முகப்பு
தமிழ்நாடு

மாநில நலனையும் பலி கொடுக்கத் துணிந்துவிட்டார் பழனிசாமி: சு.வெங்கடேசன் எம்.பி.

கட்சியைப் போலவே, மாநில நலனையும் எடப்பாடி பழனிசாமி பலி கொடுக்கத் துணிந்துவிட்டதாக சு. வெங்கடேசன் எம்பி குற்றம்சாட்டியுள்ளதைப் பற்றி...

Updated On : 15 ஏப்ரல் 2026, 10:40 am IST
பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி.
பகிர்:

கட்சியைப் போலவே, மாநில நலனையும் எடப்பாடி பழனிசாமி பலி கொடுக்கத் துணிந்துவிட்டதாக சு. வெங்கடேசன் எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் சு. வெங்கடேசன் எம்.பி. பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “நாளை (ஏப். 16) நடைபெறும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படவுள்ள அரசியலமைப்பு (131-வது திருத்தம்) மசோதா- 2026 நாம் அனைவரும் அஞ்சியதை விட மிகவும் ஆபத்தான அம்சங்களைக் கொண்டுள்ளது.

Advertisement

Advertisement

“பிரதமர் மற்றும் அமைச்சர்களின் உறுதிமொழிக்கு மாறாக, ஒவ்வொரு மாநிலத்திற்குமான தற்போதைய இடங்களின் விகிதாச்சாரம் பராமரிக்கப்படும் என்பதை உறுதிசெய்ய இம்மசோதாவில் ஒரு வரி கூட இல்லை.”

மக்கள் விரோத பா.ஜ.க.வைத் தலையில் வைத்துத் தூக்கித் திரியும் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் 25-வது வாக்குறுதியில் கீழ்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

"தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டிற்கான தற்போதுள்ள விகிதாசார பிரதிநிதித்துவம் குறைந்துவிடாமல் இருக்க தொடர்ந்து வலியுறுத்துவோம்."

தற்போதைய இடங்களின் விகிதாசாரம் பராமரிக்கப்படும் என்பதை உறுதிசெய்யாத இம்மசோதாவிற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி ஆவேச அறிக்கை ஒன்றை இந்நேரம் வெளியிட்டிருக்க வேண்டும். தங்களது மாநிலங்களவை உறுப்பினர்கள் இம்மசோதா நகலைக் கிழித்தெறிய இந்நேரம் உத்தரவிட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படியெதுவும் நடந்ததாக தெரியவில்லை.

அவரின் அமைதி நமக்கு உணர்த்துவது ஒன்றுதான். கட்சியைப் பா.ஜ.க.விடம் அடகுவைத்துச் சரணடைந்ததைப் போல இப்போது நம் மாநில நலனையும் பலி கொடுக்கத் துணிந்துவிட்டார் என்பதே அவரது அமைதிக்கான அர்த்தம்” எனக் காட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543-ல் இருந்து 850-ஆக உயர்த்தும் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நாளை(ஏப்.16) அறிமுகப்படுத்தவுள்ளது.

மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கும் 106-ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் 2023-ஐ அமல்படுத்துவதற்கான சட்டத் திருத்த மசோதா ஏப்.16 முதல் ஏப்.18 வரை நடைபெறவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அறிமுகமாகவுள்ளது.

அப்போது மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 850-ஆக அதிகரிக்கப்பட்டு அதில் 280 தொகுதிகள் மகளிருக்கு ஒதுக்கப்படவுள்ளன. 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்யப்படுவதால், தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் இருந்து 31 தொகுதிகள் வரை குறையும் என்ற அச்சமும் எழுந்திருக்கிறது.

அதிக மக்கள் தொகை கொண்ட வட மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதாலும், தென் மாநிலங்களில் தொகுதிகளில் எண்ணிக்கை குறையும் என்ற அச்சம் எழுந்துள்ளதால், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம், “தமிழ்நாட்டில் மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை 58 ஆக உயரும் என்பது ஒரு மாயை. உயர்த்துவது போல் உயர்த்திவிட்டு பிறகு தொகுதி எண்ணிக்கையை 46 ஆக குறைத்துவிடுவார்கள். தென் மாநிலங்களில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கையே 24.3%-ல் இருந்து 20.7% ஆக குறையும்” என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

summary

MP Su. Venkatesan has alleged that Edappadi Palaniswami has dared to sacrifice the state's interests, just as he did with the party.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.