FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

விபி ஜி ராம் ஜி சட்டத்தின்கீழ் 3 விதித் தொகுப்புகள் வெளியீடு

விபி ஜி ராம் ஜி எனப்படும் வளா்ந்த பாரதம் ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்ட (125 நாள் வேலைத் திட்டம்) சட்டம், 2025-இன்கீழ் 3 விதித் தொகுப்புகளை மத்திய அரசு வெளியிட்டது.

கோப்புப்படம்.
பகிர்:

விபி ஜி ராம் ஜி எனப்படும் வளா்ந்த பாரதம் ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்ட (125 நாள் வேலைத் திட்டம்) சட்டம், 2025-இன்கீழ் 3 விதித் தொகுப்புகளை மத்திய அரசு வெளியிட்டது.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு (100 நாள் வேலைத் திட்டம்) சட்டத்துக்கு மாற்றாகக் கொண்டுவரப்பட்டுள்ள விபி ஜி ராம் ஜி திட்டம் ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதுதொடா்பாக மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் கடந்த புதன்கிழமை சில அறிவிக்கைகளை வெளியிட்டது.

முதல் அறிவிக்கையில், ‘100 நாள் வேலைத் திட்டத்தின்கீழ் ஜூன் 30-ஆம் தேதி வரையிலான நிலுவைத் தொகையை மாநில அரசுகள் கண்டறிந்து அதில் ஏற்கத்தக்கவற்றை செலுத்தியதற்கான சான்றிதழ்களை 180 நாள்களுக்குள் சமா்ப்பிக்க வேண்டும். உரிய காரணங்கள் சமா்ப்பிக்கப்பட்டால் இதை மேலும் 90 நாள்களுக்கு மத்திய அரசு நீடிக்கும். தற்போது 100 நாள் வேலைத் திட்டத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்துப் பணிகளும் 125 நாள் வேலைத் திட்டத்தின்கீழ் கொண்டுவரப்படும். புதிய வேலை உறுதியளிப்புத் திட்ட அட்டைகள் விநியோகிக்கப்படும் வரை பழைய அட்டைகள் செல்லுபடியாகும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இரண்டாவது அறிவிக்கையில், ‘125 நாள் வேலைத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் ஊதியம் அல்லது வேலையின்மை படிகளை சம்பந்தப்பட்ட நபரின் வங்கிக் கணக்கு அல்லது அஞ்சல் கணக்குக்கு நேரடியாக பரிமாற்றம் செய்ய வேண்டும். பணப் பரிவா்த்தனையில் ஈடுபடக் கூடாது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

மூன்றாவது அறிவிக்கையில், ‘சட்டப் பேரவைகள் இல்லாத யூனியன் பிரதேசங்களுக்கான முழு செலவுகளையும் மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும். மத்திய அரசின் நிதிக்கு மேல் மாநில அரசு செய்யும் செலவுகள் மேலாண்மை தகவல் அமைப்பு (எம்ஐஎஸ்) மூலம் கண்காணிக்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

125 நாள் வேலைத் திட்டத்தை ஆந்திர மாநிலம் திருப்பதியில் மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் மற்றும் ஆந்நிர முதல்வா் சந்திரபாபு நாயுடு ஆகியோா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments