கள் தொடங்கிவிட்டன. அமெரிக்காவின் உயர் நிலைகளில் இறுக்கமான அமைதி நிலவிக் கொண்டிருக்கிறது; விரைவில் பெரும் புயல் வீசக் கூடும்.

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 10:08 PM

எப்ஸ்டீன் தொடர்புகள் வெளியானதால், அதிபர் பராக் ஒபாமா காலத்தில் வெள்ளை மாளிகையில் உயர் அலுவலராக  இருந்த கேத்தரின் ரம்லர், கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்தின் முதன்மை சட்ட அலுவலர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்துவிட்டார்.

உலகின் பெரும் வணிக நிறுவனங்களில் ஒன்றான டிபி வேர்ல்ட் தலைவர் பதவியிலிருந்து அமீரக பெருவணிகரான சுல்தான் அகமது பின் சுலாயம் விலகியிருக்கிறார். காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எப்ஸ்டீனுக்கு அனுப்பிய பதில் மின்னஞ்சலில் ‘நூறு சதவிகித ரஷியப் பெண்ணுக்காக’ நன்றி தெரிவித்திருக்கிறாராம்!

பிரிட்டனில் அமெரிக்காவுக்கான முன்னாள் தூதர் பீட்டர் மாண்டெல்சன் தொழிலாளர் கட்சியிலிருந்தும், தொடர்ந்து மேலவையிலிருந்தும் விலகியிருக்கிறார்.

அமெரிக்க அதிபராக பில் கிளின்டன் இருந்தகாலத்தில் அவரின் வடக்கு அயர்லாந்துக்கான தூதராக இருந்த ஜார்ஜ் ஜே. மிட்செல், நியூ யார்க் காட்சிக்கலைப் பள்ளித் துறைத் தலைவர் டேவிட் ஏ. ராஸ், ஸ்வீடனிலிருந்த ஐ.நா. அவையின் அகதிகள் முகமையின் தலைவர் ஜோவான்னா ரூபின்ஸ்டீன், ஹயாத் ஹோட்டல்ஸ் கார்ப்பரேஷன் செயல் தலைவர் பதவியிலிருந்த தாமஸ் ஜே. பிரிட்ஸ்கெர் எனப் பலரும் தற்போது தாங்கள் வகித்துவந்த பதவிகளிலிருந்து விலகியிருக்கின்றனர்.

நார்வேயின் முன்னாள் பிரதமரும் ஐரோப்பிய கவுன்சிலின் முன்னாள் முதன்மைச் செயலருமான தார்ப்ஜோன் ஜாக்லேண்ட்டுக்கு எதிராக லஞ்ச – ஊழல் குற்றச்சாட்டின் கீழ் விசாரணை தொடங்கப்பட்டிருக்கிறது. ஜோர்தான் மற்றும் இராக்கிற்கான நார்வேயின் தூதராக இருந்த மோனா ஜூல் கடந்த வாரம் ராஜிநாமா செய்திருக்கிறார். இவருடைய கணவரும் முன்னாள் தூதரக அலுவலருமான தேர்ஜா ராட் லார்சனுக்கு எதிராக லஞ்ச – ஊழல் விசாரணை தொடங்கப்பட்டிருக்கிறது. இவருக்காகப் பெருந்தொகையை எழுதிவைத்திருக்கிறாராம் எப்ஸ்டீன்.

பிரான்ஸின் முன்னாள் பண்பாட்டுத் துறை அமைச்சர் ஜேக் லாங், அவருடைய மகள் கரோலின் லாங் ஆகியோருக்கு எதிராகவும் விசாரணைகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. இன்னும் பலர் பலர்...

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 10:08 PM

எப்ஸ்டீனின் கதை எல்லாம் ஏற்கெனவே வெளிவந்திருக்கின்றன. 2005-ல் ஒரு சிறுமியிடம் வல்லுறவு கொண்டதாக அவருடைய தாய் அளித்த புகாரின் பேரில்தான் முதன்முதலில் புளோரிடாவின் பாம் பீச் காவல்துறை விசாரிக்கத் தொடங்கியது. இவரால் பாதிக்கப்பட்ட 36 பெண்களைக் கண்டறிந்தனர், இவர்களில் 14 வயதுச் சிறுமிகளும் இருந்தனர். பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபடுத்திய எப்ஸ்டீனுக்கு 2008-ல் தண்டனை விதிக்கப்பட்டு 13 மாதங்கள் சிறையிலும் கழித்தார். வெளியே வந்த பின்னர் அவருடைய பாலியல், தரகு, தொடர்புகள் எல்லாமும் நாடுகள், கடல்கள், கண்டங்கள் என எல்லா எல்லைகளையும் தாண்டி வளர்ந்திருக்கிறது.

மீண்டும், 2019 ஜூலை 6-ல் பாலியல் தொழில் - ஆள் கடத்தல் குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்ட அவர், மிகவும் சந்தேகத்துக்குரிய வகையில், அடுத்த ஒரு மாதத்திலேயே, ஆகஸ்ட் 10 ஆம் தேதி சிறைக்குள்ளேயே தற்கொலை செய்துகொண்டு இறந்தார். தூக்கிட்டுத் தற்கொலை என நியூ யார்க் நகர் மருத்துவ ஆய்வாளர் தெரிவித்தாலும், இவருடைய மரணத்தில் இன்னமும் தீர்க்கப்படாத -  தீர்க்க முடியாத சதிக் கோட்பாடுகள் தொடர்கின்றன. தற்போது எப்ஸ்டீன் கோப்புகள் வெளிவந்து பெரிய தலைகளின் பெயர்கள் எல்லாமும் அடிபட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இந்த சந்தேகங்கள் எல்லாமும் மேன்மேலும் வலுப்பெறுகின்றன.

எப்ஸ்டீன் கோப்புகள் வெளிவந்ததும் இவற்றில் இடம் பெற்றுள்ள பலரும் தாங்கள் மிகவும் நல்லவர்கள் என்றும் எப்ஸ்டீன் தொடர்புடைய குற்றச் செயல்களில் தொடர்பில்லை என்றும் தெரிவிக்கின்றனர். ஏதோ நிதி ஆலோசனைகள்  கேட்டதாகவும் பெரும்புள்ளிகளின் தொடர்புகளைப் பெற உதவி வேண்டியதாகவும் எண்ணற்ற காரணங்களைக் கூறுகின்றனர். இருக்கலாம், ஆனால், எப்ஸ்டீனுக்கு எதிராக, சிறுமிகளைச் சீரழித்த மிக மோசமான குற்றச்சாட்டுகளில் தண்டிக்கப்பட்டுச் சிறையிலும் இருந்துவிட்டு வந்த ஒரு நபருடன் தொடர்பில் இருக்கிறோமே, தொடர்பு கொள்கிறோமே என்றெல்லாம் இவர்கள் யோசித்திருக்க மாட்டார்களா? என்றால் அதையும் தாண்டி எதை எதிர்பார்த்தார்கள்? என்ன கிடைத்திருக்கும்? இவை இயல்பாக எல்லாருக்கும் எழக் கூடிய சந்தேகங்கள்தான்.

எப்ஸ்டீனுடைய செயல்பாடுகள் பற்றிய ஆவணங்களில் ஜன. 30 ஆம் தேதியுடன் 35 லட்சம் பக்கங்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. இன்னமும் 25 லட்சம் பக்கங்கள் வெளியிடப்படாமல் வைக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க வழக்குரைஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 10:09 PM

தடுத்துவைக்கப்பட்டிருக்கும் இந்த 25 லட்சம் பக்கங்களில் இன்னமும் உலகின் பெரிய தலைகளாகக் கருதப்படும் பலருடைய அந்தரங்கங்களும் மோசமான பக்கங்களும் இடம் பெற்றிருக்கலாம்; எனவேதான் இவை நிறுத்தப்பட்டிருக்கின்றன  என்றெல்லாமும் பரவலாக சந்தேகம் எழுப்பப்படுகின்றன; குற்றம் சாட்டப்படுகின்றன.

ஒருவேளை அப்படியும் இருக்கும்பட்சத்தில் இவற்றிலுள்ள தகவல்கள் - புகைப்படங்களைக் கொண்டு, இவற்றை வைத்திருப்பவர்களால்  யாரை வேண்டுமானாலும் மிரட்டவோ, மிரட்டித் தங்கள் வழிக்குக் கொண்டுவரவோ முடியும். எக்குத்தப்பாகச் சிக்கிக் கொண்டிருப்பவர்கள் மூலம் அவர்கள் அதிகாரத்திலுள்ள நாடுகளில் தங்களுக்குத் தேவையானவற்றை எல்லாம் சாதித்துக் கொள்ளவும் முடியும்.

துண்டு துண்டாகக் கிடக்கும் அல்லது கண்டறியப்படும் எப்ஸ்டீன் கோப்புகளின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு கோணத்தில் விசாரணைகள் நடந்துகொண்டிருக்கின்றன.

உண்மையிலேயே பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் நடத்திக்கொண்டிருந்த, சிறார்கள் – சிறுமிகள் துன்புறுத்தப்பட்ட பாலியல் சாம்ராஜ்யத்தில் என்னவெல்லாம் நடந்தன? யார் யாருக்கெல்லாம் நேரடி பங்கும் பலனும்? யார் யாருக்கெல்லாம் மறைமுக பங்கும் பலனும்?

2008-ல் தண்டிக்கப்பட்டபோதும், அடுத்த பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தனக்கெனத் தனியொரு உலகைப் படைத்துக் கொண்டு, தனித்தீவைச் சொந்தமாக்கி, அங்கே தேவைப்பட்டவர்களை அழைத்துச் சென்று தேவையான விதங்களில் மகிழ்ச்சிப்படுத்தி, உலகளாவிய புள்ளியாக இருந்துவந்திருக்கிறார் எப்ஸ்டீன். நம்ப முடியாத அளவுக்கு உயர் நிலைகளில் இருந்த, இருக்கிற பலர் அவருக்கு வாடிக்கையாளர்களாகவோ அல்லது நண்பர்களாகவோ இருந்திருக்கின்றனர். உள்ளபடியே, இவர்கள் எல்லாரும் வெறும் நண்பர்கள் மட்டும்தானா? நட்பாக மட்டும்தான் பழகிக் கொண்டிருந்தார்களா? பாலியல் குற்றவாளியென அறியப்பட்ட, தண்டிக்கப்பட்ட நபருடன் அப்படியென்ன இவர்களுக்கு எல்லாம் அதிசயமான  நட்பு?

அரசுத் தலைவர்களும் அதிகார வர்க்கமும் பெருவணிக – பெருந்தொழில் நிறுவனங்களும் அறக்கட்டளைகளின் புரவலர்களும் இந்த ஒற்றை நபரால் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கின்றனர் – தேவைப்படும் இடங்களில் மனித பலவீனத்தை அல்லது விகாரத்தை ஆயுதமாகக் கொண்டு. அரசு ரகசியங்களாகக் கருதப்படுகிறவை எல்லாமும் சர்வசாதாரணமாகப் பகிரப்பட்டிருக்கின்றன. ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டு இருந்திருக்கின்றனர்; அதற்காக உரிய பலன்களையும் பெற்றிருக்க வேண்டும்.

2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு – எப்ஸ்டீன் என்கிற நபர் சிறுமிகளுடன் வல்லுறவு கொண்ட நபர் என்றும் பாலியல் குற்றவாளி என்று தண்டிக்கப்பட்ட பிறகு – அவருடன் தொடர்பில் இருந்த எவரொருவருமே தங்களுக்கு எதுவும் தெரியாதென்றெல்லாம் நியாயப்படுத்திக் கொண்டுவிட முடியாது. எல்லாமும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தங்கள் தொடர்பு எத்தகையதென்றாலும் ஒவ்வொருவரும் முன்வந்து தங்கள் ‘சுத்தத்தை’ உறுதிப்படுத்துவதுதான் நேர்மையானதாக இருக்கும். உங்களில் பாவம் செய்யாதோர் எவரெவரோ என அவரவரே தான் முன்வந்து அறிவித்துக் கொள்ளல் வேண்டும்!

எப்ஸ்டீன் கோப்புகளின் இருண்ட பக்கங்களிலும் அவற்றின் இண்டு இடுக்குகளிலும் குற்றமிழைத்த எத்தனை பேர் இன்னும் ஒளிந்துகொண்டிருக்கிறார்கள்? இவற்றையெல்லாம் தாண்டி இந்த வக்கிர பாலியல் சாம்ராஜ்யத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எல்லாம் கிடைக்கப் போவது எத்தகைய நீதி?

summary

About the controversies arising from sex offender Jeffrey Epstein files...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.