நீட் மறுதேர்வு! நெல்லைக்கு ஹெலிகாப்டரில் வந்த வினாத்தாள்கள்!
நீட் மறுதேர்வை முன்னிட்டு நெல்லைக்கு ஹெலிகாப்டரில் வந்த வினாத்தாள்களால் பரபரப்பு
ஜூன் 21-ந்தேதி நடைபெறும் நீட் மறு தேர்வுக்காக ஹெலிகாப்டரில் வினாத்தாள்கள் வந்தன. ஆயுதப்படை வளாகத்தில் வினாத்தாளுடன் வந்த ஹெலிகாப்டர் தரையிறங்கியது.
தேசிய தேர்வு முகமை அறிவிப்பின்படி, இளநிலை மருத்துவ படிப்புகளுக்காக மாணவர்களுக்கு நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த மே மாதம் 3-ந்தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்ட தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து மறுதேர்வு அறிவிக்கப்பட்டது.
அதன்படி நீட் தேர்வுக்காக விண்ணப்பித்திருந்த மறுதேர்வு வருகிற 21-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற உள்ளது. இதனையொட்டி நெல்லை மாவட்டத்தில் மையங்களை தயார் செய்யும் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement
முறைகேடுகளை தடுக்க பல்வேறு வழிகாட்டுதல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நெல்லை மாநகர பகுதியில் இன்று காலை வானில் ஹெலிகாப்டர் ஒன்று வட்டமடித்தது. தாழ்வாக பறந்த அந்த ஹெலிகாப்டர் மாநகர பகுதிகளான கே.டி.சி. நகர், அரசு பல்நோக்கு மருத்துவமனை, ஐகிரவுண்டு பழைய மருத்துவமனை, பாளையங்கோட்டை பேருந்து நிலையம் பகுதிகளில் வட்டமிட்டுள்ளது.
இதனை அந்த பகுதிகளில் இருந்த மக்கள் ஒருவித அச்சத்துடன் பார்த்தனர். இந்த நிலையில் அந்த ஹெலிகாப்டர் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் தரை இறங்கியது.
விசாரணையில் அந்த ஹெலிகாப்டர் மூலம் நீட் மறுதேர்வுக்கான வினாத்தாள்கள் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.