முகப்பு
சிறப்புக் கட்டுரைகள்

அறிவியல் ஆயிரம்: 1800-ல் மனிதனின் ஆயுள்காலம் என்ன தெரியுமா? 2036 -ல் என்னவாக இருக்கும்?

மனிதனின் சராசரி ஆயுள்காலம் பற்றியும் ஆயுள்காலம் அதிகரித்தற்கான காரணங்கள் பற்றியும்...

Updated On : 4 ஜூலை 2026, 3:50 pm IST
கோப்புப் படம் - PTI
பகிர்:

முதுமை எப்போது தொடங்குகிறது? என்று கேட்டால் நிறைய பேருக்கு கோபம் பொத்துக்கொண்டு வரலாம். ஆனால் முதுமையைப் பற்றிய அறிவியல் பார்வையே வேறுவிதமாக உள்ளது.

முதுமை எப்போது தொடங்குகிறது?

நாற்பது வந்தால் நாய்க்குணம் என்ற பழமொழியே நம் தமிழ் நாட்டில் உண்டு. அது உண்மையா? நாற்பது வயதிலா முதுமை தொடங்குகிறது? இல்லை, அப்படி எல்லாம் இல்லை. அரசே, அரசில் பணியாற்றும் பணியாளர்களுக்கு 60 வயதுதான் முதுமை, அதற்கு மேல் அவர்கள் விரைவாக, சுறுசுறுப்பாக, அதிகாரிகள் சொல்வதை உள்வாங்கிக்கொண்டு பணியாற்ற முடியாது என, பணி நிறைவும், ஓய்வூதியமும் கொடுத்து வீட்டுக்கு அனுப்புகிறார்களே! அப்படி என்றால் 60 வயதிலா? நம்ம ஆள்களும் 60 ஆகிவிட்டால், முன்போல ஓடியாடி செயல்பட முடியாது என்று நினைத்து, வீட்டுக்குள்ளேயே முடங்கி விடுகிறார்கள். வீட்டுக்குள்ளே அடைந்து கிடந்து, சாப்பிட்டு, சாப்பிட்டு, உடல் பருத்து, நடக்க விருப்பமின்றி, தொலைகாட்சிக்குள் மூழ்கி, நடக்காமல், கொள்ளாமல், வேறு சில முதுமை நோய்களைக் கூட அழைத்துக் கொண்டு, மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் அலைந்து கொண்டிருக்கிறார்கள். உடம்பு முடியவில்லை என அதில் ஒரு சுயசுகமும், நிம்மதியும்கூட அடைகின்றனர். இது சரியா? நியாயமா? உண்மையா?

Advertisement

Advertisement

முதுமையிலும் நல்ல ஆரோக்கியத்துடன் வாழலாமே! அது எப்படி?

முதுமை தொடர்பாக, உலகின் பல பகுதிகளில், பல்வேறு ஆய்வுகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்கான ஒரு துறையும் உள்ளது. அதன் பெயர்: முதுமையியல் துறை (Gerontology Department). இது முதுமையடைதல் செயல்முறையையும், முதியவர்களின் உயிரியல், உளவியல், சமூக தாக்கங்களையும் விரிவாக ஆய்வு செய்யும் துறையாகும். முதியோருக்கான மருத்துவ சிகிச்சைகளை மட்டும் மையமாகக் கொண்ட துறை "Geriatrics" (முதியோர் மருத்துவம்) என்று அழைக்கப்படுகிறது.

ஆய்வாளர்கள் தகவல்கள்

முதுமையியல் ஆராய்ச்சித் துறையில் வயதான செயல்முறையின் தொடக்கம் குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன [ஆய்வு: கோஹென்& பலர் 2020]. சில ஆராய்ச்சியாளர்கள், முதுமை/வயதாவது என்பது மனிதன் பிறப்பதற்கு முன்பே அதாவது அன்னையின் கருவறையில் கருவாக உருவான அன்றிலிருந்தே தொடங்கிவிடுகிறது எனக் கூறுகின்றனர். ஏனெனில், தாய் - தந்தையரின் உயிரணுக்களிலோ/கருத்தரிப்பின்போதோ மரபணுக்களின் சேதாரம் / சிதைவு திரண்டுவிட முடியும் [ஆய்வு: கின்சினா & பலர் 2019]. மறுபுறம், வேறு சில ஆய்வாளர்கள், முதுமை என்ற ஒன்று பாலியல் முதிர்ச்சியின் போதுதான் தொடங்குகிறது என வாதிடுகின்றனர். அப்போது, உடல் தொடர்ந்து மீளுருவாக்கம் அடைய வேண்டும் என்ற பரிணாம அழுத்தம் இல்லாமல் போகிறது; இளமையில் நன்மை பயக்கும் வழிமுறைகள் பின்னாளில் தீங்கு விளைவிக்கத் தொடங்குகின்றன [கெய்லார்ட் & லெமைட்ரே 2017, வில்லியம்ஸ் 1957].

சுருக்கமாகச் சொன்னால், முதுமை தொடங்கும் துல்லியமான தருணம் குறித்து இன்னும் முழுமையான ஒருமித்த கருத்து என்பதே இல்லை. ஆனால் வெளிப்படையாகக் காணக்கூடிய முதுமை அறிகுறிகளான தலைமுடி நரைத்தல், தோலின் சுருக்கங்கள், உடல் செயல்திறன், மூளைத் திறன் குறைதல் போன்றவை இருபது வயதிலிருந்தே தோன்றத் தொடங்கலாம். இருப்பினும், ஒவ்வொருவரின் முதுமையடையும் வேகமும் வேறுபடுகிறது. மரபணுக்கள், சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம் போன்ற பல காரணிகள் இதை நிர்ணயிக்கின்றன.

வயது என்பது ஓர் எண்... வாழ்க்கை என்பது ஒரு கலை...

“முதிர்வை பற்றி மனித சமூகம் பல காலமாக பயத்துடன்தான் பேசுகிறது. ஆனால் அறிவியல் பார்வையில் முதிர்வு என்பது இயற்கையின் ஒர் அற்புதமான செயல்முறை”

வாழ்க்கையும் ஆரோக்கியமும்

" நீண்ட நாள்கள் வாழ்வது முக்கியமல்ல; ஆரோக்கியமாக வாழ்வதே மனித வாழ்க்கையின் உண்மையான வெற்றி" என்கிறார் ஹிப்போகிரடஸ்.

"மனித உடல் ஓர் அதிசயமான இயந்திரம்; அதை நாம் சரியாகக் கவனித்தால் அது நம்மை நீண்ட காலம் பாதுகாக்கும்" - மேரி க்யூரி

ஆய்வாளர்கள் கூறும் இன்னொரு விஷயம் என்னவென்றால், முதுமை வருவதை யாரும் தடை செய்ய முடியாது. ஆனால் முதுமையில் ஏற்படும் பிரச்னைகளை, சிக்கல்களை, நோய்களை, நமது தீவிரமான செயல்பாடுகளால், சிக்கலின்றி, நல்ல உடல்நலத்துடன் சந்தித்து, உயிர் வாழ முடியும் என அறுதியிட்டுக் கூறுகின்றனர். அதற்கான சான்றுகளும் ஆய்வின் வழியே கிடைக்கிறது. முதுமை என்பது மனதைப் பொறுத்ததுதான் என மனவியல் ஆய்வாளர்கள் சொல்லுகின்றனர். 90 வயதிலும், நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்ந்தால், நீங்கள் நோயின்றி ஆரோக்கியமான முதுமையில் மன மகிழ்வுடன் வாழ முடியும், என்றும் அறுதியிட்டுக் கூறுகின்றனர்.

1800- 2025 ஆண்டுகளில் ஆயுள்காலம் என்னவாக இருந்தது?

உலகெங்கும் மக்கள் நீண்ட காலம் வாழ்கின்றனர். 1800-ஆம் ஆண்டுகளில், இந்தியாவில் பிறக்கும் ஒருவரின் சராசரி ஆயுள்காலம் வெறும் 25 ஆண்டுகளாக மட்டுமே இருந்தது. இந்த குறைந்த சராசரியானது, அதிக சிசு, சிறுவர் இறப்பு விகிதங்கள், பரவலான பஞ்சங்கள், உள்ளூர் நோய்களின் பரவல் ஆகியவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதே காலகட்டத்தில் (1800), உலகில் எந்தப் பகுதியிலும் சராசரி ஆயுள்காலம் 35 ஆண்டுகளுக்கு மேல் இருக்கவில்லை; உலக சராசரி சுமார் 30 முதல் 32 ஆண்டுகளாக இருந்தது.

1900-ஆம் ஆண்டில் இந்தியாவில் பிறந்த ஒரு குழந்தையின் சராசரி ஆயுள்காலம் என்பது 32 ஆண்டுகள் மட்டுமே. 2000-ஆம் ஆண்டில், இந்தியாவில் பிறக்கும்போது சராசரி ஆயுள்காலம் சுமார் 61.5 ஆண்டுகளாக இருந்தது.

பாலின அடிப்படையில்: ஆண்களுடன் (60.8 ஆண்டுகள்) ஒப்பிடும்போது, ​​பெண்கள் பிறக்கும்போது சற்றே அதிக ஆயுள் காலத்தைக் (62.5 ஆண்டுகள்) கொண்டிருந்தனர். ஆனால், 2021 ஆம் ஆண்டு, அது இருமடங்கிற்கும் மேலாக உயர்ந்து 71 ஆண்டுகளை எட்டியது. எல்லாம் நவீன உலகில், மருத்துவமும், சுகாதாரமும், பிறப்பு - இறப்பு குறைந்ததும்தான் இந்த மாயாஜாலத்தின் காரணிகள்.

ஆயுள் காலம் கூடியது எப்படி?

எங்கே, எப்போது, எப்படி, ஏன் இந்த ஆயுள்காலம் கூடிய வியத்தகு மாற்றம் நிகழ்ந்தது? அதனை அறிய,உலகளாவிய ஆயுட்காலத் தரவுகளை நாம் பார்க்கலாம்,

குழந்தை இறப்பில் ஏற்பட்ட பெரும் குறைப்பு, ஆயுள்காலத்தை உயர்த்துவதில் முக்கியப் பங்காற்றியுள்ளது. ஆனால் ஆயுள்காலம் எல்லா வயதுகளிலுமே அதிகரித்துள்ளது. குழந்தைகள், சிறார்கள், பெரியவர்கள், முதியவர்கள், அனைவருமே கடந்த காலத்தைவிட இறப்பதற்குக் குறைந்த வாய்ப்பைக் கொண்டுள்ளனர்; மரணம் தாமதப்படுத்தப்பட்டது.

காரணிகள்

மருத்துவம், பொது சுகாதாரம், வாழ்க்கைத் தரங்களில் ஏற்பட்ட முன்னேற்றங்களின் பயனாக இந்த அற்புதமான வியத்தகுமாற்றம் விளைந்துள்ளது. இதனுடன், ஆயுள்காலத்தின் ‘வரம்பு’ குறித்த பல கணிப்புகளும் உடைக்கப்பட்டுள்ளன.

ஆயுள்காலம், நீண்ட ஆயுள் தொடர்பான அளவீடுகள் குறித்த உலகளாவிய தரவுகளையும் ஆராய்ச்சிகளையும் பார்த்தால், ஒரு குறிப்பிட்ட வயதில் இறப்பதற்கான நிகழ்தகவு, ஆயுள்காலத்தில் பாலின இடைவெளி, நாடுகளுக்குள்ளான ஆயுள்கால சமத்துவமின்மை, மற்றும் பல.

உலகெங்கும் ஆயுள்காலம் அதிகரிப்பு

2021-ஆம் ஆண்டில், உலகளாவிய சராசரி ஆயுள்காலம் 70 ஆண்டுகளைச் சற்றே கடந்திருந்தது. இது வியப்பூட்டும் உண்மையாகும். ஏனெனில் 200 ஆண்டுகளுக்கு முன்பு, அது பாதிக்கும் குறைவாகவே இருந்தது. உலகின் அனைத்துப் நாடுகளிலும் இதுவே நிலவியது. 1800-ஆம் ஆண்டில், எந்த நாட்டிலும் 32 ஆண்டுகளுக்கும் மேல் வாழ்ந்த மனிதர், அதிகமான ஆயுள் உள்ளவர் இல்லை. இப்போது சராசரி ஆயுள்காலம் எல்லா நாடுகளிலும் நிலையாகவும் குறிப்பிடத்தக்க அளவிலும் உயர்ந்துள்ளது.

இந்த அசாதாரண உயர்வுக்குக் காரணம் என்பது, ஊட்டச்சத்து, தூய்மையான நீர், கழிவுநீர் அகற்றல், புத்திளம் குழந்தை சுகாதாரம், நுண்ணுயிர் எதிர்ப்பிகள், தடுப்பூசிகள், மற்றும் பிற தொழில்நுட்பங்கள் மற்றும் பொது சுகாதார முயற்சிகள் இவ்வாறு சுகாதாரத்தில் ஏற்பட்ட பரந்த வரம்பிலான முன்னேற்றங்களின் விளைவாகவும், வாழ்க்கைத் தரங்கள், பொருளாதார வளர்ச்சி, மற்றும் வறுமைக் குறைப்பு ஆகியவற்றில் ஏற்பட்ட முன்னேற்றங்களின் விளைவாகவும் அமைகிறது.

1800 - 2020 இல் இந்தியாவின் ஆயுள்காலம்:

டி. கிளார்க் என்ற ஆய்வாளர், புள்ளிவிபர நிபுணர் நவம்பர் 28, 2025ல் கூறியது:

1800-ஆம் ஆண்டில் இந்தியாவின் ஆயுள்காலம் 25.4 ஆண்டுகளாக இருந்தது; அடுத்த 220 ஆண்டுகளின் காலப்போக்கில், அது கிட்டத்தட்ட 70 -ஐ எட்டியுள்ளது.

1800-1920க்கும்  இடையில், இந்தியாவின் ஆயுள்காலம், 29 வயது மட்டுமே, அதற்கும் கீழேதான் நிலைத்திருந்தது. 1870 - 1910 களில் மிகப் பெரிய சரிவுகள் ஏற்பட்டன. காரணம், 1876-1878 ஆம் ஆண்டின் பெரும் பஞ்சமும், 1918-1919 ஆம் ஆண்டின் ஸ்பானிஷ் ஃப்ளூ தொற்றுநோயுமாகும். இவை இரண்டுமே முறையே 6,000,000 -17,000,0000 இந்தியர்களின் மரணத்திற்குக் காரணமாயிருந்தன. பெரியம்மை போன்ற பிற உள்ளூர் நோய்களும் மனித உயிரில் பங்கிட்டன.

1. 1900 ஆம் ஆண்டு: சராசரி ஆயுள்காலம்: சுமார் 27 – 30 ஆண்டுகள். இது மிகவும் குறைந்த ஆயுள்காலமாகும்.இதற்கான முக்கியக் காரணம், குழந்தைகள் மற்றும் பால்ய வயதினரிடையே காணப்பட்ட மிக அதிக இறப்பு விகிதமாகும். பிறக்கும் குழந்தையின் ஆயுள்கால எதிர்பார்ப்பு சுமார் 29 ஆண்டுகள் மட்டுமே இருந்தது.

அப்போது மரணங்களுக்குக் காரணமான முக்கிய நோய்க்கிருமிகள், சூழல்கள்...

  • டைபஸ் (Typhus)

  • காலரா (Cholera)

  • பெரியம்மை (Smallpox)

  • மோசமான சுகாதார நிலை

  • ஊட்டச்சத்து குறைபாடு

2. 1940 ஆம் ஆண்டு

சராசரி ஆயுள்காலம்: சுமார் 31 – 33 ஆண்டுகள். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் சில பொது சுகாதார முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதால் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால் குழந்தைகள், சிறுவர்களின் அதிக இறப்பு விகிதம் இன்னும் பெரிய பிரச்னையாகவே இருந்தது.

3. 1950 ஆம் ஆண்டு

சராசரி ஆயுள்காலம்: சுமார் 32 – 35 ஆண்டுகள். இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர், அரசின் பொது சுகாதார முயற்சிகள் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கின. மருத்துவ சேவைகளுக்கான அணுகல் இன்னும் குறைவாக இருந்தாலும், பொது சுகாதார மேம்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

4. 1970 ஆம் ஆண்டு

சராசரி ஆயுள்காலம்: சுமார் 43 – 46 ஆண்டுகள். 1970களில் ஆயுள்காலத்தில் குறிப்பிடத்தக்க உயர்வு காணப்பட்டது.

காரணிகள்

  • பசுமைப் புரட்சி (Green Revolution)

  • வேளாண் உற்பத்தி அதிகரித்தல்

  • ஊட்டச்சத்து நிலை மேம்படுதல்

  • மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களின் விரிவாக்கம்

  • சுகாதார வசதிகளின் மேம்பட்ட அணுகல்ஆகியவையாகும்.

5. 1980 ஆம் ஆண்டு

சராசரி ஆயுள்காலம்: சுமார் 56 ஆண்டுகள், ஆயுள்கால உயர்வு தொடர்ந்தது. முந்தைய பல பத்தாண்டுகளுடன் ஒப்பிடும்போது, ஆயுள்காலத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது.

6. 1990 ஆம் ஆண்டுகளில் சராசரி ஆயுள்காலம்: சுமார் 65 ஆண்டுகள். ஆயுள்காலம் தொடர்ந்து உயர்ந்தது. எனினும், இந்த முன்னேற்றம் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும், அனைத்து சமூகப் பிரிவுகளிலும் சமமாக நிகழவில்லை.

7. 2000 ஆம் ஆண்டு: இந்த ஆண்டில் சராசரி ஆயுள்காலம்: சுமார் 67 ஆண்டுகள் ஆக உயர்நதுள்ளது. காரணம்: மருத்துவ சேவைகளின் மேம்பாடு, சுகாதார வசதிகளுக்கான அதிகரித்த அணுகல், மேம்பட்ட ஊட்டச்சத்து நிலை ஆகியவை இந்த உயர்விற்கு முக்கிய காரணிகளாக அமைந்தன.

8. 2010 ஆம் ஆண்டு: சராசரி ஆயுள்காலம்: சுமார் 69.5 ஆண்டுகள் என உயர்ந்துள்ளது. ஆயுள்காலம் தொடர்ந்து உயர்ந்து, இப்போது 70 ஆண்டுகளை நெருங்கியுள்ளது.

9. 2020 ஆம் ஆண்டு: இப்போது இந்தியாவில் சராசரி ஆயுள்காலம்: சுமார் 70.4 ஆண்டுகள். இது தோராயமான மதிப்பீடாகும். இந்த காலகட்டம் வரை ஆயுள்காலம் படிப்படியாக உயர்ந்து கொண்டே வந்தது.

ஆனால் 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் ஏற்பட்ட கரோனா (COVID-19) பெருந்தொற்று, ஆயுள்காலத்தில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் அது மீண்டும் உயரத் தொடங்கியது.

10. 2022 ஆம் ஆண்டில், இந்திய சராசரி ஆயுள்காலம்: சுமார் 73 ஆண்டுகள். இது தற்போது கிடைக்கக்கூடிய சமீபத்திய அதிகாரப்பூர்வ மதிப்பீடாகும்.

மதிப்பீடுகள் பல்வேறு வகையாக இருந்தாலும், தற்போதைய போக்குகளின் அடிப்படையில் ஆயுள்காலம் தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அது சுமார் 72 முதல் 73 ஆண்டுகள் வரை இருக்கக்கூடும். இது தற்போதைய வளர்ச்சி விகிதங்கள் கூறும் கணித மாதிரிகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட முன்னறிவிப்பாகும்; எதிர்கால சூழ்நிலைகளின் அடிப்படையில் இது மாறக் கூடும்.

12. 2036 ஆம் ஆண்டு (முன்கணிப்பு) இது மிகவும் ஊகத்தன்மை கொண்ட கணிப்பாகும். தற்போதைய வளர்ச்சி போக்குகள் தொடருமானால், இந்தியாவின் சராசரி ஆயுள்காலம் 75 முதல் 77 ஆண்டுகள் வரை உயரக் கூடும்.

ஆனால் இதில் பல காரணிகள் இணைந்துள்ளன.

  1. மருத்துவ சேவைகளின் தொடர்ச்சியான முன்னேற்றம்

  2. சுகாதார வசதிகளின் விரிவாக்கம்

  3. சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை குறைத்தல்

  4. சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றங்களின் தாக்கம்

கவனிக்க வேண்டிய அம்சங்கள் & மாநிலங்களுக்கிடையிலுள்ள வேறுபாடுகள்

2026-ஆம் ஆண்டில் இந்தியாவின் சராசரி ஆயுள்காலம் 72.7 ஆண்டுகள் எனக் கணிக்கப்பட்டுள்ளது. பாலின அடிப்படையில்: பெண்களின் சராசரி ஆயுட்காலம் 74.4 ஆண்டுகள், ஆண்களின் சராசரி ஆயுட்காலம் 71.2 ஆண்டுகளாகவும் உள்ளது.

உலகளாவிய நிலையில் இந்தியாவின் சராசரி உலக அளவில் சுமார் 125-வது இடத்தில் உள்ளது. இது, ஏறத்தாழ 73 ஆண்டுகள் என்ற உலக சராசரியைவிட சற்றே குறைவாகும்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கிடையே ஆயுள்காலத்தில் கணிசமான வேறுபாடுகள் காணப்படுகின்றன. நாடு முழுவதும் குறிப்பிடத்தக்க ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. மாநில வாரியான தரவுகளின்படி, கேரளம் சுமார் 76 ஆண்டுகள் என்ற அதிகபட்ச ஆயுள்கால எதிர்பார்ப்புடன் நாட்டில் முன்னணியில் உள்ளது. இதற்கு மாறாக, சில மத்திய மற்றும் வடக்கு பிராந்தியங்களில் ஆயுள்கால எதிர்பார்ப்பு 65 முதல் 68 ஆண்டுகள் வரை பதிவாகியுள்ளது.

தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கேரளம் ஆகியவை பொதுவாக அதிக ஆயுள்காலத்தைப் பதிவு செய்கின்றன. இரு மாநிலங்களிலும் பிறப்பின்போது எதிர்பார்க்கப்படும் ஆயுள்காலம் தேசிய சராசரியைவிட குறிப்பிடத்தக்க அளவு அதிகமாக உள்ளது. கேரளத்தில் சராசரி: 75.1 ஆண்டுகள்; ஆண்: 72.2 ஆண்டுகள்; பெண்: 79.9 ஆண்டுகள். தமிழ்நாட்டின் சராசரி ஆயுள்: 71.4 ஆண்டுகள்; ஆண்: 68.5 ஆண்டுகள்; பெண்: 74.8 ஆண்டுகள்.

இதற்குக் காரணங்கள்: சிறந்த மருத்துவ வசதிகள், உயர்ந்த கல்வியறிவு, மேம்பட்ட சமூக பொருளாதார சூழல் ஆகியவையாகும்.

சமூக - பொருளாதார நிலை

செல்வந்தர்களின் ஆயுள்காலம், வறுமையில் வாழ்பவர்களின் ஆயுள்காலத்தைவிட குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளது. காரணம்: 1. தரமான உணவு, 2. மேம்பட்ட மருத்துவ சேவைகள், 3. பாதுகாப்பான வாழ்விட சூழல், ஆகியவற்றிற்கான எளிதான அணுகல்தான்.

நகர்ப்புறம் vs கிராமப்புறம்

பொதுவாக நகர்ப்புற மக்களின் ஆயுள்காலம் கிராமப்புற மக்களைவிட அதிகமாக உள்ளது. காரணங்கள்:

  • சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள்

  • மருத்துவ சேவைகளுக்கான விரைவான அணுகல்

  • மேம்பட்ட சுகாதார அமைப்புகள்

மருத்துவ சேவைகளின் பங்கு: அரசு மருத்துவமனைகள், பொது சுகாதார சேவைகளின் விரிவாக்கம் ஆயுள்காலத்தை உயர்த்துவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மலிவான,,தரமான மருத்துவ சேவைகள் மக்களின் வாழ்நாளை நீட்டிக்க உதவுகின்றன. பொது சுகாதாரத் திட்டங்கள் அரசின் பல்வேறு திட்டங்கள் ஆயுள்கால உயர்விற்கு பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளன.அவற்றில்:

சுகாதார மேம்பாடு

தூய்மை மற்றும் கழிவுநீர் மேலாண்மை

தடுப்பூசி திட்டங்கள்

தொற்றுநோய் கட்டுப்பாடு, ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

ஜப்பானின் ஆயுள்காலம், 1860-2020 - ஆய்வாளர்டி. கிளார்க்

1860-ஆம் ஆண்டில் ஜப்பானின் ஆயுள்காலம் என்பது 36.4 ஆண்டுகளாக இருந்தது. ஆனால், அடுத்த 160 ஆண்டுகளின் காலப்போக்கில் 2024இல் அது 84.4 ஆக உயர்ந்தது என்பது அந்நாட்டின் நவீன தொழில் வளர்ச்சி, மருத்துவம், முற்போக்கான செயல்பாடுகள் முக்கியமானவை. இது உலகில் இரண்டாவது மிக உயர்ந்த ஆயுள்காலமாகும் (மொனாக்கோவிற்கு முதலிடம்: 89 ஆண்டுகள்)

டென்மார்க் (Denmark) - 81.692

தைவான் (Taiwan) - 81.376

காஸ்டாரிக்கா (Costa Rica) - 81.304

குவாம் (Quam) - 81.116

சிலி (Chile) - 81.1

பியூபர்ட்டோ ரிக்க - 81.026

கத்தார் - 81.026

மாலத்தீவுகள் - 80.39

மக்கள்தொகை

குழந்தைப் பருவத்திற்குப் பிந்தைய ஆயுள்காலம்: குழந்தை சிசு இறப்பு விகிதங்கள் வரலாற்று ரீதியாக இந்தச் சராசரிகளைப் பாதித்துள்ளதால், ஆரம்ப குழந்தைப் பருவத்தில் உயிர் தப்பித்து விடுகிறவர்களுக்கு ஆயுள்காலம் உண்மையில் அதிகரிக்கிறது. 65 வயதை அடையும் ஒரு இந்தியர், சராசரியாக மேலும் 16 ஆண்டுகள் வாழ்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

2026 ஆம் ஆண்டின் மதிப்பீடுகளின்படி, சராசரி ஆயுள்காலம் (Life expectancy) சுகாதார உள்கட்டமைப்பு, சமூக பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் மாநிலத்திற்கு மாநிலம் இந்த புள்ளிவிவரங்கள் மாறுபடுகின்றன.

சராசரி ஆயுள் காலம் (மதிப்பீடு)

கேரளம் - 75.1 ஆண்டுகள், ஆண்கள்: 73.5 ஆண்டுகள், பெண்கள்: 79.2 ஆண்டுகள்

தமிழ்நாடு - 73.4 ஆண்டுகள், ஆண்கள்: 70.9 ஆண்டுகள், பெண்கள்: 75 ஆண்டுகள்

பிகார் - 69.3 ஆண்டுகள், ஆண்கள்: 68.9 ஆண்டுகள், பெண்கள்: 69.7 ஆண்டுகள்

கேரளம்: இந்தியாவின் மிக உயர்ந்த ஆயுள்காலம். மாநிலங்களில் முதன்மையாக உள்ளது.

தமிழ்நாடு: தேசிய சராசரியைவிட (69-70 ஆண்டுகள்) அதிகம். ஆரோக்கியமான அதிக ஆயுள் காலத்தைக் கொண்டுள்ளது.

பிகார்: தேசிய சராசரியைவிட சற்று குறைவாக உள்ளது. மேலும் இது ஊட்டச்சத்து குறைபாடு சுகாதார அணுகல் சவால்களால் பாதிக்கப்படுகிறது.

உலக சுகாதார அமைப்பின் (WHO) கருத்துப்படி 'முதியோர்'? பல ஆவணங்களில் பொதுவாக 60 வயது, அதற்கு மேல் உள்ளவர்கள் 'முதியோர்' (Older person / Older adult) என்று பயன்படுத்துகிறது. பல வளர்ந்து வரும் நாடுகளுக்கான ஆய்வுகளிலும் 60 வயது ஒரு நடைமுறை எல்லையாகக் கருதப்படுகிறது.  

வயது வகை

18–44 இளம் வயது

45–59 நடுத்தர வயது

60–74 முதியோர் (Young old)

75–89 வயது முதிர்ந்த முதியோர்

90+ மிக முதியோர் (Oldest old)

[கட்டுரையாளர் - தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மேனாள் மாநிலத் தலைவர்]

summary

Do you know what the human life expectancy was in 1800?, What will it be in 2036?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments