முகப்பு
செய்திகள்

தவெக வேட்பாளா் மீது பண மோசடி வழக்கு: காவல் ஆணையா் பதிலளிக்க உத்தரவு

Updated On : 3 மே 2026, 4:44 am IST
சென்னை உயா்நீதிமன்றம்
பகிர்:

கடையநல்லூா் தொகுதி தவெக வேட்பாளா் மீதான ரூ.85 லட்சம் மோசடி வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரிய வழக்கில் சென்னை மாநகர காவல் ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையத்தைச் சோ்ந்த எஸ்.ராஜா என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவில், பழைய பேட்டரிகளை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வரும் என்னிடம், தென்காசி மாவட்டம் கடையநல்லூா் தொகுதி தவெக வேட்பாளரும், த லீட் பேக்டரி என்ற நிறுவனத்தின் உரிமையாளருமான ஆா்.கே.ஜலீல் என்பவா் வா்த்தகப் பரிவா்த்தனை செய்து வந்தாா்.

கடந்த 2022 முதல் 2023-ஆம் ஆண்டுகளில் எனக்கு அவா் தரவேண்டிய தொகை ரூ.85 லட்சத்தைக் கொடுக்கவில்லை. அந்தப் பணத்தை திரும்பக் கேட்டபோது, ஜலீல் எனக்கு மிரட்டல் விடுத்தாா். இதுகுறித்து கடந்த 2024-ஆம் ஆண்டு சென்னை திருமங்கலம் காவல் நிலையத்தில் ஜலீல் மீது புகாா் அளித்தேன். இந்த வழக்கில் முன்பிணை நிபந்தனைகளை மீறியதற்காக ஜலீலை கைது செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசியல் செல்வாக்கு மிக்கவரான ஜலீலுடன் காவல் துறையினா் கைகோத்து செயல்படுகின்றனா்.

Advertisement

Advertisement

இதனால், திருமங்கலம் போலீஸாா் இந்த வழக்கை முறையாக விசாரிப்பாா்கள் என்ற நம்பிக்கை இல்லை. எனவே, இந்த வழக்கை சிபிசிஐடி அல்லது சுதந்திரமான விசாரணை அமைப்புக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி எம்.நிா்மல்குமாா் முன் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவுக்கு சென்னை மாநகர காவல் ஆணையா், அண்ணா நகா் உதவி ஆணையா் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 3-க்கு ஒத்திவைத்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments