முகப்பு
செய்திகள்

உக்ரைன், அமெரிக்கா சரி... மீனவர் பிரச்னையில் இலங்கையிடம் மெளனம் ஏன்?

மீனவர்கள் கைது விவகாரத்தில் பிரதமர் மோடி மெளன குருவாக இருப்பதாக மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளது குறித்து...

Updated On : 12 ஏப்ரல், 2026 at 6:39 PM
மு.க. ஸ்டாலின் / நரேந்திர மோடி - எக்ஸ்
பகிர்:
Updated On : 12 ஏப்ரல், 2026 at 6:33 PM

உக்ரைன் போர் விவகாரம், அமெரிக்க விவகாரங்களில் விஸ்வகுருவாக இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, மீனவர் பிரச்னையில் இலங்கையிடம் மெளகுருவாக இருக்கிறார் என முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

நம் கையை எடுத்து நம் கண்ணை குத்தும் விதமாக அதிமுகவை கையிலெடுத்துள்ளது பாஜக என்றும், பாஜகவை தமிழ்நாட்டிற்கு அழைத்துவரும் பல்லக்குத் தூக்கிதான் பழனிசாமி எனவும் விமர்சித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மு.க. ஸ்டாலின் இன்று (ஏப். 12) பிரசாரத்தில் ஈடுபட்டார்.

Advertisement

பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

''தமிழ்நாட்டு தேர்தல் நாட்டுக்கே முக்கியமான தேர்தல். பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி. சமத்துவம், சகோதரத்துவம், பன்முகத்தன்மை மீது விழும் மரண அடி.

நாம் என்ன பேச வேண்டும், என்ன உணவு உண்ன வேண்டும் என்பதை முடிவு செய்வதாக உள்ளது பாஜக. அதனை உள்ளே வர விடலாமா?

பொது சிவில் சட்டம் மூலம் பாஜக நமது பன்முகத்தன்மைக்கு நேரடி சவால் விட்டுள்ளது. மதவாத கும்பல் தமிழ்நாட்டை ஆக்கிரமிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அண்ணா, கருணாநிதி கட்டிக்காத்த கோட்டையை மதவாத சக்திகள் ஆக்கிரமிக்க விடமாட்டோம்

அது பாஜகவுக்கும் தெரியும். அதனால்தான், நம் கையை எடுத்து நம் கண்ணை குத்தும் விதமாக அதிமுகவை கையில் எடுத்துள்ளது பாஜக. பாஜகவை தமிழ்நாட்டிற்கு அழைத்துவரும் பல்லக்குத் தூக்கிதான் பழனிசாமி.

மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற பாஜகவை ஒருநாளாவது பழனிசாமி கண்டித்துள்ளாரா? தொகுதி மறுசீரமைப்பு திட்டத்தை கண்டித்து தமிழ்நாட்டின் நலனுக்காக ஒருவார்த்தையாவது அவர் பேசியிருக்கிறாரா? பொது சிவில் சட்டத்தில் எடப்பாடியின் நிலைப்பாடு என்ன?

காலில் விழுந்து காலை வாரிவிட்ட பழனிசாமி, சொந்த மக்களுக்கே துரோகம் செய்கிறார். பழனிசாமியின் 4 ஆண்டுகால ஆட்சி, தமிழ்நாட்டின் இருண்ட காலம்.

தன்னுடைய தவறுகளில் இருந்து தப்பிக்க எடப்பாடி பழனிசாமி சென்று சேர்ந்த இடம்தான் பாஜக வாஷிங் மெஷின். தமிழ்நாட்டை வட்டமிடும் பாஜக என்னும் பருந்தை விரட்டி அடிக்க வேண்டும்.

உக்ரைன் போரை நிறுத்திவிட்டேன். அமெரிக்காவை அலரவிட்டேன் எனக் கூறும் பிரதமர் மோடி தமிழக மீனவர்கள் கைது விவகாரத்தில் இலங்கையிடம் மெளன குருவாக உள்ளார். தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவதை அவரால் தட்டிக்கேட்க முடியவில்லை'' என மு.க. ஸ்டாலின் விமர்சித்தார்.

summary

why the silence towards Sri Lanka regarding the fishermen's issue MK Stalin question to PM narendra modi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.