ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த சனிக்கிழமை (பிப். 7) தொடங்கியதால் இந்திய இளைஞர்களின் அபார வெற்றி அதிக முக்கியத்துவம் பெறாமல் போய்விட்டது.
19 வயதுக்குள்பட்டோருக்கான (யு 19) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் கடந்த ஜன. 15 முதல் பிப். 6 வரை நடைபெற்றது. இந்தப் போட்டியில் 16 அணிகள் பங்கேற்றன. கடந்த வெள்ளிக்கிழமை (பிப். 6) நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வென்று கோப்பையைக் கைப்பற்றியது. யு 19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய இளைஞர்கள் ஆறாவது முறையாக சாம்பியனாகி வரலாறு படைத்துள்ளனர்.
14 ஆண்டு 8 மாதங்களேயான இளம் சூறாவளி வைபவ் சூர்யவன்ஷி 80 பந்துகளில் 15 சிக்சர்களைப் பறக்கவிட்டு 175 ரன்கள் குவித்து சாதனை மன்னனாகத் திகழ்ந்தார். யு19 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் அதிக ரன்கள், ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்சர்கள், உலகக் கோப்பை தொடரில் அதிக சிக்சர்கள் (30), சதம் விளாசிய இளம் பேட்டர் என பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரானார்.
தொடரில் 439 ரன்கள் (சராசரி 62.7) குவித்த அவர் இறுதி ஆட்டத்தின் ஆட்டநாயகன் விருதையும் தொடர் நாயகன் விருதையும் பெற்றார். இந்தப் போட்டியின் ஒவ்வோர் ஆட்டத்திலும் இக்கட்டான தருணங்களில் வெவ்வேறு ஆட்டக்காரர்கள் அற்புதமான பங்களிப்பை வழங்கி உள்ளனர்.
மும்பையைச் சேர்ந்த, அணியின் கேப்டன் ஆயுஷ் மாத்ரே பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாகப் பந்துவீசியும் (3-21), அரை இறுதி (ஆப்கனுக்கு எதிராக), இறுதி ஆட்டங்களில் அரை சதம் அடித்தும் கைகொடுத்ததை மறந்துவிட முடியாது. பலவீனமான அணி என்று கருதப்பட்ட ஆப்கானிஸ்தான், அரை இறுதியில் இந்தியாவுக்கு எதிராக 310 ரன்கள் குவித்து அதிர்ச்சி அளித்தது. எனினும், இலக்கைக் கண்டு மலைத்துப் போகாமல் கேரளத்தைச் சேர்ந்த ஆரோன் ஜார்ஜ் அபார சதம் (115) விளாசி வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.
இந்திய அணிக்கு வங்கதேசம் அதிர்ச்சி வைத்தியம் அளித்துவிடுமோ என்ற கடினமான சூழலில், பஞ்சாபைச் சேர்ந்த பந்துவீச்சாளர் விஹான் மல்ஹோத்ரா வெறும் 14 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் சாய்த்து தோல்வியிலிருந்து அணியை மீட்டார். தொடரில் 240 ரன்கள் எடுத்து பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் வல்லவர் என்பதை நிரூபித்தார்.
கோப்பையை வென்றதில் தமிழக ஆட்டக்காரர்களின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. வேகப் பந்துவீச்சாளர் ஆர்.எஸ். அம்ப்ரிஷ் நியூஸிலாந்துக்கு எதிராக 4 விக்கெட்டுகளும், இறுதி ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளும் எடுத்தார். தமிழகத்தைச் சேர்ந்த மற்றொரு வேகப் பந்துவீச்சாளரான தீபேஷ் தேவேந்திரன் அரை இறுதி, இறுதி ஆட்டங்களில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குஜராத்தைச் சேர்ந்த வேதாந்த் திரிவேதி (68 ரன்கள்), கிலான் படேல் (3-35) ஆகியோர் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றிக்கு உதவினர்.
குஜராத்தைச் சேர்ந்த மற்றொருவரான ஹெனில் படேல் தொடரில் 11 விக்கெட்டுகள் சாய்த்தார். நவி மும்பையைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் அபிஞான் குண்டு பல ஆட்டங்களில் பேட்டிங்கில் சாதனை படைத்தார். தமிழகம், பிகார், கேரளம், குஜராத், பஞ்சாப், மகாராஷ்டிரம் என பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இளம் சாதனையாளர்களால் கோப்பை இந்தியா வசமாகி உள்ளது.
இதற்கு முன்னர் 2000 (கேப்டன் முகமது கைஃப்), 2008 (விராட் கோலி), 2012 (உன்முக்த் சந்த்), 2018 (பிரித்வி ஷா), 2022 (யஷ் துல்) ஆகிய ஆண்டுகளில் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. ஆஸ்திரேலியா 4 முறை, பாகிஸ்தான் 2 முறை, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, மே.இ.தீவுகள், வங்கதேசம் ஆகியவை தலா ஒரு முறை மட்டுமே வென்றுள்ளன. யு19 உலகக் கோப்பையை ஆறு முறை வென்றதில் இருந்தே இந்திய அணியின் ஆதிக்கத்தைப் புரிந்து கொள்ள முடியும்.
அமெரிக்கா, மே.இ.தீவுகளில் 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆடவர் டி20 உலகக் கோப்பை போட்டி, இந்தியா, இலங்கையில் 2025-ஆம் ஆண்டு நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை (50 ஓவர்) போட்டி ஆகியவற்றில் இந்தியா சாம்பியன் ஆகி இருந்தது.
இப்போது யு19 போட்டியிலும் வென்று கிரிக்கெட்டில் இந்தியா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி உள்ளது என்றே கூறலாம். இந்தியாவின் விராட் கோலி, ஷுப்மன் கில், மனீஷ் பாண்டே, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன், டிரென்ட் போல்ட், இங்கிலாந்தின் ஜோ ரூட், பாகிஸ்தானின் பாபர் ஆசம் போன்றோர் யு19 போட்டிகளில் இருந்து தேசிய சீனியர் அணியில் இடம்பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
1988-இல் யு19 போட்டி தொடங்கியதில் இருந்து 2022 வரை 132 பேர் இந்திய அணிக்காக விளையாடி உள்ளனர். அவர்களில் 40 பேர் தேசிய சீனியர் அணிக்கு உயர்ந்து சர்வதேசப் புகழ் பெற்றிருக்கிறார்கள். இப்போதைய போட்டியில் சிறப்பாக விளையாடியவர்கள் எதிர்காலத்தில் சீனியர் அணியில் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது.
இந்த இளைஞர்கள் வருங்காலத்திலும் கிரிக்கெட்டில் இந்தியாவின் வெற்றிக்கொடியைத் தொடர்ந்து பறக்கவிடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். இது ஓரிரு நாள்களிலோ, ஆண்டுகளிலோ சாத்தியமாகவில்லை. சரியான திட்டமிடல், தீவிர பயிற்சி, வழிகாட்டல், அதிகமான வாய்ப்பு, திறமையை அடையாளம் காணுதல் போன்றவை பலனளித்திருக்கின்றன. அதனால், இந்த வெற்றிப் பயணம் தொடரும்...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.