முகப்பு
தலையங்கம்

காத்திருக்கும் வாய்ப்பு!

ஒருவழியாக ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்டு, சரக்குக் கப்பல்கள் பயணிக்கத் தொடங்கி விட்டன.

Updated On : 25 ஜூன் 2026, 6:00 am IST
ஹோர்முஸ் நீரிணை - ANI
பகிர்:

ஒருவழியாக ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்டு, சரக்குக் கப்பல்கள் பயணிக்கத் தொடங்கி விட்டன. லெபனான் மீதான தாக்குதல்களை கடந்த இரண்டு நாள்களாக இஸ்ரேலும் நிறுத்தி இருக்கிறது. அமெரிக்கா-ஈரான் இடையேயான இடைக்கால ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்திருப்பதற்கான நல்ல அறிகுறிகள் இவை.

இந்தியாவுக்குக் கச்சா எண்ணெய், உரம், எரிவாயு ஏற்றி வரும் 11 கப்பல்கள் இதுவரை ஹோர்மூஸ் நீரிணை வழியாக இந்தியா நோக்கிப் பயணிக்கின்றன என்றால், இந்தியாவில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு சரக்குகளை ஏற்றிச் செல்லும் இரண்டு கப்பல்களும் நீரிணையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. சரக்குக் கப்பல்கள் பயணிக்கத் தொடங்கி இருப்பதை இயல்பு நிலை திரும்புகிறது என்பதன் அடையாளமாகத்தான் பார்க்க வேண்டும்.

இவை மட்டுமல்லாமல், இந்தியா நோக்கி வரும் இரண்டு போர்ச்சுகீசிய கப்பல்களும், மார்ஷல் தீவைச் சேர்ந்த எண்ணெய்க் கப்பலும்கூட திங்கள்கிழமை ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்தியாவை நோக்கிப் பயணிப்பதாகத் தெரிய வருகிறது.

Advertisement

Advertisement

ஹோர்முஸ் நீரிணையின் மேற்குப் பகுதியைக் கடக்க பிப்ரவரி மாதம் முதல் கடலில் காத்துக் கிடக்கும் இந்தியக் கொடி தாங்கிய 10 சரக்குக் கப்பல்களும், தாமதமின்றி இந்தியாவுக்குப் பயணிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்கா விதித்திருந்த தடை இப்போது தளர்த்தப்பட்டிருப்பதால், மிக அதிகமாக ஆதாயம் அடையும் நாடாக இந்தியாதான் இருக்கும்.

14 அம்ச இடைக்கால ஒப்பந்தத்தின்படி கச்சா எண்ணெய், பெட்ரோலியப் பொருள்கள் மீதான தடை மட்டுமல்லாமல், ஈரான் மீது அமெரிக்கா விதித்திருந்த வங்கிப் பரிமாற்றம், சரக்குப் போக்குவரத்து உள்ளிட்ட தடைகளும் தளர்த்தப்பட்டிருக்கின்றன.

இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையே இருந்த நெருக்கமான உறவு, அமெரிக்காவால் துண்டிக்கப்பட்டது. ஈரான் மீதான தடையை அமெரிக்கா, அவ்வப்போது இந்தியாவுக்காகத் தளர்த்தினாலும்கூட, இந்தியா-ஈரான் உறவில் கடுமையான பாதிப்பை அது ஏற்படுத்தி இருந்தது. பிப்ரவரியில் அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடங்கிய ஈரானுக்கு எதிரான தாக்குதலுக்கு முன்பே, அந்த நாட்டுடனான நமது வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது.

அமெரிக்கப் பொருளாதாரத் தடையைத் தொடர்ந்து 2019 முதல் நாம் ஈரானிலிருந்து கச்சா எண்ணெய், எரிவாயு இறக்குமதி செய்வதை நிறுத்தி விட்டோம். அதற்கு முன்பு இந்தியாவுக்கு அதிக அளவில் கச்சா எண்ணெய் வழங்கி வந்த மூன்று நாடுகளில் ஈரானும் ஒன்றாக இருந்தது. 2018-இல் ஆண்டொன்றுக்கு 1.2 பில்லியன் டாலர் மதிப்புள்ள அரிசியை ஈரானுக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருந்ததுபோய், வெறும் 698 மில்லியன் டாலராக ஈரானுக்கான இந்திய அரிசி ஏற்றுமதி சுருங்கி விட்டது.

2019-இல் நமது மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் 11.5% ஈரானில் இருந்துதான் பெறப்பட்டது. ஈரானில் இருந்து இறக்குமதி செய்வதில் நமக்குப் பல ஆதாயங்கள் இருக்கின்றன. வளைகுடா நாடுகளில், புவியியல் ரீதியாக இந்தியாவுக்கு மிகவும் நெருக்கமான நாடு ஈரான் என்பதால், போக்குவரத்துச் செலவும், பயண தொலைவும் குறைகிறது.

இன்னொரு முக்கியமான சாதகத்தையும் நாம் மறந்துவிடக்கூடாது. ஏனைய நாடுகள் நமது கச்சா எண்ணெய்க் கொள்முதலுக்கு 30 நாள்கள் மட்டுமே கடன் வசதி வழங்கினார்கள் என்றால், ஈரான் இந்தியாவுக்கு மட்டும் சிறப்புச் சலுகையாக 60 முதல் 90 நாள்கள் வழங்கி வந்தது. 2014-இல் பிரதமர் நரேந்திர மோடி அரசு அமைந்ததைத் தொடர்ந்து பெறப்பட்ட முக்கியமான சலுகைகளில் இதுவும் ஒன்று.

அமெரிக்கா - ஈரான் இடைக்கால ஒப்பந்தத்தின் ஏழாவது பிரிவின்படி, ஈரானுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த எல்லா தடைகளும் அகற்றப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் ஈரானில் இந்தியா அமைத்து வரும் சாபஹார் துறைமுகத் திட்டத்தை இனிமேல் தடையின்றி முன்னெடுக்க வழிகோலப்பட்டிருக்கிறது. அதில் நமக்கு ஒரு மிகப்பெரிய உத்திசார் ஆதாயம் (ஸ்ட்டிராடஜிக் பெனிபிட்) இருக்கிறது.

ஈரானில் உள்ள சாபஹார் துறைமுகத்தை நிர்மாணிப்பதில், தொலைநோக்குப் பார்வையுடன் அன்றைய வாஜ்பாய் அரசு இணைந்ததன் காரணம் இப்போதுதான் புரிகிறது. பாகிஸ்தானை சார்ந்திருக்காமல் ஈரான், ஆப்கானிஸ்தான், மத்திய ஆசியா, ரஷியா உள்ளிட்ட நாடுகளுடன் நமது வர்த்தக உறவைத் தொடர சாபஹார் துறைமுகம் வழிகோலும். ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்டாலும் ஈரானில் இருந்தும், ரஷியாவில் இருந்தும் எந்தவிதத் தடங்கலும் இல்லாமல் கச்சா எண்ணெய், எரிவாயுவை இந்தியாவுக்குக் கொண்டு வர முடியும்.

300 பில்லியன் டாலரில் நிர்மாணிக்கப்படும் சாபஹார் துறைமுகத் திட்டம் மட்டுமல்ல, ஈரானில் எண்ணெய் கிணறுகளை நிறுவி, கச்சா எண்ணெய் உற்பத்தி செய்வதிலும் இந்தியாவை இருகரம் நீட்டி வரவேற்க ஈரான் காத்திருக்கிறது. கச்சா எண்ணெய்யில் மூன்றாவது இடத்திலும், இயற்கை எரிவாயுவில் இரண்டாம் இடத்திலும் ஈரானில் புதைபடிவ வளம் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், உற்பத்திக்கான கட்டமைப்பு இல்லை. அதை இந்தியா வழங்க முடியும்; வழங்க வேண்டும் என்று ஈரான் விரும்புகிறது.

ஹோர்முஸ் நீரிணை முற்றிலுமாகத் திறக்கப்படுவது மட்டுமல்ல, தடைகள் நிரந்தரமாக அகற்றப்படுவதும் ஈரானுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் இன்றியமையாதது.

எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே

செய்தற்கு அரிய செயல்.

கிடைத்தற்கரிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த

வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு அப்போதே செய்தற்

கரிய செயல்களைச் செய்ய வேண்டும்.

திருக்குறள் (எண் 489) அதிகாரம்: காலம் அறிதல்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments