முகப்பு
தலையங்கம்

ஏமாற்றமல்ல மாற்றம்!

விபி- ஜி ராம் ஜி திட்டத்தை தமிழக அரசு ஏற்றுக்கொண்டு அமல்படுத்த முனைந்திருப்பதை வரவேற்க வேண்டும்.

Updated On : 4 ஜூலை 2026, 6:28 am IST
கோப்புப் படம்
பகிர்:

முந்தைய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்துக்கு மாற்றாக மத்திய அரசு அறிமுகப்படுத்தி இருக்கும் "வளர்ச்சியடைந்த பாரதம் ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத் திட்டம்' (விபி- ஜி ராம் ஜி) ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்தத் திட்டத்தை தமிழக அரசு ஏற்றுக்கொண்டு அமல்படுத்த முனைந்திருப்பதை வரவேற்க வேண்டும். மோதல் போக்கைக் கடைப்பிடிக்காமல் மத்திய அரசுடன் இணக்கமான அணுகுமுறையை மேற்கொள் வதன் மூலம் தமிழகத்தின் வளர்ச்சிக்கான எல்லாவித உதவிகளையும் பெறுவது ஆக்கபூர்வ கண்ணோட்டம்.

விபி-ஜி ராம் ஜி திட்டத்தில் கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு 125 நாள் வேலை கிடைப்பது உறுதியாகிறது. அனைத்துக் கிராம ஊராட்சிகளிலும் அமல்படுத்தப்பட இருக்கும் இந்தத் திட்டத்தின் மூலம், தனியாக வாழும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள், விடுதலையான கொத்தடிமைத் தொழிலாளர்கள், பழங்குடியினர் உள்ளிட்டோர் பயன்பெறுவர். அவர்களுக்கு சிறப்பு வேலை அட்டை வழங்கப்படும்.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்திலிருந்து இப்போதைய விபி} ஜி ராம் ஜி எனப்படும் புதிய திட்டம் மாறுபடுகிறது. முந்தைய திட்டம் தேவை அடிப்படையிலான அணுகுமுறையைப் பின்பற்றியது என்றால், இப்போதைய விபி} ஜி ராம் ஜி தொழில்நுட்ப உதவியுடன் திட்ட அணுகுமுறையைக் கடைப்பிடிக்க இருக்கிறது. அதாவது, வெறும் வேலைவாய்ப்பை உறுதிப்படுத்துவது மட்டுமல்லாமல், இந்தத் திட்டத்தின் மூலம் பெறப்படும் உழைப்பை ஆக்கபூர்வ வளர்ச்சிக்குப் பயன்படுத்துவதுதான் அடிப்படை வேறுபாடு.

Advertisement

Advertisement

விபி- ஜி ராம் ஜி திட்டத்தின் முக்கிய அம்சமாக வளர்ச்சியடைந்த கிராம பஞ்சாயத்து திட்டம் (விஜிபிபி) அமைகிறது. முன்பு கிராம அளவில் விருப்பப் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதற்கேற்ப திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன என்றால், விஜிபிபி }யின் கீழ் தொழில்நுட்ப உதவியுடன் புவிசார் தகவல்களுடன் ஊரக மேம்பாட்டை மையமாகக் கொண்ட குறிப்பிட்ட மாதிரிகள் உருவாக்கப்பட உள்ளன. அதாவது, வளர்ச்சியடைந்த பாரதம்

என்கிற இலக்கை நோக்கிய பயணத்தின் ஒரு பகுதியாக இந்தத் திட்டம் இருக்கும். பொதுச் சொத்துகள், உள்கட்டமைப்பில் குறைபாடுகள், மேம்பாட்டுப் பணிகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டு அவை விரைவுபடுத்தப்படவுள்ளன. இதில் நீர்ப் பாதுகாப்பு, ஊரக உள்கட்டமைப்பு, வாழ்வாதாரம், பேரிடர் தடுப்பு மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறன் ஆகிய 5 கருப்பொருள்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளன. நிலத்தடி நீரை அதிகம் பயன்படுத்தி வறட்சி நிலையை எட்டும் நிலையிலுள்ள பகுதிகளுக்கு மத்திய அரசின் செலவினத்தில் குறைந்தபட்சம் 65% ஒதுக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட மண்டலங்களில் நிலத்தடி நீர் மேலாண்மைக்கு 40 சதவீதமும், பாதுகாப்பான நிலத்தடி நீர் மண்டலங்களுக்கு 30 சதவீதமும் செலவிடப்படவுள்ளது.

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை மதிப்பிடும் நடைமுறையும் தற்போது கிராம ஊராட்சித் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இனிமேல், கிராம சபை உறுப்பினர்களின் ஆலோசனையுடன் கிராம ஊராட்சித் திட்டங்கள் உருவாக்கப்பட்டு அவற்றுக்கு உள்ளூர் தீர்மானங்கள் மூலம் ஒப்புதல் அளிக்கப்படவுள்ளன. வேலை கேட்டு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு 14 நாள்களுக்குள் வேலை வழங்கப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறு வேலை வழங்காவிட்டால் வேலை இழப்பு உதவித் தொகை வழங்கப்படும் என்பது புதிய திட்டத்தின் சிறப்பம்சம்.

மத்திய, மாநில அரசுகளின் இணைத் திட்டமாகச் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் மொத்த செலவில் 60% மத்திய அரசும், 40% மாநில அரசும் ஏற்கும். வேலை இழப்பு உதவித் தொகை மற்றும் கூலி தாமத இழப்பீட்டுத் தொகையை மாநில அரசு வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மிக முக்கியமான அம்சம் விதைப்பு மற்றும் அறுவடைபோன்ற

உச்சகட்ட விவசாய நாள்களில் ஆண்டுக்கு 60 நாள்கள் வரை பணிகள் நடைபெறாது. அதனால், விவசாயத் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்கும் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.

தமிழகம், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் வரவேற்று ஏற்றுக் கொண்ட இந்தத் திட்டத்தை பாஜக ஆட்சியில் இருக்கும் சில மாநிலங்கள்

விமர்சிக்க முற்பட்டிருக்கின்றன. பிகார், மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட் ஆகியவை இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் 60:40 என்ற விகிதத்திலான நிதிப் பொறுப்பை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கின்றன. சில மாநிலங்கள் தொழிலாளர்

களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை அதிகரிக்க வேண்டும் என்றும், 60 நாள்கள் திட்டப் பணிகளுக்கான ஓய்வு காலத்தை அகற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருக்கின்றன.

எந்தவிதத் திட்டமிடலோ, குறிக்கோளோ இல்லாமல் மக்களின் வரிப் பணத்தை வேலைவாய்ப்பு என்கிற பெயரில் வழங்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தை மாற்றி புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியிருப்பதில் குறை காண முடியாது. இலக்கு நிர்ணயித்து தொழில்நுட்ப

ரீதியாக வளர்ச்சிப் பணிகளை முன்னெடுக்கும் இந்தத் திட்டம், வளர்ச்சி அடைந்த பாரதத்துக்கான அடித்தளத்தை ஏற்படுத்தும் என நம்பலாம்.

செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு

எய்த உணர்ந்து செயல்.

செய்கின்றவனுடைய தன்மையை ஆராய்ந்து, செயலின் தன்மையையும் ஆராய்ந்து, தக்க காலத்தோடு பொருந்துமாறு உணர்ந்து செய்விக்க வேண்டும்.

திருக்குறள் (எண் 516) அதிகாரம்: தெரிந்து வினையாடல்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments