இயற்கை எச்சரிக்கிறது!
புயல், அடைமழை, வறட்சிபோல நிலநடுக்கங்களும் சமீப ஆண்டுகளாகத் தொடர் நிகழ்வுகளாகி வருகின்றன. இயற்கை தனது சீற்றத்தை இதுபோன்ற நிகழ்வுகளின் மூலம் வெளிப்படுத்தி வருகிறது.
இது நிலநடுக்கங்களின் காலம் போலிருக்கிறது. புயல், அடைமழை, வறட்சிபோல நிலநடுக்கங்களும் சமீப ஆண்டுகளாகத் தொடர் நிகழ்வுகளாகி வருகின்றன. இயற்கை தனது சீற்றத்தை இதுபோன்ற நிகழ்வுகளின் மூலம் வெளிப்படுத்தி வருகிறது. அதை உணர்ந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் மனித இனத்துக்கு ஏற்பட்டிருக்கிறது.
"பசிபிக் நெருப்பு வளையம்'(பசிபிக் ரிங் ஆஃப் ஃபயர்) என்று அழைக்கப்படும் உலகின் முக்கியமான நிலநடுக்கப் பகுதியில் அமைந்திருக்கும் நாடுகள் ஜப்பானும், இந்தோனேசியாவும். ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகள் நிலநடுக்கத்துக்குப் பழக்கப்பட்டிருப்பதால், அதை எதிர்கொள்ளும் விதத்திலான கட்டமைப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. வெனிசுலா அப்படிப்பட்ட முன்னெச்சரிக்கை எதுவும் இல்லாத நாடு.
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடந்த ஜூன் 24-ஆம் தேதி அடுத்தடுத்து ஏற்பட்ட இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் 1,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது உலகையே பெரும் துயருக்குள்ளாக்கியிருக்கிறது. ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கங்களில் 3,000}க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். நிலநடுக்கங்களில் சிக்கி காணாமல் போன 51,000-க்கும் மேற்பட்டோர் நிலை குறித்த அச்சம் எழுந்துள்ளது.
Advertisement
Advertisement
வெனிசுலாவில் இப்போது ஏற்பட்ட நிலநடுக்கம் கடந்த 125 ஆண்டுகளில் அந்த நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் மிகவும் சக்திவாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மொத்தம் 770 கட்டடங்கள் முற்றிலும் அல்லது பகுதியளவு சேதமடைந்துள்ளன. தலைநகர் கராகஸ் உள்பட பல பகுதிகள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலும் லா குவாரியா நகரத்தில்தான் மிக அதிக பாதிப்பு. நிலநடுக்கத்துக்குப் பிந்தைய அதிர்வுகளும் ரிக்டர் அளவுகோலில் 4.2 அலகுகள், 4.5 அலகுகளாகப் பதிவாகியுள்ளன. நிலநடுக்கத்துக்கு இரண்டு நாள்கள் கழித்து போர்த்துகீசா மாகாணத்தில் பலத்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.
பொது மருத்துவமனைகள் ஏன் தரம் உயர்த்தப்பட்ட நிலையில் தயாராக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது வெனிசுலா நிலநடுக்கம். மருத்துவர்களில் 30%, செவிலியர்களில் 70% கடந்த பத்தாண்டுகளில் வெளிநாடுகளுக்குக் குடிபெயர்ந்து விட்டனர். பொது மருத்துவமனைகளில் போதுமான படுக்கை வசதிகளோ, அவசரமான சிகிச்சைக்கான மருந்துகள், பேண்டேஜ்கள் உள்ளிட்டவையோ இல்லாத நிலைமை. கதிரியக்கக் கருவிகளும், ஏனைய மருத்துவ வாகனங்களும் மிகவும் பழைமையானவை என்பதுடன் செயலிழந்த நிலையில் இருக்கின்றன.
வெனிசுலாவுக்குப் பல நாடுகளும் உதவிக்கரம் நீட்டியுள்ளன. அமெரிக்கா, கத்தார், மெக்ஸிகோ, எல் சால்வடார் உள்ளிட்ட நாடுகள் தங்களின் மீட்புக் குழுக்களையும் மருத்துவ உதவிகளையும் அனுப்பி வருகின்றன. "ஆபரேஷன் அமிஸ்டாட்' என்ற பெயரில் இந்திய விமானப் படையின் இரண்டு சி}17 விமானங்களில் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் உள்பட 35 டன் நிவாரணப் பொருள்களுடன் 41 பேர் கொண்ட மீட்புக் குழுவினர் வெனிசுலா சென்றடைந்துள்ளனர்.
நிலநடுக்கம் வெனிசுலாவுடன் நின்றுவிடவில்லை. அதே நாளிலும், அடுத்தடுத்த நாள்களிலும் அமெரிக்கா, ஜப்பான், நேபாளம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் 5.6 அலகுகளாகவும், ஜப்பானில் 7.2 அலகுகளாகவும், நேபாளத்தில் 3.8 அலகுகளாகவும், ஆப்கானிஸ்தானில் 6.2 அலகுகளாகவும், பாகிஸ்தானில் 5.5 அலகுகளாகவும் பதிவாயின.
பூமியின் மேற்பரப்பு "டெக்டோனிக் பிளேட்' எனப்படும் பாறைகளால் ஆன பல தட்டுகளால் பிரிக்கப்பட்டுள்ளது. இந்தத் தட்டுகள் நகரும்போது அவற்றின் எல்லைகள் ஒன்றோடொன்று உரசுகின்றன. இதன் தொடர்ச்சியான விளைவுகளால்தான் நிலநடுக்கம் ஏற்படுகிறது. இப்போது கூகுள் ஒரு புதிய தொழில்நுட்பத்தின் மூலம் நிலநடுக்கம் ஏற்படுவதைக் கண்டறிந்து எச்சரிக்க முடியும் என்பதை வெனிசுலா நிலநடுக்கத்தில் உறுதிப்படுத்தி இருக்கிறது.
கூகுளின் "நிலநடுக்க எச்சரிக்கை' (எர்த் குவேக் அலர்ட் சிஸ்டம்), வெனிசுலாவில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கு சில விநாடிகள் முன்பாக ஏறத்தாழ 1.14 கோடி பயனாளிகளை எச்சரிக்கை செய்தது. நிலநடுக்க அதிர்வுகள் பூமியில் தொடங்கும்போது ஆண்ட்ராய்ட் கைப்பேசிகள் அந்த அதிர்வலைகளை உள்வாங்கி, கூகுள் சர்வர்களுக்கு அனுப்புகின்றன. அந்தத் தகவலின் அடிப்படையில் சர்வர்கள் நிலநடுக்கத்தின் இயல்பையும், வலிமையையும் கணித்து கைப்பேசிகளுக்கு எச்சரிக்கை செய்தி அனுப்பியிருக்கின்றன. ஆண்ட்ராய்ட் கைப்பேசிகளில் இந்த வசதி ஏறத்தாழ 100 நாடுகளில் இணைக்கப்பட்டிருப்பதாக கூகுள் தெரிவிக்கிறது.
நிலநடுக்கத்துக்குப் பிந்தைய பாதிப்புகளைக் குறைப்பதற்கான ஆய்வுகள் உலகளாவிய அளவில் இன்னும் பின்தங்கிதான் இருக்கின்றன. இயற்கை எச்சரிக்கிறது. அதை மனித இனம் உணர்ந்து செயல்படுவதுதான் புத்திசாலித்தனம்.
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.
குற்றம் நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின்முன் நின்ற வைக்கோல் போர் போல் அழிந்துவிடும்.
திருக்குறள் (எண் 435) அதிகாரம்: குற்றம் கடிதல்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.