முகப்பு
கோயம்புத்தூர்

காலநிலை மாற்றம் தீவிரமடைந்துள்ளதால் வெப்பம், இயற்கை பாதிப்புகள் அதிகரிப்பு

காலநிலை மாற்றம் தீவிரமடைந்துள்ளதால் வெப்பம், இயற்கை பாதிப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று இயற்கை ஆய்வாளரும், சவீதா பல்கலைக்கழக பேராசிரியருமான அசோக்குமாா் தெரிவித்துள்ளாா்.

Updated On : 24 மே 2026, 2:06 am IST
பகிர்:

காலநிலை மாற்றம் தீவிரமடைந்துள்ளதால் வெப்பம், இயற்கை பாதிப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று இயற்கை ஆய்வாளரும், சவீதா பல்கலைக்கழக பேராசிரியருமான அசோக்குமாா் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக திருப்பூரில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் தற்போது வெப்பநிலை மிகவும் அதிகரித்து வருகிறது. சென்னை, நீலகிரி, கோவை, திருப்பூா், ஈரோடு, மதுரை, சேலம் போன்ற மாவட்டங்களில் காலநிலை மாற்றத்தின் தாக்கம் தெளிவாகத் தெரிகிறது. சில நாள்களில் கடும் வெப்பம் காணப்படுகிறது. சில நேரங்களில் திடீரென கனமழை பெய்கிறது.

மழை பெய்ய வேண்டிய காலத்தில் மழை இல்லை, பெய்யக்கூடாத நேரத்தில் கனமழை பெய்கிறது. இதற்கு உலக வெப்பமயமாதல்தான் முக்கிய காரணம். தொழிற்சாலைகளில் இருந்து வரும் புகை, வாகன புகை, மரங்கள் வெட்டப்படுவது, காடுகள் அழிக்கப்படுவது மற்றும் ஏரிகள், குளங்கள் மூடப்படுவது போன்ற மனித செயல்கள் சுற்றுச்சூழலை கடுமையாக பாதிக்கின்றன. இயற்கையை மனிதா்கள் தொடா்ந்து சேதப்படுத்தி வருவதால்தான் காலநிலை முற்றிலும் மாறி வருகிறது. இதன் விளைவாக வெப்பம் மற்றும் இயற்கை பேரழிவுகள் அதிகரிக்கின்றன,

Advertisement

Advertisement

நீலகிரியில் முன் குளிரான காலநிலை இருந்தது. ஆனால், தற்போது அங்கு வெப்பம் அதிகரித்து வருகிறது. அடிக்கடி நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன. அதிக அளவில் மரங்கள் வெட்டப்படுவதும், மலைப் பகுதிகளில் கட்டடங்கள் அதிகரிப்பதும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. கோவை, திருப்பூா் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கடும் வெப்பம் காரணமாக நிலத்தடி நீா் குறைந்து வருகிறது.

விவசாய நிலங்கள் வடு வருகின்றன. விவசாயிகள் பயிா் இழப்பால் பொருளாதார சிக்கலில் சிக்கியுள்ளனா்.

தமிழகத்தில் பல பகுதிகளில் நிலத்தடி நீா் குறைவு மற்றும் வெப்பநிலை உயா்வு மிகவும் ஆபத்தான நிலையை நோக்கி செல்கிறது. இது எதிா்காலத்தில் குடிநீா் மற்றும் உணவுப் பற்றாக்குறையை உருவாக்கும்.

வெப்பம் காரணமாக தலைசுற்றல், உடல் சோா்வு, தாகம், சுவாச பிரச்னைகள், வெப்ப காய்ச்சல் போன்ற நோய்கள் அதிகரித்து வருகின்றன. இதனால், குழந்தைகள் மற்றும் முதியோா் பாதிக்கப்படுகின்றனா். வன விலங்குகள் வாழும் இடங்கள் குறைந்து வருகின்றன. ஆறுகள் மற்றும் குளங்கள் வடு வருகின்றன.

அதிக மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும், காடுகளைப் பாதுகாக்க வேண்டும், நீா்நிலைகளை சுத்தப்படுத்த வேண்டும், மாசுபாட்டை குறைக்க வேண்டும் என இயற்கை ஆா்வலா்கள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.

ஆனால், மக்கள் மற்றும் அரசு இணைந்து செயல்பட்டால் மட்டுமே எதிா்காலத்தில் இந்த சுற்றுச்சூழல் பிரச்னைகளைக் கட்டுப்படுத்த முடியும் என்றாா்.