கல்வி

அதிக பணம் செலவழித்து எப்படி வெளிநாட்டில் மருத்துவப் படிப்பில் சேர முடிகிறது?

DIN

குறைவாக மதிப்பெண் எடுப்பவர்கள் வெளிநாட்டில் அதிக பணம் செலவழித்து மருத்துவப்படிப்பில் எப்படி சேர முடிகிறது என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் மருத்துவர் தாமரைச்செல்வன் என்பவர் தாக்கல் செய்த மனு விவரம்: நான் மேற்கிந்திய தீவில் கடந்த 2011-ல் மருத்துவப் படிப்பை முடித்தேன். இந்தியாவில் மருத்துவ தொழில் புரிவதற்கான தேர்வு எழுதி, கடந்த 2016-இல் தேர்ச்சி பெற்றுள்ளேன். என்னை தமிழகத்தில் மருத்துவராக பதிவு செய்வதற்காக உரிய பயிற்சிக்கு அனுமதிக்கக் கோரி தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில், கடந்த பிப்ரவரி 13-இல் விண்ணப்பித்தேன். ஆனால் எனது விண்ணப்பம் இதுவரை பரிசீலிக்கப்படவில்லை.
இதனால் என்னால் மருத்துவராக தொழில் செய்ய முடியவில்லை என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு வருமாறு: மனுதாரர் மீண்டும் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும். அந்த மனுவை தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் 2 வாரத்துக்குள் பரிசீலித்து தகுந்த முடிவு எடுக்க வேண்டும்.
மதிப்பெண் குறைவாக எடுத்தாலும்...: தமிழகத்தில் 90 சதவீதத்துக்கும் மேலாக மதிப்பெண் எடுத்தால் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர முடியும். ஆனால் மனுதாரர் 77.8 சதவீதம்தான் மதிப்பெண் எடுத்துள்ளார். இதுபோல குறைவாக மதிப்பெண் எடுப்பவர்கள் வெளிநாட்டில் அதிக பணம் செலவழித்து மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு, மத்திய அரசு நடத்தும் ஒரு தகுதித் தேர்வை எழுதி விட்டு இந்தியாவில் தடையின்றி மருத்துவம் பார்க்கின்றனர். பணத்தை செலவழித்து டாக்டராகும் குறைந்த மதிப்பெண் பெறுபவர்களையும், அதிக மதிப்பெண்ணில் இந்தியாவில் டாக்டராகும் நபர்களையும் இந்த அரசும், சமூகமும் ஒரே அளவுகோளுடன்தான் பார்க்கிறது. அவர்களை வேறுபடுத்திப் பார்ப்பதில்லை.
உயிரோடு விளையாடக் கூடாது: ஆனால், வெளிநாடுகளில் பணத்தை வாரியிறைத்து டாக்டராகும் நபர்கள் மூலமாக இந்திய மக்களின் உயிரோடு மத்திய, மாநில அரசுகள் ஒருபோதும் விளையாடக்கூடாது. இந்தியாவுக்கு அதிகமான டாக்டர்கள் தேவைதான். ஆனால் அதே நேரம் அவர்கள் தகுதியானவர்களாக இருக்க வேண்டும். மருத்துவத்தை ஒருபோதும் வணிகமாக்கக்கூடாது.
கேள்விகளுக்குப் பதில் கிடைக்குமா? எனவே, கடந்த 10 ஆண்டுகளில் வெளிநாடுகளில் டாக்டர் படிப்பை முடித்துவிட்டு எத்தனை பேர் இந்தியாவில் தகுதித் தேர்வு எழுதி உள்ளனர்? அதில் எத்தனை பேர் இந்தியாவில் டாக்டராக தொழில் புரிகின்றனர்? குறைவாக மதிப்பெண் பெற்றவர்கள் வெளிநாடுகளில் இதுபோல டாக்டர் பட்டத்தை பெற்று வருவது மத்திய, மாநில அரசுகளுக்கு தெரியாதா? தகுதியில்லாதவர்களைக் கொண்டு பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பது என்பது பொதுநலனுக்கு விரோதமானது இல்லையா?.
எனவே, இந்தியாவிற்கு இன்னும் எத்தனை டாக்டர்கள் தேவை, தற்போது எத்தனை டாக்டர்கள் உள்ளனர் என்பது உள்ளிட்ட 14 கேள்விகளுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஏப்.10-க்கு ஒத்திவைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT