முகப்பு
தலையங்கம்

வேடிக்கை பார்க்கும் 'ஆம் ஆத்மி'!

ஆம் ஆத்மி கட்சியின் பத்து மாநிலங்களவை உறுப்பினர்களில் ஏழு பேர் விலகி பாஜகவில் இணைந்து இருப்பது கட்சித்தாவல் தடைச் சட்டம் குறித்த விவாதத்தை மீண்டும் எழுப்பியிருக்கிறது.

Updated On : 1 மே, 2026 at 6:57 AM
தில்லி பாஜக தலைமையகத்தில் ராகவ் சத்தா உள்ளிட்ட பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்களுக்கு இனிப்பு ஊட்டி வரவேற்ற பாஜக தேசிய தலைவா் நிதின் நபின்.
பகிர்:

ஆம் ஆத்மி கட்சியின் பத்து மாநிலங்களவை உறுப்பினர்களில் ஏழு பேர் விலகி பாஜகவில் இணைந்து இருப்பது கட்சித்தாவல் தடைச் சட்டம் குறித்த விவாதத்தை மீண்டும் எழுப்பியிருக்கிறது. மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஒரே நேரத்தில் ஒரு குழுவாக விலகும்போது அதை "பிளவு' என்று கருத வேண்டும் என்கிற கருத்துக்கு வலிமை சேர்த்திருக்கிறது

மாநிலங்களவைத் தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணனின் முடிவு. தலைநகர் தில்லிக்கு வெளியே, ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர் ராகவ் சத்தா. குறிப்பாக, பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி அசுர வளர்ச்சி அடைந்தபோது கட்சியின் அடுத்த தலைமுறை தலைவராக ராகவ் சத்தா பார்க்கப்பட்டார். தலைமையின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்த ராகவ் சத்தா கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் இருந்து அதிரடியாக அகற்றப்பட்டபோது அவர் அதை சகித்துக் கொள்வார் என்று தலைமை எதிர்பார்த்தது தவறு. மாநிலங்களவை கட்சியின் துணைத் தலைவர் பதவியில் இருந்து அவர் அகற்றப்பட்ட போது உள்கட்சி மோதல் விஸ்வரூபம் எடுத்துவிட்டது. முக்கியப் பொறுப்புகளில் இருந்த ஒருவர் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்படும்போது அதிகார போட்டி ஆரம்பித்து விடுகிறது. அதன் அடுத்த கட்டமாக அதிருப்தியாளர்கள் ஒருங்கிணைவதும், கட்சித் தலைமைக்கு எதிராகப் போர்க் கொடி தூக்குவதும் அல்லது பிளவை ஏற்படுத்துவதும் தவிர்க்க முடியாதவை.

கட்சியிலிருந்து விலகி இருக்கும் ஏழு மாநிலங்களவை உறுப்பினர்களும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அதன் தாக்கம் கட்சியின் நாடாளுமன்ற பலத்தில் மட்டுமல்ல, தொடர்ந்து நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் எதிரொலிக்கக்கூடும்.

Advertisement

உள்கட்சி ஜனநாயகத்துக்கு இடம் அளிக்காமல் வலிமையான ஒற்றைத் தலைமையை உருவாக்க அரவிந்த் கேஜரிவால் நினைத்ததால்தான் கட்சியின்ஆரம்பகால தலைவர்களான யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண், கிரண் பேடி உள்ளிட்டவர்கள் தொடக்கத்திலேயே விலகிவிட்டனர். இப்போது, ராகவ் சத்தா பிளவுக்கு வழிகோலி இருக்கிறார்.

2024 -இல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைந்தது முதல் பல அரசியல் கட்சிகளில் பிளவுகள் ஏற்பட்டு இருக்கின்றன. அதன் பின்னணியில் சிபிஐ, அமலாக்கத் துறை உள்ளிட்டவற்றின் அழுத்தம் இருந்திருக்கிறது என்பதை மறுப்பதற்கு இல்லை. அதை மட்டுமே பிளவுக்கும், அவர்கள் பாஜகவில் ஐக்கியமானதற்கும் காரணமாக்கிவிட முடியாது. கட்சித் தலைமையின் புறக்கணிப்பால் ஏற்படும் அதிருப்திதான் ஆளுங்கட்சியை நோக்கி அவர்களை நகர்த்துகிறது என்பதையும் குறிப்பிட வேண்டும்.

கட்சியில் பிளவு, கட்சித் தாவல் உள்ளிட்டவை ஜனநாயகத்தில் புதிதொன்றும் அல்ல. பிரிட்டிஷ் நாடாளுமன்ற வரலாற்றில் வின்ஸ்டன் சர்ச்சில், ராம்úஸ மெக்டொனால்ட், வில்லியம் கிளாட்ஸ்டோன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கட்சித் தலைமையுடனான கருத்து வேறுபாடு காரணமாக அணி மாறி இருக்கிறார்கள். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகளிலும் பல ஐரோப்பிய நாடாளுமன்றங்களிலும் கட்சிகளில் பிளவு நிகழ்ந்திருக்கிறது.

அரசியல் சாசனமன்றத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் அரசியல் கட்சிகள் குறித்துப் பேசவில்லை. கட்சிகளின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவர்கள் மக்கள் பிரதிநிதிகள்தான் என்கிற வாதம் கே.பி.ஷா, ஷிபன்லால் சக்சேனா உள்ளிட்டவர்களால் சுட்டிக்காட்டப்பட்டது. கட்சித் தலைமை தவறான முடிவுகளை எடுப்பதாக கருதும் போதும் தங்களுக்கு வாக்களித்த வாக்காளர்களின் நலனுக்கு எதிராக செயல்படும்போதும் அதை தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் அங்கீகரிப்பது முறைதானா என்றும் சிலர் கேள்வி எழுப்பினர்.

1967 முதல் 1983 வரையில் மாநில சட்டப்பேரவைகளில் 2,700 கட்சித் தாவல்கள் நடந்திருக்கின்றன. அப்படி கட்சி மாறிய 210 பேரில் 116 பேர் அமைச்சர்களாகி இருக்கிறார்கள். ஹரியாணா சட்டப்பேரவை உறுப்பினர் கயா லால் என்பவர் ஒரே நாளில் மூன்று முறை கட்சி மாறியதைத் தொடர்ந்து, கட்சி மாறுபவர்களை "ஹயா ராம், கயா ராம்' என்று கேலி செய்யும் வழக்கம் உள்ளது.

1985 -இல் 52 -ஆவது அரசியல் சாசன திருத்தச் சட்டத்தின் மூலம் கட்சித் தாவல் தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஓர் உறுப்பினர் தானாக விலகினாலோ, கட்சியின் அறிவுறுத்தலுக்கு எதிராக வாக்களித்தாலோ அல்லது வாக்களிக்கப்பதைத் தவிர்த்தாலோ அவர் பதவி நீக்கம் செய்யப்படுவார் என்கிறது அந்தச் சட்டத்தின் 10 -ஆவது உட்பிரிவு. ஒரு கட்சியில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் ஒரே நேரத்தில் முழுவதுமாக விலகினாலோ, கட்சி இன்னொரு கட்சியில் இணைந்தாலோ அந்தச் சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. 2003 -இல் கொண்டுவரப்பட்ட 91 -ஆவது அரசியல் சாசன திருத்தத்தின்படி மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் குழுவாக விலகினால்தான் பிளவாகக் கருதப்படும் என்கிறது அந்தச் சட்டத் திருத்தத்தின் துணைப் பிரிவு 2. ஆம் ஆத்மி கட்சியின் ஏழு மாநிலங்களவை உறுப்பினர்கள் மூன்றில் இரண்டு பங்கு பலம் இருப்பதால் பிளவை ஏற்படுத்தி, பாஜகவில் இணைந்திருக்கிறார்கள். உள்கட்சி ஜனநாயகம் இல்லாமல் போனால் கட்சிகள் பிளவுபடும் என்பதை வரலாறு மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறது. வாக்களித்த ஆம் ஆத்மி (பொது ஜனம்) இதையெல்லாம் மெüனமாக வேடிக்கை பார்ப்பதைத் தவிர வேறு வழியில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.